Advertisement

எண்ணிலா புலவர்களில் இவர் வெண்ணிலா! டிச. 11 - பாரதி பிறந்த நாள்

மண்ணை அடகுவைத்த மக்களை மீட்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தனிக் கவிஞர் பாரதி. உள்ளழகையே சொல் அழகாக்கிய சுதந்திர கவிதைகளுக்கு சொந்தக்காரர். வண்ணச் சிறகடித்து வசை களைய வந்த வான்குயில் பாரதி. தேச விடுதலை, மொழிப்பற்று, சுயமரியாதை என அவரது பரிணாமங்கள் பல. உலகெல்லாம் போற்றும் உயர்கவியாக ஒண்தமிழ் நாட்டில் உதித்த கவிஞர் பாரதி. பெண்ணாசையால் வாழ்ந்த அரக்கனின் அழிவை அறிவித்திட ஆதிகவியாக வந்தவர் கம்பர். மண்ணாசை மனதில் தங்கினால் அழிவே என்பதை விரிவாய் விளக்க வந்தவர் வில்லிபுத்தூரார். பொன்னாசையால் புகுந்த வெள்ளையர் கூட்டம் தன்னைக் கூண்டோடு விலக்கப் போர்க்கொடி உயர்த்திப் புதுக்கவி பாடவந்த புதுமைக் கவிஞர் பாரதி. ஆமையாய், ஊமையாய் அடங்கிக் கிடந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட பாரதி பாடிய ஒவ்வொரு பாடலும் உயர் காவியம். உயிர் ஓவியம். கன்னித் தமிழின் கவிதை வானில் எண்ணிலாப் புலவர்கள் வந்தாலும், வெண்ணிலாவாக விளங்குகின்றவர் கவிஞர் பாரதி. தன்னை உயர்த்த நினைக்காமல், தன் வாக்கால் தமிழை உயர்த்தித் தலைமை பெற்றவர்.

தன்னலமில்லா தங்க கவிஞர்:

வாழ்வை வளப்படுத்தும் வரங்களை வழங்கும் தெய்வத்திடம் தனக்கென எதையும் தா எனக் கேளாமல் மாநிலம் பயனுற மன்றாடி நின்றார். உலகைக் காக்கும் அன்னையைத் தனக்கு காவலாய் இருக்கக் கட்டளை இட்டவர் வேறு எவரும் இல்லை.


'வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே சொல்லடி சிவசக்தி; நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?'என்று பாடி பொது நலத்தையே வேண்டியவர் பாரதி.

சமூக அக்கறை உடைய சந்தக் கவிஞர்:

சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்க நினைப்பவர்களே நல்ல படைப்பாளிகள். கவிதையின் நோக்கம் பரவசப்படுத்துவதோடு பக்குவப்படுத்துவதும் தான் என்பதை உணர்ந்த கவிஞர். மக்களிடையே காணப்படும் குறைகளைக் களைய வேண்டும் என்று


'வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்திலென்பார்


அந்த குளத்திலென்பார் துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்


துயர்படுவார் எண்ணிப் பயப்படுவார்'

என்று பாடி மக்களின் மடமையைக் கண்டு நெஞ்சங் கொதித்த போதும் அவர்களுடன் தோளுடன் தோள் தொடர்ந்து வந்தவர் அவர். பாரதி மானுட நேய மலர்ச்சி நிறைந்த ஒப்பிலாக் கவிஞர். தீமையை எரிக்கத் தீப்பந்தம் ஆனவர். வேற்றுமைகளை எல்லாம் வெட்ட நினைத்தவர்.

'' மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ?


மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?''


என்று பாடி மனிதநேயத்தை உணர்த்தினார்.

வெள்ளையரை எதிர்த்த வீரகவிஞர்:

வெள்ளையரான கொள்ளையர்கள் ஓட சிறந்த கவிதைகளை இயற்றியவர். கூட்டுப் படைகளை குழியில் அமிழ்த்தப் பாட்டுப்படை நடத்தியவர். பாட்டுத் துப்பாக்கியால் தோட்டாச் சொற்களைச் சொருகி கவிதைப் போர் புரிந்தவர்.


'' ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?''


என்று பாடி நாட்டு மக்களுக்கும் விடுதலை வேட்கையை ஊட்டினார்.

பாரதியார் என்ற தீர்க்கதரிசி:

தொலைநோக்குப் பார்வை உடைய கவிஞரே சிறந்த கவிஞராக முடியும். பாரதி எதிர்கால இந்தியா வளமிக்க நாடாக வேண்டும் என்று அன்றே தேசிய நிர்மாணத் திட்டம் வகுத்தவர்.


'' சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்


சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்


வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்


மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்''


என்று பாடி நதிநீர் இணைப்புத் திட்டம், சேது சமுத்திரத் திட்டத்திற்கும் அன்றே பாதை வகுத்தார். வணிகம், அறிவியல், வளர்துறை அனைத்தையும் காவியம், ஓவியம் காண்பவை அனைத்தையும் ஒருமைப்பாட்டை உருவாக்கினால் நல் கருவிகளாக காண்போம் என்றே கவிகளை இயற்றினார்.

பெண்மையைப் போற்றிய பெருங்கவி:

அலங்கார பதுமையாகவும், அடிமைப் பொருளாகவும், அடங்கிக் கிடந்த பெண்மைக்கு உரிமைக்குரல் கொடுத்தவர் பாரதி. அவர் காலத்திலும், அதற்கு முன்பும் வாழ்ந்த மற்ற கவிஞர்களும் பெண்களின் கண்ணீரைத் தொட்டுத்தான் கவிதை எழுதினார்கள். ஆனால் பாரதி பெண்களின் கண்ணீரைத் துடைக்கக் கவிதைப் படைத்தவர். மாதருக்கும் இங்கே மா தருக்கு உண்டு என்று பெண்மையை உச்சிக்கு உயர்த்தி பெருமை சேர்த்தார்.

'பூணு நல்லறத்தோடு இங்கு பெண்ணுருப்


போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்'


என்று பாடிப் பெண்மையைத் தெய்வநிலைக்கு உயர்த்தினார் பாரதி. பாரதியின் புதிய பார்வைக்குச் சான்று கண்ணன் பாட்டு. கண்ணனைப் பெண்ணாக மாற்றி காதல் செய்தார். கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, குருவாக, குழந்தையாக, குல தெய்வமாக பார்த்து ரசித்துக் கவிதை செய்த பெருமை பாரதியை சேரும். பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியாக பாரதி கண்டது தெய்வ பாரத தேவி. அன்று கண்ணீர் விட்டு அழுதது பாஞ்சாலி அல்ல பாரதம் என்கிறார் பாரதி. மண்ணை மீட்க மறப்போர் நிகழ்த்திய கண்ணனே எனக்குக் காதலன் என்கிறார் பாரதி.


'' இது பொறுப்பதில்லை தம்பி


எரிதழல் வைத்திழந்தான் அண்ணன்


கையை எரித்திடுவோம்'' என்று வீமன் பொங்கியதைப் போல, தாயகப் பற்றிலா மக்களைத் தமது தமிழால் எரிக்கத் தாவினார். பறவை இனத்தில் காதல் வெறியில் ஆண்குயில் தான் அழகாகக் கூவும். பெண்குயில் இங்கே கூவியதாகப் பண்குயில் பாரதியார் குயில்பாட்டு பாடியிருக்கிறார். ஆன்மா அனைத்தும் இறைவனையே நாட வேண்டும் என்பதை வேதாந்தமாக கூறினார். தத்துவ மறைபொருளை கத்தும் குயிலின் குரலிலே சேர்த்து உரைத்தார் பாரதி.

புதிய ஆத்திசூடி தந்த புரட்சிக் கவிஞர்:

அவ்வைப் பாட்டியின் பழந்தமிழைப் பாங்காய் திருத்தி நீட்டிய பாரதியாரது நீதிநூலில் ஈட்டியாய் சொற்கள் எதிர் வருகின்றன. நாளும் வறுமையில் வாடும் மக்களைப் பார்த்து அவ்வைப் பாட்டி நமக்கு மீதூண் அதுவும் வேண்டாம் என்கிறாள். ஆனால் உக்கிரம் கொண்ட பாரதியாரோ உணர்ச்சி மேலோங்க 'ஊண்மிக விரும்பு' என்றார். நலிவை எதிர்த்த பாரதி 'கோல் கை கொண்டு வாழ்க' என்றும் 'நையப்புடை' எனவும் சொல்கிறார். 'கேட்பிலும் துணிந்து நில்' என்று பாட்டையேத் தீப்பந்தம் ஆக்கினார். நாட்டு வெடி போல நாவிலும் பழமைப் பாட்டு வெடியால் தகர்த்தவர் பாரதி. தான் கண்ட எல்லாவற்றிலும் புதுமையை, புரட்சியை வளர்த்த மகாகவிஞனை வணங்கி மகிழ்வோம்.

- முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, உதவிப் பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை. 94437 28028.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement