Advertisement

மறைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் : இன்று சர்வதேச மனித உரிமை நாள்

பொது நல வழக்குகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி ஆகியோர் மனித உரிமைகள் மீறப்படும் போது, பாதிக்கப்பட்டோர் தான் சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட்டை அணுகி வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை, நாட்டில் பெரும்பாலான மக்கள் கல்வியறிவு குறைந்த ஏழைகளாக உள்ளனர், மக்களின் பிரச்னைகளை தீர்க்க பொது நலனில் அக்கறை கொண்ட தனி நபர்களோ, தொண்டு நிறுவனங்களோ அணுகலாம் என குறிப்பிட்டனர். அதன் பிறகு தான் பொது நல வழக்காடுதல் என்பது நடைமுறைக்கு வந்தது.

எவை மீறல்கள் :நீண்ட காலமாக மனித உரிமை மீறல்கள் என்பது போலீசார் சாமான்ய மக்களை கண்மூடித்தனமாக தாக்குவது, 24 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்தாதது, போலீஸ் காவலில் அடைப்பது, போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்வது என பொருள் கொள்ளப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட், மனித உரிமை மீறல்கள் என்பது பெண்களுக்கு எதிராக தனிநபர்கள், அவரது குடும்பத்தினரால் இழைக்கப்படும் குற்றங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான செயல்பாடுகள், குழந்தைகள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர், திருநங்கைகள், கொத்தடிமைகளுக்கு எதிரான வன்முறைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, அடிப்படை கல்வி உரிமை மறுப்பு, மருத்துவ வசதியின்மை போன்றவைகளும் தான் என சுட்டிகாட்டியது.

அதிகரிக்கும் மீறல்கள் :மனித உரிமைகள் என்பதற்கான பொருள் ஒவ்வொரு நாளும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. மனித உரிமை மீறல்கள் குறித்து அறியும் போது நம்மால் என்ன செய்ய முடியும்? என இயலாமை கொள்ள தேவையில்லை. பொது நலனில் அக்கறை கொண்ட யார் வேண்டுமானாலும் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரலாம். அதற்கு முன்னதாக மனித உரிமை மீறல் குறித்து உண்மையை விசாரித்து அதுகுறித்த புகாரை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பலாம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் ஐகோர்ட், மாவட்ட கோர்ட்களில் செயல்படும் சட்ட பணிகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பலாம். அவர்களே வக்கீல்களை நியமித்து மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்.
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993ல் இயற்றப்பட்டது. இதன்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமை கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டன.

தகுதியில்லாத புகார்கள் :தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்கள் புகார்கள் மீதான நடவடிக்கைகளுக்கான நடைமுறைகளை உருவாக்கியுள்ளன. அதன்படி ஒரு ஆண்டுக்கு முன் நடந்த சம்பவங்கள் தொடர்பான புகார், கோர்ட் விசாரணையிலுள்ள விஷயங்கள், .ெதளிவில்லாத பெயரில்லாத கடிதங்கள், அற்பமானவை போன்றவைகள் ஆய்வுக்கு எடுக்கப்படுவதில்லை. ஆணையங்கள் புகார்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரிக்கும். இந்த விவரங்கள் புகார்தாரர்களுக்கும் தெரிவிக்கப்படும். மனித உரிமை மீறல் நிரூபணமானால், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு, உரிய நிவாரணம், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை இருக்கும்.ஏர்வாடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு துன்புறுத்தப்பட்ட புகார் போன்றவைகளில் பல பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசு அவற்றை நடைமுறைப்படுத்தாவிட்டால் ஆணையம் ஐகோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட்டை அணுகும்.அரசின் எந்தவொரு துறையும் மக்களுக்கான பணிகளை செய்யாமல் காலம் தாழ்த்தினாலோ, செய்யக்கூடாதவற்றை செய்தாலோ, சட்ட விரோதமாக போலீசாரோ, தனிநபரோ யாரையாவது அடைத்து வைத்திருந்தாலோ இப்படி அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்தால் ஐகோர்ட்டை அணுகலாம்.

சுப்ரீம் கோர்ட் விளக்கம் :விபத்தினாலும், தாக்குதலாலும் காயம்பட்டோருக்கு காவல் துறைக்கு தகவல் தராமல் சிகிச்சையளிக்க முடியாத நிலை இருந்ததை சுப்ரீம் கோர்ட் மாற்றி, 'காயமடைந்தோருக்கு முதலில் தேவை சிகிச்சை தான். எனவே அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்கலாம். சட்ட நடைமுறைகள் அதன் பின் தான்,' என பரமானந்த்கட்ரா வழக்கில் தீர்ப்பளித்தது.அனைத்து அரசு பள்ளிகளிலும் குடிநீர், தண்ணீர், கழிப்பறை வசதி செய்ய வேண்டும் எனவும், சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பிற்கு காரணமான சீமை கருவேலமரங்களை அகற்ற வேண்டும் எனவும், நான்கு வழிச்சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் எனவும் முக்கிய உத்தரவுகள் மனித உரிமை மீறல் புகார் அடிப்படையில் மதுரை ஐகோர்ட் கிளையால் பிறப்பிக்கப்பட்டன.

ெவளிவராத மீறல்கள் :மனித உரிமைகளை பாதுகாக்கவும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் நாட்டில் கோர்ட் மற்றும் மனித உரிமை ஆணையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மனித உரிமைகளை மீறுவோர்களை தண்டிக்க கடுமையான சட்டங்களை சட்டசபையும், பார்லிமென்ட்டும் கொண்டு வந்துள்ளன. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் பொருளாதாரம், கல்வி, சமூக நிலையில் பின்தங்கியவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். எனவே தான் மனித உரிமை மீறல்களில் மிக குறைவான மீறல்களே பதிவாகும் நிலையுள்ளது. பெரும்பாலான மனித உரிமை மீறல்கள் சட்டத்தின் முன் வராமல் மறைக்கப்படுகின்றன. மனித உரிமைகளை போற்றி பாதுகாக்கப்படும் நாட்டில் தான் மக்கள் மகிழ்வுடன் வாழ்வர். அந்த நாடும் நாகரிகத்தில் உயர்ந்ததாக கருதப்படும். குடிமக்களின் மனித உரிமைகளை பேணி காக்கும் பணி நம் அனைவருக்கும் உள்ளது.

நீதிபதியின் தீர்ப்பு:மறைந்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பில் கூறினார். ''எனது எதிர்வீட்டுக்காரரை கைது செய்ய வந்த போது நான் ஏதும் பேசவில்லை, எனது பக்கத்து வீட்டுக்காரரை பிடிக்க வந்த போது நான் வாயை திறக்கவில்லை, பிறகு அவர்கள் என்னை பிடித்து கொண்டு போக வந்த போது, எனக்காக பேசுவதற்கு அங்கு யாருமே இல்லை,'' எனக் குறிப்பிட்டார்.நமக்கு எவ்வளவு பணிகள் இருந்த போதிலும், மனித உரிமை பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை அறியும் போது, அதுதொடர்பாக இரங்கலையும், நமது ஆற்றாமையையும் மட்டும் .ெவளிப்படுத்தாமல் நீதி கிடைக்க நம்மாலான சிறிய பணிகளை மேற்கொள்வோம் என சர்வதேச மனித உரிமை நாளாகிய இன்று ஒவ்வொருவரும் உறுதி ஏற்றால் நல்ல வளமான, வலிமையான சமூக அமைப்பு உருவாகும்.
-ஆர்.அழகுமணி,
வக்கீல்,
மதுரை. 98421 77806.
r.alagumaniyahoo.co.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement