Advertisement

சரஸ்வதியின் வெற்றி

நமக்குக் கிடைத்திருக்கும் அனைத்து சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால், சிந்து சமவெளி நாகரிகம் அதன் முழு வளர்ச்சியடைந்த கட்டத்தில் வெற்றிகரமான, பலதரப்பட்ட தொழிற்துறைகளைக் கொண்டதாக இருந்தது தெரியவருகிறது. அங்கிருந்த அனைத்து சிறிய பெரிய நகரங்களிலும் உற்பத்தி மையங்கள் இருந்திருக்கின்றன: தாமிர, வெண்கலத்தாலான கருவிகள், ஆயுதங்கள், பிற பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகள், செங்கலையும் மண்பாண்டங்களையும் சுடுவதற்கான சூளைகள், கல் கருவிகளைத் தயாரிக்கும் பட்டறைகள், பாசி மாலைகளையும், நகைகளையும் தயாரிப்பதற்கான தொழிற்கூடங்கள் எல்லா நகரங்களிலும் இருந்தன. அதோடு, குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், முத்திரை தயாரிப்பவர்கள் ஆகியோர்களுக்கெனத் தனித்தனியான மையங்களும் இருந்தன.மேற்சொன்ன பெரும்பாலான தொழில்களுக்கான பொருட்கள் அந்தந்தப் பகுதிகளில் கிடைத்திருக்கவில்லை. எனவே, நகரங்களுக்கிடையிலான உள்நாட்டு வர்த்தகம் பெரிய அளவில் நடந்திருக்கவேண்டும். தாமிரம், வெள்ளீயம், தங்கம், வெள்ளி, நவரத்தினக் கற்கள், மரம், பஞ்சு ஆகியவை மிக முக்கியமான வர்த்தகப் பொருட்களாக இருந்திருக்கவேண்டும். இந்தப் பரிமாற்றங்கள் நிச்சயமாக பல்வேறு தொழில் சமூகங்களுக்கு இடையேதான் நடந்திருக்கவேண்டும். சிலர் தாதுக்களிலிருந்து உலோகங்களையோ நவரத்தினக் கற்களையோ பிரித்தெடுத்தல் தொழிலில் நிபுணத்துவம் பெற்றிருந்திருப்பார்கள். வேறு சிலர் விவசாயம் அல்லது நீர் வழி போக்குவரத்து ஆகியவற்றில் சிறந்து விளங்கியிருப்பார்கள். அந்தப் பிரதேசத்தில் வாழும் 'மோஹனர்கள்' (முஹன்னர்கள்) என்ற இன்றைய மீனவ சமுதாயத்தினர் பல நூற்றாண்டுகளாகவே சிந்து நதிக் கரையோரத்தில் படகோட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இவர்களைத் தவிர நாடோடிக்கூட்டத்தினரும் மூலப்பொருட்களை ஓரிடத்திலிருந்து வேறோரிடத்துக்குக் கொண்டுசெல்வதிலும் தொலைதூரப் பகுதிகளுக்கிடையே வர்த்தக வழித்தடத்தை உருவாக்குவதிலும் பங்கெடுத்திருக்கக்கூடும்.தொலைதூரப் பிரதேசங்களுடன் தொடர்புகொள்வதில் ஹரப்பா மக்களுக்கு இருந்த அபரிமிதமான ஆர்வம் இவர்களுடைய தனித்தன்மை வாய்ந்த குணமாகும். மக்ரான் கடற்கரைப் பிரதேசத்திலும் ஆஃப்கானிஸ்தானிலும் முகாமிட்டுத் தங்கியிருந்தனர் என்பதை முன்னமே பார்த்தோம். ஆனால், ஓமான் (பழைய பெயர் மாகன்) பஹ்ரைன் (முன்னாளில் தில்முன்), ஃபைலாகா (குவைத்தின் ஒரு தீவு, தில்முனின் ஒரு பகுதி) ஆகிய இடங்களிலும் வர்த்தகக் குடியேற்றங்கள் நிச்சயமாக நிறுவப்பட்டிருக்கக்கூடும். இந்த அனைத்து இடங்களிலும் ஹரப்பா மண்பாண்டங்கள் முத்திரைகள், பாசி மணிகள், எடைக்கற்கள், தந்தத்தாலான சீப்புகள் போன்றவை சமீப காலங்களில் அகழ்வாய்வில் கிடைக்க ஆரம்பித்துள்ளன. அவற்றில் சில பொ.யு.மு.2500 அல்லது அதற்கும் முற்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்.சற்று மேலே போனால், மெசபடோமியாவின் 'உர்', 'கிஷ்', 'ஏலாமி'ன் ஸீஸா ஆகிய இடங்களில் சுமார் நாற்பது சிந்து சமவெளி முத்திரைகள் கிடைத்துள்ளன. வழக்கமான ஹரப்பா பொருட்களைத் தவிர ஹரப்பா பகுதிக்கே உரிய நீண்ட, இளம் சிவப்பு நிறப் பாசிமணிகள் கோக்கப்பட்ட மாலைகளும், மேல் பரப்பில் வெள்ளைக் கோடுகளால் வேலைப்பாடு செய்யப்பட்ட நீளம் குறைந்த பாசி மணி மாலைகளும் 'உர்' பகுதி அரச கல்லறையில் காணப்பட்டன. மெசபடோமியாவின் அரசர்கள் ஹரப்பா நகைகளை மிகவும் விரும்பினர் என்பது இதிலிருந்து தெரியவருகிறது. இது மட்டுமல்ல, மெசபடோமியாவில் கிடைத்த கல்வெட்டுகளிலிருந்து, 'மெலூஹா' என்றழைக்கப்படும் பிரதேசத்திலிருந்து மரம், தாமிரம், வெள்ளீயம், சிவப்புக் கற்கள், கிளிஞ்சல்கள், தந்தம் ஆகியவையும் மயில்களும் குரங்குகளும் கொண்டுவரப்பட்டன என்றும் தெரியவருகிறது. இவையனைத்துமே சிந்துசமவெளி நாகரிப் பொருட்களுடன் மிகவும் துல்லியமாகப் பொருந்துகின்றன. அதனால்தான் 'மெலூஹா' என்றழைக்கப்படும் இடம் சிந்துசமவெளிப் பிரதேசம்தான் எனப் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகிறார்கள்.அக்காடியன் வம்சத்தை ஸ்தாபித்த புகழ் வாய்ந்த ஸர்கோன் (பொ.யு.மு. 23ம் நூற்றாண்டு) கல்வெட்டுகளில் ஒரு விஷயத்தை மிகவும் பெருமிதத்துடன் பதிவுசெய்திருக்கிறார்: தில்முன், மாகன், மெலூஹா ஆகிய இடங்களிலிருந்து ஏராளமான வெளிநாட்டுப் பொருட்களை ஏற்றிவந்த கப்பல்கள் தனது ராஜ்யத்தின் தலைநகரான அக்காட் பகுதியின் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிற்கும் விதத்தை பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார். இந்த அக்காட், 'உர்' பகுதியிலிருந்து யூப்ரடீஸ் நதியின் மேல் பகுதிக் கரையோரத்தில் குறைந்தது 300கி.மீ. தொலைவிலிருந்தது. சாதாரணமாக, கப்பல் மூலம் வரும் பொருட்கள் 'உர்' பகுதியில்தான் இறக்கி வைக்கப்படும். ஆனால், மேற்சொன்னது போல 300 கி.மீ தூரம் கூடுதலாகப் பயணம் செய்து 'அக்காட்' வரை போயிருக்கிறதென்றால் இந்தத் தொலைதூரப் பொருட்களுக்கு இருந்த மதிப்பு அல்லது முக்கியத்துவத்தை அது காட்டுகிறது.இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும். சிந்து சமவெளியில் இருந்துதான் பொருட்கள் மெசபடோமியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனவே தவிர, மெசபடோமியோவிலிருந்து சிந்து பிரதேசத்துக்கு ஒரு பொருளும் கொண்டு வரப்பட்டதாகத் தெரியவில்லை. அழிந்துவிடக்கூடிய அல்லது அழியாமல் இருக்கக்கூடிய கச்சாப் பொருள்கள் அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் ஹரப்பா வர்த்தகர்களால் கொண்டுவரப்பட்டிருக்கக்கூடும்: வெள்ளி, தாமிரம், கம்பளி, ஊதுவத்தி, பேரீச்சம்பழம் போன்ற பொருட்களை மெசபடோமியாவிலிருந்து கொண்டுவந்திருக்கலாமென பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இதை நிரூபிக்கும் வலுவான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லையாதலால், இவை வெறும் யூகங்களாகவே இருக்கின்றன. என்றாவது ஒருநாள் பாரசீக வளைகுடவில் இருந்து ஏதாவது ஹரப்பா கப்பலின் சிதிலங்கள் என்றாவது கிடைக்கும் என்று நம்புவோமாக.இந்த வெளி நாட்டுவர்த்தகம் ஹரப்பாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எத்தனை தூரம் உதவியிருக்கும் என்பது பற்றியும் ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்துகள் இல்லை. ஆனால், ஏற்றுமதி செய்யும் பொருட்டு குறிப்பாகக் கடற்கரைப் பகுதிகளில் பட்டறைகள், தொழில் குடியிருப்புகள் நிறுவப்பட்டிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. உதாரணமாக, சிந்து நதியின் டெல்டாவுக்கு மேற்கில் கிளிஞ்சல் வளையல்கள் செய்வதில் சிறந்துவிளங்கிய பாலகோட் என்ற ஒரு சிறிய ஊரின் முக்கிய தொழில் ஏற்றுமதியாகவே இருந்திருக்க வேண்டும். லோத்தல் நகரமும் (அகமதாபாத்துக்கு அருகில்) பாசிமணிகளையும் வேறு கைவினைப் பொருட்களையும் பெருமளவில் தயாரித்த தோலவிராவும் கட்ச் ரண் கரையோரமாக அமைக்கப்பட்டதன் காரணமும் இதுவாகத்தான் இருக்கவேண்டும். தில்முன்னிலும் அல்லது மெசபடோமியாவிலும்கூட இம்மாதிரியான வர்த்தகப் பொருட்களின் உற்பத்திக்கான சிறிய குடியேற்றங்கள் நிறுவப்பட்டிருந்திருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.நேரடியாக மெசபடோமியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் சிந்து சமவெளி நாகரிகப் பிரதேசத்தில் கிடைக்கவில்லையெனினும் சில பொருட்கள் (மொஹஞ்சஜோதரோ அல்லது காலிபங்கனில் கிடைத்த உருளை வடிவிலான முத்திரைகள்), வேலைப்பாடுள்ள கைவினைச் சிற்பங்கள் (குறிப்பாக, நிற்கும் இரண்டு புலிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு தெய்வம்) ஆகியவற்றில் மெசபடோமிய தாக்கம் வெளிப்படுகிறது. அந்த இடத்துடன் சிந்து சமவெளிப் பகுதிகள் நீண்ட காலமாகக் கொண்டிருந்த தொடர்பை அவை உறுதிப்படுத்துகின்றன.ஆய்வாளர் திலீப் சக்ரவர்த்தியின் அபிப்பிராயத்தில் இந்தத் தொடர்பு ஏறத்தாழ பொ.யு.மு. 2600 முதல் பொ.யு.மு.1300 வரை இருந்திருக்கிறது.'உர்' பகுதியில் உள்ள அரசக் கல்லறையில் கிடைத்த பொருள் பொ.யு.மு.2600 என்ற காலகட்டத்தைச் சேர்ந்தது. இது ஹரப்பாவின் முழு வளர்ச்சியடைந்த காலகட்டத்தின் ஆரம்பத்துடன் ஒத்துப் போகிறது. குவைத்தில் கிடைத்திருக்கும் கடல் படகுகளின் சிதைவுகள் பொ.யு.மு. 6000த்தைச் சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. இதிலிருந்து அந்தப் பிரதேசத்துடனான ஹரப்பாவின் தொடர்பு வெகு முன்பே தொடங்கியிருக்கலாம் என்று நினைக்க இடமிருக்கிறது. ஆனால், இதனை உறுதிப்படுத்தும் சான்றுகள் ஒன்றும் கிடைக்கவில்லை.வியாபாரிகள் கடல் வழியாகப் போயிருக்கவேண்டும். ஹரப்பாவிலிருந்து புறப்பட்டு, மக்ரான் கரையோரமாகப் பயணம் செய்து, ஓமானிலும், பஹ்ரைனிலும் தங்கிவிட்டு பிறகு பாரசீக வளைகுடாவின் கடைசிவரை சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தப் பாதையின் மொத்த நீளம் 2500 கி.மீ. அன்றைய மக்களுடைய கப்பல் கட்டும் திறனும் ஓட்டும் திறனும் உச்சநிலையை அடைந்திருக்க வேண்டும் என்பது இதில் இருந்து தெரியவருகிறது. தட்டையான அடிப்பாகம் கொண்ட நதி வழிப் படகுகளின் படங்கள் சில முத்திரைகளிலும் கல்வெட்டுகளிலும் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஹரப்பா வர்த்தகர்கள் கடலில் செல்வதற்குப் பயன்படுத்திய கப்பல்கள் அல்லது படகுகளைப் பற்றி நமக்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை.
=========சரஸ்வதி : ஒரு நதியின் மறைவுமிஷல் தனினோதமிழில் : வை. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 416 விலை ரூ.300இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-635-3.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement