Advertisement

சிந்து நகரங்கள்

சிந்து சமவெளி நாகரிகத்தின் மிக வெளிப்படையான, அதேநேரம் ஆரம்பகட்ட ஆய்வாளர்களை பிரமிப்பில் ஆழ்த்திய முக்கிய அம்சம், அதன் அற்புதமான நகரத்தன்மைதான். பெரும்பாலான ஊர்கள் சிறியதோ பெரியதோ, கோட்டைகள் கட்டப்பட்டு தனித்தனி பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. நகரங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 'அக்ரோபோலிஸ்' (கிரேக்க மொழியில் மேல் நகரம்) அல்லது 'சிட்டாடல்' (கோட்டை நகரம்) பொதுவாக பெரிய கட்டடங்கள் கொண்டதாகவும் விசாலமாகவும் இருந்தன. கீழ்ப்பகுதி குடியிருப்புகள் எண்ணிக்கையில் அதிகமாகவும் அதிக இடைவெளியில்லாமலும் கட்டப்பட்டிருந்தன.
மொஹஞ்ஜோதரோவின் மேல் நகரம் 400 X 200 மீட்டர் என்ற அளவில் கம்பீரமான தோற்றத்துடனிருந்தது. அங்குதான் புகழ் பெற்ற 'பெரிய குளியல் மையம்' இருக்கிறது. அதன் மைய குளத்தில்தான் சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரமாண்ட 'கல்லூரி', தானியக் கிடங்கு, சபை மண்டபம் (அல்லது தூண்கள் கொண்ட அரங்கம்), நான்கு திசைகளிலும் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட அகன்ற வீதிகள் ஆகியவை காணப்பட்டன. இந்த விசாலமான மண்டபங்களில் அன்றைய அரசரோ அரசர்களோ தங்களுடைய அதிகாரிகள், வியாபரிகள் ஆகியோரைச் சந்தித்திருக்கக்கூடும். விசேஷ நாட்களில் முத்திரைகளைத் தயாரிப்பவர்கள், உலோகத் தொழிலாளிகள், கட்டடக் கலைஞர்கள், மண்பாண்டம் தயாரிப்பவர்கள், நெசவாளிகள் என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களைச் சந்தித்திருக்கலாம்.
அரசர்களையும் உயரதிகாரிகளையும் தவிர மற்றவர்கள் கீழ்ப்பகுதி நகரத்தில் வசித்தனர். அங்கு தெருக்கள் குறுகலாகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் அடுத்தடுத்தும் கட்டப்பட்டிருந்தன. ஒரு பெரிய வீடு இருந்ததென்றால் அதன் இரண்டு பக்கங்களிலும் நிறைய சிறிய வீடுகள் இருந்தன.
ஹரப்பா கொஞ்சம் சிக்கலான சித்திரத்தை வழங்குகிறது. அங்கு நான்கு குன்றுகள் இருந்தன. அவற்றுள் சில அடிமட்டத்தில் 14 மீட்டர் கனமுள்ள மதில் சுவர்களால் சூழப்பட்டிருந்தன. மனிதர்களோ, வாகனங்களோ நகரத்துக்குள் வருவதைக் கட்டுப்படுத்த அற்புதமான கதவுகள் நகரவாயிலில் இருந்தன. ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த இடத்திலிருந்த செங்கற்கள் போன்ற பொருட்கள் பெரிய அளவில் சூறையாடப்பட்டுவிட்டதால் அங்குள்ள கோட்டைகளின் ஒட்டுமொத்த அமைப்பைப் பற்றி நமக்கு இப்போது ஒன்றும் தெரியவில்லை. மேல் நகர அமைப்பு மட்டுமே சிதையாமல் இருந்தது. அது ஆச்சரியமூட்டும் வகையில் மொஹஞ்ஜோதரோவைப் போலவேதான் இருந்தது: 400 மீட்டர் X 200 மீட்டர். அங்கிருந்த பெரிய கட்டடங்களின் எண்ணிக்கை மொஹஞ்ஜோதரோவைவிடக் குறைவாகவே இருந்தன. அங்கிருந்த முக்கியமான கட்டடம் 50 து 40மீ அளவிலான தானியக்கிடங்கு. அது இரண்டு வரிசைகளில் மொத்தம் ஆறு அறைகளைக் கொண்டதாக இருந்தது (ஒவ்வொன்றின் அளவு 6மீட்டர் து 15மீட்டர்). அகழ்வாய்வுகளில் இருந்து தெரியவந்த விஷயம் என்னவென்றால், அங்கிருந்த நான்கு குன்றுகளிலும் மக்கள் ஒரே நேரத்தில் வாழ்ந்து வந்தனர். அது ஒரு தனி நகரமாக இருந்திருக்கிறது.
இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இங்கு உபயோகிக்கப்பட்டுள்ள 'கோட்டை நகரம்', 'சபா மண்டபம்', 'கல்லூரி', 'தானியக்கிடங்கு' ஆகிய சொற்களனைத்துமே ஒருவகையில் உத்தேசமான அர்த்தம் கொண்டவைதான். இவற்றில் பெரும்பாலானவை பிரிட்டிஷ் அகழ்வாராய்ச்சியாளர் ஆர்.ஈ.மார்ட்டிமர் வீலர் முன்வைத்தவைதான். வடக்கு ஆஃப்ரிக்காவில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பிரிகேடியராக இருந்த வீலருக்கு இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு 1944ல் தரப்பட்டது. இந்த நிறுவனத்துக்குப் புத்துயிர் ஊட்டிய அவர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வளர்ச்சியை ஒவ்வொரு கட்டமாகத் துல்லியமாக ஆவணப்படுத்த சிறந்த பாறைப்படிவியல் ஆய்வுமுறைகளை அறிமுகப்படுத்தினார். மார்ட்டிமர் வீலர் ஒரு முன்கோபி; ஆனால் பரந்த மனப்பான்மை கொண்டவர். உணர்ச்சிவசப்படக்கூடியவர்; ஆனால் கடின உழைப்பாளி. இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியில் தனது தனி முத்திரையைப் பதித்தார். தனது அகழ்வாராய்ச்சிக் கல்விப் பயிற்சியை ரோமாபுரி சாம்ராஜ்யத்தை மையமாகக் கொண்டு பெற்றிருந்ததார். எனவே, அந்த இடங்களைக் குறிக்க உபயோகிக்கப்பட்ட வார்த்தைகளையேதான் ஹரப்பா நகரங்களைக் குறிக்கவும் உபயோகித்தார். இதுதான் முன்பு சொல்லப்பட்ட 'கோட்டை', 'தானியக் கிடங்கு', 'கல்லூரிகள்', 'கொத்தளங்கள்' முதலிய வார்த்தைகள் இடம்பெறக்காரணம். உண்மையைச் சொல்லப்போனால் மண் குவியலுக்குள் புதையுண்டு கிடந்த பிரமாண்ட ஹரப்பா நகரக் கட்டடங்கள் என்ன பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்டிருந்தன என்பது யாருக்கும் தெரியாது.

உதாரணமாக, மொஹஞ்ஜோதரோவிலும் ஹரப்பாவிலும் வீலர் குறிப்பிட்டதுபோல பிரமாண்ட தானியக்கிடங்குகள் இருந்தனவா என்பதைச் சில அகழ்வாராய்ச்சியாளர்கள் சமீபகாலத்தில் கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்கள். அப்படி அடையாளப்படுத்த எந்த வலுவான ஆதாரமும் இல்லை என்பதோடு, இந்தப் பிரதேசங்களில் தானியங்களைப் பெரிய குதிர்களில் சேகரித்து வைப்பதுதான் வழக்கமாக இருந்தது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தவிரவும், அங்கு காணப்பட்ட பிரமாண்ட மதில் சுவர்களும் மலை நகர அமைப்பும் ராணுவப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்டனவா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
0
பெரும்பாலான வீடுகளில், சிறியவற்றிலும்கூட, குளியலறைகள் தனியாக இருந்தன. அந்தக் காலத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வசதி இது. இந்தக் குளியலறைகளில் நெருக்கி அடுக்கப்பட்ட செங்கற்களாலான சரிவான மேடை இருந்தது. வெளிச்சுவர் வழியாக ஒரு வடிகால் அமைக்கப்பட்டு குளியலறையிலிருந்து வெளியேறும் அழுக்கு நீர் ஓரிடத்தில் சேகரமானது. அந்த நீரானது, சுட்ட செங்கற்களால் வெகு துல்லியமாகக் கட்டப்பட்ட ஓடை வழியாகக் கொண்டுசெல்லப்பட்டது. குறிப்பிட்ட இடைவெளிகளில் கழிவுநீரில் இருக்கும் கசடுகளைப் பிரிக்கும் குழிகள் அல்லது குடுவைகள் வைக்கப்பட்டிருந்தன. மொஹஞ்ஜோதரோவில் கீழ்ப்பகுதி நகரத்தில் இருந்த சில வீடுகளில் நெடுக்குவாக்கிலான குழாய்கள் சுவரில் பதிக்கப்பட்டிருந்தன. அதாவது முதல் மாடியில் குளியலறை இருந்ததை அது குறிக்கிறது!
இம்மாதிரியான ஒரு கழிவு நீர் வடிகால் திட்டம் புராதன உலகில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ரோமாபுரி சாம்ராஜ்யம் தோன்றும் வரை, எங்குமே இருந்திருக்கவில்லை.இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்க வேண்டுமானால் சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். முதலாவதாக அழுக்குத் தண்ணீர் தடையின்றி வெளியேறும்படியாக ஒவ்வொரு வடிகாலின் சாய்மானமும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருக்கவேண்டும். அதாவது அங்கிருந்த வீடுகள் குறைந்தபட்சம் ஆரம்ப காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட உயரத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். பார்க்கப்போனால், ஒரே இடத்தில் அடுத்தடுத்தாற்போல கட்டப்பட்ட வீடுகளுக்கு ஒரே பொதுவான அஸ்திவாரமே போடப்பட்டிருந்தது.
இரண்டாவதாக, நகரத்தில் ஆங்காங்கே கட்டப்பட்ட கழிவு நீர்த்தொட்டிகளை அவ்வப்போது பரிசோதிக்கவும், அவற்றில் சேரும் கழிவுப்பொருள்களை வெளியேற்றவும், வேறு தடைகளிருந்தால் அவற்றை நீக்கவும் 'துப்புரவுத் தொழிலாளிகள்' இருந்திருக்கவேண்டும். இம்மாதிரியான கழிவு நீர் வடிகால் திட்டம் இருந்ததை வைத்துப் பார்க்கும்போது தெளிவான திட்டமிடல், சரியான முறையில் நடைமுறைப்படுத்துதல் ஆகியவை இருந்திருக்கவேண்டும். மேலும் செயல்திறம் மிகுந்த நகர அமைப்பும் இருந்திருக்க வேண்டும். இன்றைய சராசரி 'நவீன' இந்திய நகரங்கள்கூட இந்தத் தரத்துக்கு வெகு தொலைவில் இருக்கின்றன என்பதைச் சொல்லத் தேவையேயில்லை.
மூன்றாவது முக்கியமான நிபந்தனை என்னவென்றால், தாராளமாக தண்ணீர் கிடைத்திருக்கவேண்டும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு வழியைப் பின்பற்றியிருக்கின்றன. மொஹஞ்ஜோதரோவில் 600 முதல் 700 கிணறுகள் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலையின் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால் இது மிக அதிகமான எண்ணிக்கை. அந்த நகரத்தில் வசித்துவந்த மக்களுக்கு சராசரியாக 35 மீட்டர் தூரத்துக்குள் நல்ல தண்ணீர் கிடைத்தது என்று மீஷெல் யான்ஸன்2 கூறுகிறார். அந்த மக்களின் சம காலத்தைச் சேர்ந்த, உலகின் பிற பகுதிகளில் வசித்து வந்தவர்களால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. 1520 மீட்டர் ஆழம் கொண்ட அந்த உருளை வடிவ கிணறுகள், உளி வடிவ செங்கல்களால் துல்லியமாகக் கட்டப்பட்டிருந்தன. இந்த வடிவத்தின் மூலமாக அந்த செங்கல்கள் நீரோ மண்ணோ கிணற்றின் வெளிச் சுவர்களைத் அழுத்துவதில் இருந்து தடுக்க முடிந்தது. கருங்கற்களால் கட்டப்படும் கிணறுகள் எப்போதும் சந்திக்கும் பிரச்னையான உள் பக்கமாக உடைந்து விழுவதில் இருந்து தப்பிக்க மொஹஞ்ஜோதரோவாசிகள் கண்டுபிடித்த அருமையான வழிதான் இந்த உளி வடிவ செங்கல்கள். 'இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு வந்த ரோமானியர்கள்கூட செவ்வக வடிவிலான பொருட்களையே (பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்டவை) பயன்படுத்தினர். ஆனால், மண்ணின் அழுத்தத்தால் அந்தக் கிணறுகள் அடிக்கடி சரிந்துவிட்டன'3 என்று யான்ஸன் குறிப்பிட்டிருக்கிறார்.


=========
சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு
மிஷல் தனினோ
தமிழில் : வை. கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
பக்கம் 416 விலை ரூ.300
இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-635-3.html
ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement