Advertisement

காதுகளை திருடும் கானங்கள்

அண்மையில் உத்தமபாளையத்தில் இருந்து மதுரைக்கு பேருந்துப் பயணம். அதிக வேகம், பாட்டு, 'டிவி' சத்தத்திற்குப் பயந்து பெரும்பாலும் தனியார் பேருந்துகளில் செல்வதில்லை. ராமேஸ்வரம் செல்லும் ஓர் அரசுப் பேருந்தில் ஏறி விட்டேன். பராமரிப்பு இல்லாத பேருந்து எழுப்பிய சத்தத்துடன், அதிலும் பாட்டுச் சத்தமும் சேர்ந்து காதுகளுக்கு இமைகள் இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கமே ஏற்பட்டது.

இரண்டு முறை நடத்துநரிடம் சத்தத்தைக் குறைக்க கேட்டுக் கொண்டேன். அவர் கண்டு கொள்ளவே இல்லை. இரண்டரை மணிநேர இரைச்சல் பயணம் முடிந்து மதுரையில் இறங்கும்போது தலைவலி ஆரம்பித்து விட்டது."இசை கேட்டால் புவி அசைந்தாடும்” என்பது ஓர் அனுபவ உண்மைதான். ஆனால், இதயத்தை வருடும் இதமான இசையுடன் சிந்தையில் நிறையும் கருத்துக்களை ஏந்தி இன்று காதுகளுக்கு வரும் கானங்கள் மிகக்குறைவு. வெற்றுக் கத்தல்களும், வேட்டுச் சந்தங்களுமா பாடல்கள்?

குத்துப்பாடல்கள் மண்ணின் மணத்தோடும் கதையோடும் மக்களுக்கு வாழும் நெறிகள் சொன்ன கூத்துப் பாடல்கள் ஒலித்த மண்ணில் இன்று குத்துப்பாடல்கள்.
"இசையால் வசமாகா இதயமெது?” பாடல்வரி ஓர் இயற்கை தரிசனம்தான். "ஏழிசையாய் இசைப்பயனாய் என்னுடைய தோழனுமாய்..” என்று இறைவனையே இசையாய் கொண்டாடும் மரபு தமிழருக்கு உண்டு.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சேக் சின்ன மவுலானாவின் நாதஸ்வர இசைக்கச்சேரி. ஆன்மிகப் சொற்பொழிவாற்ற வருகை தந்த கிருபானந்த வாரியார் சுவாமிகள், மவுலானா கச்சேரியை ரசிக்க முதல் ஆளாய் முன் வரிசையில் அமர்ந்து விட்டார். கச்சேரியின் இறுதிப் பகுதியில் பக்க மேளமின்றி மவுலானா மட்டும் வாசிக்கும் ராக ஆலாபனை, ஊனுருக உள்ளுருகச் செய்யும். அந்த நாதஸ்வர ஆலாபனையில் கசிந்து கண்ணீர் மல்கி வாரியார் சுவாமிகள் லயித்திருக்க, அவரது கண்கள் பொழிந்த கண்ணீர் மேனியில் பூசப்பட்ட திருநீற்றில் கலந்து கரைந்து நின்ற காட்சியை நேரில் கண்ட ஒரு பெருமகனார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எல்லை கடந்த இசை :இசை எல்லா மனித எல்லைகளையும் கடந்து நிற்கும் ஆற்றல் பெற்றது! ஜெர்மனியில் பெர்லின் நகரில் ஓர் இசை அரங்கு நிரம்பி வழிகிறது. முன்வரிசையில் அன்றைய உலகப் புகழ்பெற்ற இசைமேதைகள் பிராம்சு, பாச், பீத்தோவான் போன்றவர்களுடன் விஞ்ஞானி ஐன்ஸ்டீனும் அமர்ந்துள்ளார். பிரபலங்களின் வருகை அங்கு நடக்கப் போகும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் இசைக்கலைஞன் யார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்த, 12 வயது சிறுவன் யஹதி மெனுஹின் கையில் வயலினோடு மேடை ஏறுகிறான். அரங்கு நிறைந்த கைதட்டல் அவனை வரவேற்க, வயலினை வாசிக்க ஆரம்பிக்கிறான். மொத்த அரங்கும் அச்சிறுவனின் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கிறது.இசையில் தன்னை இழந்து உணர்வு வசப்பட்ட ஐன்ஸ்டீன், மேடை ஏறி அச்சிறுவனை ஆரத்தழுவிக் கொண்டு சொன்னார், "குழந்தையே! நான் இதுவரை கடவுள் இருக்கிறார் என்பதை நம்பவில்லை. ஆனால் உன் இசையைக் கேட்டபின்னர் இப்போது நம்புகிறேன்” என்றார்.இசை இன்பத்தால் இறை இன்பத்தை உணரலாம். இறையோடு உள்ள ஆன்மக் காதலுக்கு இசைதான் சுருதி கூட்டும்.

திருத்தலங்கள் தோறும் சென்று இசைப்பாடல்களால் இறைவனை போற்றிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் பக்தி மரபின் செழுமையான வெளிப்பாடாகும். வழிபாடுகளுக்குள் வடமொழி நுழையாமல் பாதுகாத்து, தமிழில் வழிபாடு என்ற மரபைக் காத்த பெருமை இவர்களது பாடல்களுக்கு உண்டு.இப்படி ஆன்மிகத்தோடு இசையை இணைத்துப் பார்ப்பதற்குக் காரணம், இசை மனதிற்கு அமைதியையும், நிறைவையும் தருவதால் தான். வழிபாடுகள் அமைதிச் சூழலில் மன ஒருமைப்பாட்டுடன் நிகழ்ந்தால்தான் அர்த்தம் உள்ளது. ஆனால் இன்று இறைவழிபாடுகள் கூட காதைப் பிளக்கும் இசையும் பாட்டும் என இரைச்சல்பாடுகளாய் மாறிவிட்டன.

நாட்டுப்புற பாடல்கள் :அமெரிக்காவில் வெள்ள இனவெறி ஆதிக்கத்தால் நசுக்கப்பட்டுக் கிடக்கும் ஆப்ரிக்க கருப்பின மக்கள், தங்கள் விடுதலைக்கான அடையாளமாக ரேப் இசையை பயன்படுத்துகிறார்கள்.அன்பையும், உறவையும் கொண்டாடுபவையாக, உழைக்கும் மக்களின் களைப்பைப் போக்கும் உந்து சக்தியாக, வாழ்வின் அனுபவங்களை மக்கள் மொழியில் பதிவு செய்பவையாக நமது கிராமங்களில் ஒலித்த நாட்டுப்புறப்பாடல்கள் திகழ்கின்றன."கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள் நாவில் வழங்கோசை கோடி பெறும்” என்று வீதி இசைக்கு மதிப்பு கொடுத்த சமூகம் தமிழர்களுடையது.அதிகாலை நேரத்தில் எங்கிருந்தோ வந்து ஆன்மாவை வருடும் பக்தி கானங்கள், பறவைகளின் காலைப் பண்கள் எல்லாம் அதிகாலை நிசப்தத்தில் நம்மை புத்துலகத்திற்குத் தயார் செய்து விடும். மென்மையான இசையை, பாடல்களை இரவு நேரத்தில் குறைந்த ஒலியில் இசைக்க விடும்போது நம்மை மறந்த லயத்தில் தூக்கம் கண்களைத் தழுவிக் கொள்ளும்.இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் தாம் தூம் என்ற பின்னணி இசையோடு பாடல்களைக் கேட்க வேண்டாம், அது நம் இரவு நேர மூளை அமைதியைப் பாதிக்கும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

எது இசை, அதை எப்படி கேட்க வேண்டும் என்ற அறிவில்லாத காரணத்தால் வீடு, விழாக்கள் எல்லாம் சத்தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இன்றைய பேருந்துப் பயணங்களில் காதுகளைத் திருடும் கானங்களின் சத்தமே நிரம்பி வழிகிறது. பேருந்தின் இரைச்சல், பாட்டுச் சத்தம் எல்லாம் நம்மை பாதிக்காமலா போய் விடும்? இதமான பழையத் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பினால், எங்கே இளசுகளின் சாபம் வந்து சேருமோ என்று ஓட்டுநரும், வசூல் இல்லாமல் போய்விடுமோ என்று நடத்துநரும் பயப்படுகின்றனர்.

பாதுகாப்பான பயணம் :பயணங்களில் இந்த சத்த உலகத்தை மறந்து தங்களை தனித் தீவுகளாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மறந்து காதுகளில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு இந்த கத்தல்களை தன் செவிப்பறைகளுக்குள் மோதவிடும் வருங்கால செவிடுகள் சிலர் கண்மூடி அமர்ந்திருப்பர்.பயணங்கள் எல்லாம் ஏதோ ஒரு நோக்கத்திற்காக நடைபெறுபவைதான். ஒரு பேருந்துப் பயணத்தில் பணிகளுக்காக, படிப்புக்காக, பரீட்சை எழுதுவதற்காக, விசேஷங்களுக்காக, மருத்துவ சிகிச்சைக்காகச் செல்வோர் எனப் பலதரப்பட்டோர் இருப்பர். எல்லோருக்கும் தேவை பாதுகாப்பான அமைதியான பயணம்தான். அதைப் பேருந்துகளை இயக்குவோர் உறுதிப்படுத்த வேண்டும்.இசைப்பாட்டு எல்லோரையும் ஈர்ப்பதுதான். உள்ளத்தை வருடி ஆனந்தம் கொள்ளச் செய்வதுதான். எந்த மகிழ்ச்சியும் மனிதனை மன அமைதி கொள்ளச் செய்வதாக இருந்தால்தான், அது அர்த்தம் பெறும்.
-முனைவர்.மு.அப்துல் சமது
தமிழ்ப் பேராசிரியர்.
ஹாஜிகருத்த ராவுத்தர் கல்லூரி,
உத்தமபாளையம்.
93642 66001

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement