Advertisement

யாதும் ஊரே... யாவரும் கேளீர்: இன்று உலக புலம்பெயர்ந்தோர் தினம்

கற்கால மனிதன் உணவிற்காக இடம் பெயர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. பின் ஆற்றுச்சமவெளி நாகரிகம் வளர துவங்கிய காலங்களில் மனிதன் ஆறுகளின் நீர் வளத்தை பயன்படுத்தி வேண்டிய உணவை தேடி அலையாமல் தானே பயிரிட்டு உற்பத்தி செய்ய கற்றான். அதற்கு பின் நாடோடியாக இருந்த அவனது வாழ்க்கை ஒரே இடத்தில் தங்கி குடும்பமாக... கூட்டுக் குடும்பமாக... பிறகு கட்டுப்பாடுகளுடைய சமூக கூட்டமாக மாறியது.
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய புதிய கண்டுபிடிப்புகளுடன் நாகரிகமும் விஞ்ஞானமும் கைகோர்த்து மனிதன் வாழ்வை வளமாக்கின. நாளுக்கு நாள் அவனது தேவையும் தேடலும் அதிகமாகின. உணவு, உடை மற்றும் இருப்பிடம் என்ற அடிப்படை தேவைகளை தாண்டி மனித சக்தி சிந்திக்க துவங்கியது. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற ஒளவை பாட்டியின் முதுமொழி மனிதனின் தேடலுக்கு புதிய அர்த்தத்தை உருவாக்கியது. அதுவரை காட்டுக்குள் வாழ்ந்த மனிதனின் தேடல், கடலை தாண்ட துவங்கியது. உள்நாட்டில் கிடைக்காத பல விஷயங்கள் வெளிநாடுகளில் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

சமுதாய நிகழ்வு:பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டம், உள்நாட்டு போர், இனவெறி போராட்டங்கள், சமுதாய வேறுபாடுகள் மற்றும் சமூக அநீதி போன்ற பல காரணங்களுக்காக மனிதன் சொந்த நாட்டை விட்டு வௌ?நாடுகளுக்கு புலம் பெயர்ந்தான். பணத்திற்காக, பதவிக்காக, புதிய வாழ்க்கை முறைக்காக புதிய சமுதாய அங்கீகாரத்திற்காக இந்தியர்களும் புலம் பெயர்ந்தனர். 19ம் நூற்றாண்டு துவக்கத்தில் துவங்கிய இந்த இந்திய புலம் பெயர்தல் நிகழ்வு இன்று மிகப்பெரிய சமுதாய நிகழ்வாக நடக்கிறது. துவக்கத்தில் கொத்தடிமைகளாக, ஊழியர்களாக புலம் பெயர்ந்த இந்தியர்கள் இன்று வல்லுநர்களாக வெளிநாடுகளில் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர்.

முதல் புலம் பெயர்வு:முதன் முதலாக யூதர்கள் ஜெருசலேத்திலிருந்து விரட்டப்பட்ட நிகழ்வே உலகின் முதல் புலம் பெயர்தல் நிகழ்வு என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இன்று உலக மயமாக்கலுக்கு பிறகு இந்நிகழ்வு அனைத்து நாடுகளின் பொருளாதாரம், கல்வி மற்றும் வெளிநாட்டு கொள்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் சமூகநிகழ்வாக மாறியுள்ளது. புலம் பெயர்ந்தோரின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிச., 18ம் தேதியை உலக புலம் பெயர்ந்தோர் தினமாக கொண்டாட 2000 டிச.,4ல் ஐ.நா.சபை முடிவு செய்தது. இந்தியர்கள் புலம் பெயர்வதை 'இந்தியன் டயஸ்போரா' என இலக்கியவாதிகள் பெயரிட்டனர். உயர்கல்வி, சமூக மற்றும் வெளியுறவு கொள்கைகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்று ஏறக்குறைய இரண்டு கோடி இந்தியர்கள் உலகில் 110 நாடுகளில் புலம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் தங்கி பணிபுரியும் நாடுகளின் பொருளாதார, விஞ்ஞான மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்தியர்களின் கல்வி திறன், அர்ப்பணிப்பு உணர்வு, உண்மை, நேர்மை, கடின உழைப்பு, வெளிநாட்டினரை மிக கவர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, அங்குள்ள பார்லிமென்டில் கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்தியர்களுக்கு நிரந்தர அமெரிக்க குடியுரிமை வழங்க ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளார்.

வல்லமை பெற்ற கொத்தடிமைகள்:துவக்கத்தில் மொரீசியஸ், கரீபியன் தீவுகளான டிரினிடாட், டுபாகோ கியானா, பிஜி தீவுகள் மற்றும் தென்னாப்ரிக்கா நாடுகளுக்கு ஆங்கிலேயர்களின் கொத்தடிமைகளாக புலம் பெயர்ந்த இந்தியர்கள் இன்று உலகத்தையே ஆட்டி வைக்கும் அளவிற்கு வல்லமை பெற்றுள்ளனர். 1970ல் வளைகுடா நாடுகளில் உண்டான எண்ணெய் உற்பத்தி வளர்ச்சி இந்தியாவின் தொழில் நுட்பம் மற்றும் தனித்திறன் கொண்ட ஊழியர்களை வெகுவாக கவர்ந்தது. டாக்டர்கள், நர்ஸ்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் என மிகப்பெரிய அளவில் 1970களில் இந்தியர்கள் புலம் பெயர்ந்து வளைகுடா நாடுகளில் வாழ துவங்கினர். இதனால் நாட்டின் அந்நிய செலாவணி கணிசமாக உயர்ந்தது. முதலாம் நாடுகள் எனப்படும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர். 3 கோடி மக்கள் தொகை கொண்ட கனடாவில் 2.8 சதவீதம் மக்கள் இந்தியர்கள். அமெரிக்க மக்கள் தொகையில் 6 சதவீதம் இந்தியர்கள் அதிக வருவாய் மற்றும் உயர்கல்வியுடன் திகழ்கின்றனர். லண்டன், ஹாலந்து நாட்டிலும் அதிக டாக்டர்கள் சிறப்பான பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவின் நாசாவில் 3 சதவீதம் விஞ்ஞானிகள் இந்தியர்கள். அந்நாட்டின் உயர்மட்ட ராணுவ ஆராய்ச்சி மையமான பெண்டகனில் 4.5 சதவீதம் இந்திய கம்ப்யூட்டர் பொறியாளர்கள் உள்ளனர்.

துயரங்களுக்கும் பஞ்சமில்லை:இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் வெளிநாடுகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கினாலும் அவர்கள் படும் துயரங்களும் நம்கண் முன் நிற்கின்றன. புலம் பெயர்ந்தோர் இன்று பொருளாதார ரீதியாக மகிழ்ச்சியாக மன நிறைவுடன் வாழ்ந்தாலும், அவர்கள் இழந்துள்ளது ஏராளம். தாய்மொழி, இலக்கியம், உணவு, கலாசாரம், சடங்குகள், உறவுகள் என அனைத்து வாழ்க்கை சூழ்நிலைகளையும் இழந்து அந்நிய நாட்டில் அந்நியர்களாக வாழ்கின்றனர். தாயின் கருவறையை விட்டு வெளியே வந்த குழந்தை மீண்டும் கருவறைக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. தாய் நாட்டிற்கும் திரும்ப முடியாமல், அந்நிய நாட்டிலும் முழுமையாக வாழ்க்கை வாழ முடியாமலும் திரிசங்கு நிலையில் வாழ்கின்றனர். இவர்களின் உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசு 2000ல் எல்.எம்.சிங்வி தலைமையில் கமிட்டியை ஏற்படுத்தியது. பல நாடுகளுக்கு சென்று வந்த இக்கமிட்டியின் சிபாரிசுகளின்படி வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன் காக்க மத்திய அரசு ஒரு புதிய அமைச்சரவையை உருவாக்கியது.

எழுதியே பிரபலமானோர்:புலம்பெயர்ந்த இந்தியர்களின் அவலங்களை வி.எஸ்.நய்பால், சல்மான் ருஷ்டி, ரோஹின்டன் மிஸ்ட்ரி, உமா பரமேஸ்வரன், பாரதி முகர்ஜி, சுனித்ரா குப்தா, ஜூம்பா லாகிரி, கீதா ஹரிஹரன், கீதா மேதா, சித்ரா திவாகுருனி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் எழுத்துக்களால் பதிவு செய்துள்ளனர். காதல் முறிவு, பன்முக காதல், திருமண வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட உறவு முறைகள், அதனால் உண்டாகும் பிரச்னைகள், கலாசார தாக்குதல்களை இவர்கள் பதிவு செய்துள்ளனர். புலம் பெயர்ந்த முதல் சந்ததியினர் தான் ஒரு கலாசார தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் சந்ததியினருக்கு இந்த பிரச்னை இல்லை. அவர்கள் அந்நிய நாட்டையே தாய்நாடாக எண்ணி வாழ்க்கை முறையை மாற்றி கொண்டனர்.

கோடீஸ்வரர் பட்டியலில் இடம்:லண்டனில் 'செட்டில்' ஆன சுவராஜ் பால் மிகப்பெரிய தொழிலதிபராக திகழ்கிறார். பாரிசில் 'செட்டில்' ஆன லட்சுமி மிட்டல் உலக இரும்பு தொழிலில் முடிசூடா மன்னராக உள்ளார். விஞ்ஞானத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஹரிகோவிந்த் குரானா, சந்திரசேகர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற வி.எஸ்.நய்பால், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் வெளிநாடு வாழ் இந்தியர்களே. உலகில் இந்தியர்கள் பல துறைகளில் சாதிப்பது பெருமையான விஷயம் தான். ஆனால் நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, விவசாயிகளின் தற்கொலை, பன்னாட்டு கம்பெனிகளால் நலிவுறும் நம் பாரம்பரிய தொழில்கள் போன்ற அன்றாட பிரச்னைகளை தீர்க்க புலம் பெயர்ந்த இந்தியர்களின் பங்கு என்ன? என சிந்திக்க தூண்டுகிறது. இதுவரை தீர்க்கப்படாத ஈழத்தமிழர்களின் இன்னல்களும், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இந்தியர் படும் துயரங்களும் தீர்க்கப்படாத பிரச்னைகளாக உள்ளன. அவர்களும்புலம் பெயர்ந்த இந்தியர்கள் தானே. என்னதான் இருந்தாலும் சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா? எந்நாடு என்றாலும் அது நம் நாட்டை போல வருமா என பாடி ஆறுதல் தேடி கொள்ளலாம்.

- டாக்டர் எம்.கண்ணன், முதல்வர், சரஸ்வதி நாராயணன் கல்லூரி, மதுரை. 99427 12261.


m-kannan09rediffmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement