Advertisement

அவள் தான் அன்னை மகாசக்தி:இன்று அன்னை சாரதாதேவி பிறந்தநாள்

மற்றவர்களின் துன்பமும், துயரமும் சாரதாதேவியாரின் இதயத்தில்அப்படியே ஊடுருவும் அளவிற்கு அவரது உள்ளம் மென்மையானது. அவரது வார்த்தைகள் ஒரு நாளும் வீண் போனதில்லை. இதை அவரது வாழ்க்கையிலிருந்து அறியலாம்.
சாரதாதேவியின் பக்தர்களில் ஒருவர் துருவ சரித்திரம் என்ற நாடகத்தை எழுதியிருந்தார். அதை அவர் தேவியாருக்கு அனுப்பியிருந்தார். ஒருவர் அதை படிக்க, தேவியாரும் பக்தர்களும் கேட்க துவங்கினர். சிறிது நேரத்தில் அந்த நாடகத்தில் ஒரு சோக காட்சி வந்தது. அதில் தன் தந்தையின் மடியில் துருவன் அமர முயற்சி செய்கிறான். அப்போது அருகில் இருந்த துருவனின் சிற்றன்னை அவனை கடுமையாக திட்டுகிறாள்.
துருவன் அழுதபடி ஓடி வந்து, இந்த விவரத்தை தன் தாயிடம் சொல்கிறான். இருவரும் அழுகின்றனர். இதை கேட்ட சாரதாதேவியாரும் அழுது விட்டார். இதனால் நாடகத்தை படித்தவர் அதை நிறுத்த நேர்ந்தது. பின் நாடகம் படிப்பது தொடர்ந்தது. சிறுவனான துருவன் தவம் செய்ய காட்டிற்கு புறப்படுகிறான். அவர் தாயோ தடுத்து நிறுத்தி, ''நீ காட்டிற்கு சென்று விட்டால் நான் அனாதையாகி விடுவேன்,'' என அழுகிறாள். இதை கேட்டதும் சாரதாதேவியார் மீண்டும் அழத் துவங்கினார். அவரது துன்ப உணர்வுகளை நேரில் பார்த்தவர்கள் வியப்பமுற்றனர்.
வீண் போகாத வார்த்தைகள்:சாரதாதேவியாரின் வார்த்தைகள் ஒரு போதும் வீணாகாது என்று மகேந்திரநாத் குப்தர் கூறியிருக்கிறார். அதை ெவளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி அவரது வாழ்வில் நடந்தது. அவரது பக்தர்களில் ஒருவர் நிர்மல் சந்திர கோஸ்வாமி. அவர் சாரதா தேவியாரிட மிருந்து சிறந்த சந்நியாசம் பெற விரும்பினார். அவரோ, ''இல்லை. உனக்குரிய பாதை சந்நியாசம் அல்ல.
நீ திருமணம் செய்து கொள். உன் குடும்பத்திலிருந்து ஒருவரல்ல. பலர் மடத்தில் சேருவார்கள்,'' என்றார். அவர் கூறியபடி கோஸ்வாமி திருமணம் செய்தார். அவரது மகன் பிற்காலத்தில் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து உயர்ந்த ஒரு சந்நியாசி ஆனார். அவரது சகோதரியின் மகனும் மடத்தில் சேர்ந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கோஸ்வாமியின் மகன் பேலுார் மடம் மருத்துவ பிரிவில் டாக்டராக பணிபுரிந்தார்.பேலுார் மடத்தில் முதல் பூஜை கங்கை நதிக் கரையில் பேலுார் ராமகிருஷ்ண மடம் கட்டி முடியும் நிலையில் இருந்தது. ஒரு நாள் சாரதா தேவி அங்கு சென்றார். ராமகிருஷ்ணரின் துறவு பிள்ளைகளுக்கென்று ஒரு இடம் அமைந்ததை பார்த்து மிகவும் மகிழ்ந்தார். அவர் அங்குள்ள ஓர் அறையை பார்த்து தானே பெருக்கி கழுவினார். பின்தன்னிடம் எப்போதும் இருக்கும் ராமகிருஷ்ணரின் படத்தை அங்கு வைத்து பூஜை செய்தார். இந்த மடத்தில் முதல் பூஜை அவரால் துவக்கப்பட்டது.
மடத்தில் நடந்த முதலாண்டு துர்க்கா பூஜையும் விசேஷமானது. 1912ல் சாரதா தேவியார் போதன் துர்க்கா பூஜையின் முதல் நாளான போதன் திருநாளன்று துர்க்கா பூஜையில் கலந்து கொள்ள பேலுார் மடம் சென்றார். சுவாமி பிரம்மானந்தரின் தலைமையில் சந்நியாசிகளும் பக்தர்களும் அவர் வந்த வண்டியின் குதிரைகளை அவிழ்த்து விட்டுவண்டியை இழுத்து சென்றனர்.
சுவாமி பிரம்மானந்தர் அவரது திருவடிகளில் 108 தாமரை மலர்களை வைத்து வழிபட்டார். அவரது பக்தர்களில் ஒருவர் டாக்டர் கஞ்ஜிலால். துர்க்கா பூஜையின் சம்பிரதாயத்திற்கு ஏற்ப விஜயதசமி முடிவில் துர்க்கையின் திருவுருவ சிலையை கங்கையில் விடும்முன்பு, முகத்தை பலவாறாக ெநளித்து, சுளித்து ஆடிக்காட்டியதை அவர் ரசித்தார்.
துாய்மையான உணர்வு:ஒரு குளிர்காலத்தில் சாரதாதேவியார் ஜெயராம்பாடியில் இருந்தார். சமையல்கார பெண் அவரிடம் சென்றார். அவர், ''அம்மா நான் ஒரு நாயை தொட்டு விட்டேன். அதனால் நான் உடனே குளிக்கப் போகிறேன்,'' என்றார். அந்த காலத்தில் சமையல் செய்யும் ஒரு பிரிவினர் சுத்தமாக இருந்து சமையல் செய்வது வழக்கம். ஆனால் சாரதாதேவியார், ''இப்போது இரவு நீண்ட நேரமாகி விட்டதால் நீ குளிக்கத் தேவையில்லை. கை கால்களை மட்டும் கழுவிக் கொண்டு நீ உன் உடைகளை மாற்றிக் கொள் போதும்,'' என்றார்.
''அது எப்படி சரியாகும்,'' என அந்த பெண் கேள்வி எழுப்பினார். அதற்கு சாரதாதேவியார், ''அப்படியானால் கங்கைநீரை உன் மீது ெதளித்து கொள்,'' என்றார். அப்படி கூறியும் அந்த பெண்ணின் சந்தேகம் விடவில்லை. இறுதியில் அன்னையார், 'சரி என்னை தொடு'' என்றார். எல்லையற்ற சாரதாதேவியாரின் ஸ்பரிசத்தை பெற்றவுடன் தான் துாய்மையடைந்ததை அந்த பெண் உணர்ந்தார்.
உலகை தன் ஆன்மிக சக்தியால் உலுக்கிய சுவாமி விவேகானந்தர் சாரதாதேவியாரின் முன்னாள் வரும் போது ஒரு குழந்தையாகி விடுவார். மலை போல் கம்பீரம் பொருந்திய சுவாமிஜி தேவியாரின் முன் பணிவுடன் பேச்சற்று நின்று விடுவார். அன்னை சாரதாதேவியார் ஆதி பராசக்தியே என்பதில் விவேகானந்தருக்கு நம்பிக்கை இருந்தது.அன்னை என்ற மகாசக்திஅவரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
சாரதாதேவியார் என்பவர் யார்? அவரது வாழ்க்கையின் உட்பொருளை யாரும் புரிந்து கொள்ளவில்லை. சக்தி இல்லாமல் உலகில் முன்னேற்றம் ஏற்படாது. நமது நாடு அனைத்து நாடுகளில் கடைசியில் இருப்பது ஏன். பலம் இழந்து கிடப்பது ஏன். நாட்டில் சக்தி அவமானப்படுத்தப்படுவதால் நாடு பின்தங்கிய நிலையில் இருக்கிறது. அந்த மகாசக்தியை மீண்டும் எழச்செய்வதற்காக சாரதாதேவியார் தோன்றியிருக்கிறார். சக்தியின் அருள் இல்லாமல் என்ன சாதிக்க முடியும். இதுகுறித்து சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா விலிருந்த போது தன் சகோதர சீடர் சுவாமி சிவானந்தருக்கு 1894ல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவற்றை பார்க்கும் போது சாரதாதேவியார் மீது அவர் கொண்டிருந்த பக்தியையும் மரியாதையையும் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.மதுரையில் சாரதாதேவியார்
1911 மார்ச் 12ல் சாரதாதேவியார் மதுரைக்கு வந்தார். அப்போது அவர் மதுரை நகரசபை தலைவர் வீட்டில் தங்கினார். தற்போது மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலையில் 145 எண்ணில் அந்த வீடுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் தரிசனத்திற்கு சென்ற சாரதாதேவியார், விதிமுறைப்படி பொற்றாமரை குளத்தில் நீராடினார்.
பின் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தார். பொற்றாமரை குளத்தில் அகல் விளக்குகள் ஏற்றி வைத்தார். அவருடன் வந்தவர்களும் விளக்குகளை ஏற்றினர். திருமலை நாயக்கர் மகால், மாரியம்மன் தெப்பக்குளம், அதன் நடுவில் இருக்கும் மண்டபத்திற் கும் சென்றார். ராமேஸ்வரம் சென்று திரும்பி வரும் வழியில் இரண்டாம் முறை யாக 1911 மார்ச் 16ல் மதுரை வந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். மறுநாள் சென்னைக்கு புறப்பட்டார்.
-சுவாமி கமலாத்மானந்தர்,தலைவர், ராமகிருஷ்ண மடம்,மதுரை. 0452-268 0224.madurairkmgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement