Advertisement

வெற்றியை வாங்கித் தந்த பெருமை பொறுமையைச் சேரும்

பொறுமையின் பெருமையைப் போற்றும் பழமொழிகள் உலகெங்கும் காணப்படுகின்றன. 'பொறுமை உள்ளவனுக்கே உலகம் சொந்தம்' என்கிறது இத்தாலியப் பழமொழி.
'பொறுமைக்கு அழகான குழந்தையே பிறப்பது வழக்கம்' என்பது ஆப்ரிக்கப் பழமொழி. 'ஒரு நிமிடப் பொறுமை பத்து ஆண்டுகளுக்கு நன்மை' என்பது கிரீஸ் பழமொழி உணர்த்தும் வாழ்க்கைப் பாடம். 'பொறுமையுள்ள மனிதன் வெற்றி பெறுவான்' என்பது அரேபியப் பழமொழி தரும் அனுபவ உண்மை. 'பொறுமை கசப்புத் தான். ஆனால் அதன் கனி இனிப்பானது' என்பது சிந்திக்கத் தூண்டும் பிரான்ஸ் பழமொழி. 'அடிக்கடி சோதிக்கப் பெற்ற பொறுமை கோபமாக மாறும்' என்பது லத்தீன் பழமொழி விடுக்கும் எச்சரிக்கை. 'பொறுமை என்ற சொல்லே வீட்டுக்கு அருமையானது' என்பது சீனப் பழமொழி பொறுமைக்குச் சூட்டும் புகழாரம்.

ஏகநாதரின் பொறுமை:ஏகநாதர் மகாராஷ்டிரத்தில் வாழ்ந்த ஒரு மகான். தினந்தோறும் கோதாவரியில் நீராடி வருவார். ஒருநாள் நீராடி விட்டுத் திரும்பி வரும் வழியில் நாத்திகன் ஒருவன் வீட்டு மாடியிலிருந்து ஏகநாதரின் தலையில் வெற்றிலை எச்சிலைத் துப்பினான். யார்? என்ன? என்று கூடப் பார்க்காமல் ஏகநாதர் அமைதியாகத் திரும்பிச் சென்று ஸ்நானம் செய்தார். திரும்பவும் அவர் நாத்திகனது வீட்டைத் தாண்டிய போது அவன் எச்சிலைத் துப்பினான். மறுபடி ஸ்நானம் செய்தார் ஏகநாதர். 108 முறை இவ்வாறு நடந்தது. அதன் பின்புதான் நாத்திகன் ஏகநாதரது பெருமையை உணர்ந்தான். அவரது காலடியில் வீழ்ந்து வணங்கினான். அவரிடம் மன்னிப்புக் கேட்டான். அவன் கூறியதைக் கேட்ட ஏகநாதர். "அப்பா, உண்மையில் வணங்கத் தகுந்தவன் நீதான். உன்னால் தான் இன்று எனக்குக் கோதாவரியில் 108 முறை ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைத்தது” என்றார். மகான்கள் எப்போதும் தம்மைச் சிறியவர்களாகவும், மற்றவர்களைப் பெரியவர்களாகவும் கருதுவார்கள். பொறுமையை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் எப்போதும் நமக்கு நன்மையே விளையும்.

எனக்கு வேண்டாம்:'தீமைக்கும் நன்மையே செய்' என்பது புத்தர் பெருமானின் அழுத்தமான கொள்கை. இதை அறிந்து கொண்டிருந்த ஒருவன் புத்தரை எப்படியேனும் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தான். வாசலில் பிச்சை ஏற்று நின்ற புத்தரைப் பார்த்து ஏசினான்; வாயில் வந்தவாறு திட்டினான். அவன் பேசி முடிக்கும் வரை புத்தர் பொறுமையாக இருந்தார். பின்னர் அவனிடம் கேட்டார்: "மகனே, பேசி முடித்துவிட்டாயா? சரி, இப்போது நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். ஒருவன் ஒரு பொருளை ஒருவனுக்குக் கொடுக்க முன்வருகிறான். அந்தப் பொருளை அவன் பெற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறான். இந்த நிலையில் அந்தப் பொருள் யாருக்கு உரியது?” "இதில் என்ன சந்தேகம்? அவன் வாங்க மறுத்துவிட்டால், கொடுக்க வந்தானே, அவனுக்குத்தான் அது உரியது” என்றான் அவன். புத்தர் சொன்னார்: "அப்படியா. இப்பொழுது நீ திட்டிப் பேசிய பேச்சுக்கள் எதுவும் எனக்கு வேண்டாம்!”

தகர்க்க முடியாத கவசம்:மேலுலகத்தில் இருந்து தேவதை ஒன்று இறங்கி வந்து, ஓர் அந்தணன் வேடம் தாங்கி, புத்தரிடம் பல கேள்விகளைக் கேட்டது. அவற்றுள் 'தகர்க்க முடியாத கவசம் எது? மிகவும் உயர்ந்த, பலம் பொருந்திய ஆயுதம் எது?' என்ற இரண்டு வினாக்கள் முக்கியமானவை. புத்தர் பின்வருமாறு தேவதையிடம் பதில் உரைத்தார்: "தகர்க்க முடியாத கவசம் பொறுமை; மிக உயர்ந்த, பலம் பொருந்திய ஆயுதம் ஞானம்!” வாழ்க்கையில் தவறு செய்யும் ஒருவனைத் தண்டிப்பதால் மட்டும் திருத்த முடியாது. கண்டிப்பதாலும் அவனது உள்ளத்தை அவ்வளவாக மாற்றி விட முடியாது. அறிவுரை, உபதேசம் போன்றவற்றாலும் உடனடியாக எந்த விளைவும் ஏற்பட்டுவிடாது. பின் என்னதான் செய்ய வேண்டும், எப்படித்தான் தவறு செய்பவனைத் திருத்துவது? இதோ வள்ளுவரின் அமுத மொழி: "ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்.” "தண்டித்தவருக்கு அப்போதைய மகிழ்ச்சியே; பொறுத்தவருக்கு உலகம் உள்ளளவும் புகழ்” என்பது மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் இத்திருக்குறளுக்கு எழுதிய தெளிவுரை. ஒறுத்தல் (தண்டித்தல்) நெறி, பொறுத்தல் நெறி என்னும் இரண்டனுள் ஒறுத்தல் நெறியைப் பின்பற்றுவோர்க்கு ஒருநாள் இன்பம் அப்போதைய மகிழ்ச்சி - வேண்டுமானால் கிடைக்கலாம்; ஆனால் பொறுத்தல் நெறியைப் பின்பற்றுவோர்க்கோ வாழ்க்கையில் நிலைத்த புகழ் கிடைக்கும். அது உலகம் உள்ள வரையில் நிலைத்து நிற்கும்.

ஜென் கதை:இதை உணர்த்தும் ஒரு ஜென் கதை: சிச்சிரி கோஜுன் என்ற குரு இரவு நேரத்தில் ஞான நூல் ஒன்றைத் படித்துக் கொண்டிருந்தார். அந்த வேளை பார்த்து, ஒரு திருடன் உள்ளே நுழைந்தான். அவன் கையில் கூர்மையான கத்தி. "மரியாதையாகப் பணம் தந்து விடுகிறாயா அல்லது ஒரே குத்தாகக் குத்தட்டுமா?” என்று கேட்டான் திருடன். குரு, "என்னைத் தொந்தரவு செய்யாதே, அப்பா. அதோ அந்த மேசையில் பணம் இருக்கிறது, எடுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டுப் படிப்பதில் ஆழ்ந்துவிட்டார். திருடன் மேசையை நோக்கி நகர்ந்தான். அப்போது குரு, "எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விடாதே. கொஞ்சம் மிச்சம் இருக்கட்டும். நாளைக்கு வரி கட்ட வேண்டும்” என்றார் தலை நிமிராமலேயே! திருடனுக்குக் குருவின் நிதானம், பதற்றமின்மை, அமைதி, பொறுமை ஆகிய பண்புகள் வியப்பைத் தந்தன. அவர் சொன்னபடியே கொஞ்சம் பணத்தை விட்டு விட்டு, பெரும்பகுதியை எடுத்துக் கொண்டு திரும்பினான் திருடன். அவன் கதவை நோக்கிச் செல்லும் போது, "எதை யார் கொடுத்தாலும் நன்றி சொல்ல வேண்டும், அதுதானே நாகரிகம்?” என்றார் குரு. திருடன் குருவைத் திரும்பிப் பார்த்து நன்றி சொன்னான். பின்னர் இருளில் சென்று மறைந்தான். சில நாட்களில் அந்தத் திருடன் காவலரிடம் அகப்பட்டுக் கொண்டான். குருவின் வீட்டில் திருடியதையும் மற்ற திருட்டுகளோடு சேர்த்துச் சொன்னான். காவல் துறையினர் சாட்சி சொல்லக் குருவை அழைத்தனர். "என்னைப் பொறுத்த வரையில் இவன் திருடன் இல்லை. சிரமமாக இருந்ததால் என்னிடம் வந்தான். பணம் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு நன்றி கூடச் சொல்லி விட்டுச் சென்றான் என்ன, நன்றி சொன்னாய் அல்லவா?” என்று கேட்டார் குரு. "ஆமாம் சுவாமி, சொன்னேன்” என்று வியப்புடன் சொன்னான் திருடன். சிறைவாசம் முடிந்ததும் நேராகக் குருவின் சீடன் ஆனான். இந்த ஜென் கதையில் வரும் குருவைப் போல் நாமும் நிதானமாக, அமைதியாக, பொறுமையாக, பதற்றம் இல்லாமல் குடும்ப வாழ்க்கையில், குழந்தை வளர்ப்பில், நண்பர்கள் வட்டத்தில் பொது வாழ்க்கையில் நடந்து கொண்டால் வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் பொறுமையையே சேரும்! பொறுமை காப்போம், வாழ்வில் சாதிப்போம்.

- முனைவர் நிர்மலா மோகன், எழுத்தாளர், பேச்சாளர் மதுரை. 94436 75931

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement