Advertisement

அரசு பள்ளிகள் தரம் உயர வழி

சென்னை மாநகராட்சி, 300 பள்ளிகளை சென்னை பெருநகரத்தில் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இவை, நகரின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. கோடம்பாக்கம் பகுதியில் மட்டும், 1 கி.மீ., இடைவெளியில், ஐந்து பள்ளிகள் உள்ளன. இவை, கணிசமான நிலப்பரப்புடனும், கட்டடங்களுடனும், மற்ற அடிப்படை வசதிகளுடனும் நிறுவப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றின் இன்றைய மதிப்பு சராசரியாக, 10 கோடி ரூபாய்க்கும் அதிகம்.இவை தவிர, அரசு நடத்தும் நுாற்றுக்கணக்கான பள்ளிகளும் இயங்கி வருகின்றன. மாநில அரசும், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளும், பள்ளி செல்லும், 90 சதவீத குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறது.

கடந்த, 1970 வரை இத்தகைய மாநகராட்சி பள்ளிகளில் படித்த பலர், உயர்ந்த நிலையை எட்டியுள்ளனர். இவற்றில் குறிப்பிடத்தக்க சிலர், உலகளவில் நிர்வாகத்துறையின் குரு என்று போற்றப்பட்ட டாக்டர் சி.கே.பிரஹலாத்; மிகச்சிறந்த கல்வியாளரும், சமூக சிந்தனையாளருமான டாக்டர் பி.வி.இந்திரேசன்; இந்திய ராணுவத் தலைமை தளபதியாக பணியாற்றிய சுந்தர் ஜி.மாநகராட்சி பள்ளிகளோ, மருத்துவ மனைகளோ சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பணியாற்றி வந்தன. ஆனால், கடந்த, 40 ஆண்டுகளில் இவை அளித்து வரும் கல்வியின் தரம் மிகக் குறைந்து, பெரும்பாலான மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெருவாரியாக குறைந்து விட்டது.

இப்போதுள்ள, 284 பள்ளிகளில், 45 மாநகராட்சி பள்ளிகளில், 50 மாணவர்களுக்கும் குறைவு. ஏழு பள்ளிகளில், 20 மாணவர்கள் கூட இல்லை. சைதாப்பேட்டை உருது பெண்கள் பள்ளியில், வெறும் மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரே ஒரு ஆசிரியரே உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இவற்றில் சில பள்ளிகள் மூடப்பட்டு, அவற்றின் நிலம் மற்றும் கட்டடங்கள் மற்ற பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த காலகட்டத்தில், தனியார் பள்ளிகள் வேகமாக வளர்ச்சி பெற்று உள்ளன. இவற்றில் பல, மிக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றன. மாதாந்திர பயிற்சிக் கட்டணம் தவிர, நன்கொடை என்ற பெயரில், நுழைவுக்கட்டணமும் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. இவை வசூல் ராஜாக்களாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், இங்கு அளிக்கப்படும் கல்வியின் தரம் கருதி, நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களும் இந்த பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முயல்கின்றனர். 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற வாக்குக்கு ஏற்றபடி, தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் விரும்புகின்றனர்.இன்றைய காலகட்டத்தில் நிலம், கட்டடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் பள்ளி நடத்த, 20 கோடி ரூபாய்க்கு மேல் தேவை. இவை தவிர, ஆசிரியர் சம்பளம். இவ்வளவு செலவு செய்து இதை ஒரு அறக்கட்டளையாக நடத்துவது கடினம்.

மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்த, தனியார்களுடன் கூட்டாக இவற்றை நடத்தலாம். மாநகராட்சிப் பள்ளிகளின் நிர்வாகத்தையும், தனியார் வசம் ஒப்படைத்தால், அரசு சொத்து அவர்களிடம் போய்விடும் என்று, இதை எதிர்ப்பவர்கள் வாதிடுகின்றனர்; இது அர்த்தமற்ற பயமே.பல கோடி ரூபாய் முதலீடு செய்து, லாபகரமாக இயங்கும், பல புகழ் பெற்ற நிறுவனங்களுக்கு, பள்ளிகளின் தரத்தையும், நிர்வாகத்தையும் மேம்படுத்துவதே, முக்கிய நோக்கமாக இருக்க முடியும். மாநகராட்சி அத்தகைய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு, தரமான ஆசிரியர்களை நியமித்தல், மாணவர்களுக்கு சுகாதாரம், குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருவது போன்றவற்றில், அத்தகைய நிறுவனங்களுக்கு உரிமை தரலாம். இதனால், மாநகராட்சிக்கு எந்த கூடுதல் செலவும் ஏற்படாது.வெள்ளோட்டமாக, சில ஆண்டுகளுக்கு இத்தகைய உடன்படிக்கை ஏற்படுத்தி கொண்டு, மூடப்படும் நிலையில் உள்ள சில பள்ளிகளின் நிர்வாகத்தை, தனியார் வசம் ஒப்படைக்கலாம். தனியார் நிறுவனங்கள், அத்தகைய பள்ளிகளை, நல்ல முறையில் லாபகரமாக நடத்தி காண்பிக்கும் பட்சத்தில், ஒப்பந்த காலத்தை நீட்டிக்கலாம்.இப்போது, மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளின் குறைகள் என்ன?

*சரியான தரமான ஆசிரியர் இல்லாதது
*கல்வி சாதனங்கள் போதுமானதாக இல்லை
*கழிப்பறை, குடிநீர் வசதி குறைபாடு
*பராமரிப்பின்மை
*ஆங்கில மற்றும் இந்தி மொழிக்கல்வியில் கவனமின்மை
*நிர்வாகத்திறன் குறைவு
*பள்ளி ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதில் குறைகள்
*பாடத்திட்டங்கள் தேவைக்கேற்ப அளிக்காதது

தனியார் கல்வி நிறுவனங்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் பிறமொழிகள் கற்பதற்கு, தனிக் கவனம் செலுத்துகின்றன. மாநகராட்சி பள்ளிகளில், இத்தகைய வசதிகள் கிடைப்பதில்லை. வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கு பல மொழி தேர்ச்சி தேவை.இரண்டு ஆண்டுகளுக்கு முன், கணிசமான லாபம் சந்திக்கும் பெரிய நிறுவனங்கள், தங்கள் லாபத்தில் 2 சதவீதம், சமூக நலத்திட்டங்களுக்கு உதவ வேண்டுமென்று, புதுச்சட்டம் இயற்றினர். இதன்படி, நுாற்றுக்கணக்கான பெரிய நிறுவனங்கள், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளின் கணிசமான தொகை செலவழிக்க விருப்பம் கொண்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களில், பல சமூகநலனில் தனிக்கவனம் செலுத்த விளைகின்றனர். இவர்கள் ஒத்துழைப்புடன், மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை எளிதாக மேம்படுத்த லாம். இத்தகைய கூட்டு முயற்சி, 'அரசு - தனியார் பங்களிப்பு' என, பரவலாக இன்று பின்பற்றப்பட்டு வருகிறது.
*ஒரு பெரிய தொழில் நிறுவனம், மாதிரிப்பள்ளி ஒன்றை மேம்படுத்துவதில் ஈடுபட்டால், அப்பள்ளி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும்.
*மேலும், 2 கி.மீ., சுற்றளவில் உள்ள, பள்ளி செல்லத்தக்க குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தி, அவர்கள் இப்பள்ளிகளில் சேர, முழு உரிமை அளிக்கலாம். இதன்மூலம், 100 சதவீத சிறார்கள் கல்வி வசதி பெறுவர். தரமான கல்விக்கூடங்கள் அருகிலேயே அமையும் பட்சத்தில், தனியார் பள்ளிகளை நோக்கி, நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டிய தேவை இருக்காது.
*தனியார் நிறுவனங்களின் உதவி யால், மாணவர்களின் பொதுசுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற அத்தியாவசிய தேவைகளும்மேம்படும்.

மாநகராட்சியின் பங்கு: அந்தப் பள்ளிக்காக, இது வரை அளித்து வந்த சலுகைகள் தொடர வேண்டும். இதில் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம், சீருடை, பாடப்புத்தகங்கள், காலணிகள் மற்றும் பராமரிப்பு செலவுகளும் அடங்கும்.பள்ளிப் பாடத்திட்டங்களில் மாறுதல் இருக்கத் தேவையில்லை. பாடத்திட்டம், அரசு விதிமுறைகளின் படி கற்றுத் தரப்படும்.செயல்முறைப்படுத்துவதில், மாநகராட்சி கல்வி நிபுணர்கள் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படலாம்.தனியார் நிறுவனங்களை, ஏதோ கிழக்கிந்திய கம்பெனி அல்லது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களைப் போல் பார்க்கத் தேவையில்லை. இத்தகைய நிறுவனங்கள், அரசுடன் சேர்ந்து செயல்பட்டால், சமூகத்திற்கு பெரிய அளவில் நன்மை கிட்டும். இத்தகைய நிறுவனங்கள், லாப நோக்கிற்காக இம்முயற்சியில் ஈடுபடத் தேவையில்லை. அவர்கள் தற்போதைய நிலவரப்படி, 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து, புதிதாக இத்தகைய பள்ளிகளை நடத்த இயலாது. ஏற்கனவே இருக்கும் பள்ளிகளை மேம்படுத்த, இக்கூட்டு முயற்சி ஒரு எளிய திட்டம். மும்பை மற்றும் டில்லி மாநகராட்சிகள்,இத்தகைய திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்தி வருகின்றன.முன்மாதிரியாக, சில பள்ளிகளை தனியாருடன் சேர்த்து, கூட்டாகநடத்துவது ஒரு வரவேற்கத்தக்க புதிய முயற்சி. இதில் அரசியல் நோக்குடன் செயல்படாமல், தமிழகத்தின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு, தொலை நோக்குடன் செயல்பட வேண்டும்.
இ-மெயில்: indecom1968gmail.com
- சீனி விசுவநாதன் -
ஆசிரியர்,
இண்டஸ்ட்ரியல் எகானமிஸ்ட்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement