Advertisement

பின்னோக்கிய பெரும் பாய்ச்சல்

கால எந்திரத்தில் பயணிக்க இரண்டாவது வாய்ப்பு தரப்பட்டால் நான் எந்தத் தயக்கமும் இல்லாமல் பொ.யு.மு. 2700ம் ஆண்டுக்குத்தான் செல்ல விரும்புவேன். ஏனெனில், அந்தக் கால அளவில்தான் புதிரான ஏதோவொன்று நடக்க ஆரம்பித்திருந்தது. அப்போது நடந்த சிக்கலான நிகழ்வுகளைப் பற்றி இன்றுவரை நாம் முழுதாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை. குறைந்தபட்சம் கடந்த 4000 ஆண்டுகளாக சில கங்கைச் சமவெளிப்பிரதேசத்தில் மக்கள் குடியேற்றம் தொடங்கிவிட்டிருந்தது. அந்தக் குடியேற்றமானது விவசாயம், தொழில்நுட்பம் (குறிப்பாக உலோகவியல்), கைவினைக் கலைகள் ஆகியவற்றில் மிகவும் மெதுவாக வளர்ச்சியடைந்துவந்திருக்கிறது. திடீரென்று, குறுகிய காலகட்டத்தில், ஒரு நூற்றாண்டுக்குள்ளாக, இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் முற்றிலும் வேறுபட்ட குடியிருப்புகள் உருவெடுத்தன: நகரங்கள்; விரிவான, நன்கு திட்டமிடப்பட்ட நகரங்கள். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் இடைவெளியில், நன்கு திட்டமிடப்பட்ட நகரங்கள் தலையெடுத்தன. பொ.யு.மு. 2600ம் ஆண்டுவாக்கில் ஒன்றுக்கொன்று இறுக்கமான தொடர்பு வலைப்பின்னல் மூலம் அவை சிறந்த முறையில் செயல்படத் தொடங்கியிருந்தன. ஏறக்குறைய ஏழுநூறு ஆண்டுகள் அவை செழித்து வளர்ந்தன. பின்னர் நலிவடைந்தன; பிறகு மண்ணிலும் மணலிலும் புதைந்தன. கடைசியில்...முன்னோடிகள்கக்கர் ஹக்ரா வழியாக தில்லியிலிருந்து சிந்து பிரதேசத்துக்கு ஒரு 'புதிய பாதையை' அமைப்பதற்காக மேஜர் மெக்கீஸன் 1844ல் அரசாங்கத்துக்கு சிபாரிசு செய்ததை ஏற்கெனவே பார்த்தோம். எனினும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷார் பஞ்சாபை இணைத்துக்கொண்ட பிறகு இந்தப் பாதைக்குத் தேவையில்லாமல் போயிற்று: அப்போது செய்யவேண்டியிருந்ததெல்லாம் பஞ்சாபுடனும் அதன் வழியாகவும் தொடர்புகளைப் பலப்படுத்துவதுதான். அதை மிகச் சரியாகவே பிரிட்டிஷார் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் அறிமுகப்படுத்திய தந்தி, ரயில்வே முதலியவை இந்தியாவுக்கு 'முன்னேற்றத்தை' கொண்டுவந்ததாக எப்போதும் சொல்லப்படுவது வழக்கம். நடைமுறையில் அவை இந்தப் பெரிய நிலப்பகுதியை பிரிட்டனின் 'மாட்சிமை பொருந்திய ஆட்சி'யின் கட்டுப்பாடுக்குள் வைத்திருக்கச் செய்தாகவேண்டிய முதலும் முடிவுமான கருவிகளாகவே இருந்தன. இதன் பொருட்டு 1850களின் பிற்பகுதியில் பஞ்சாப் வழியாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக, லாகூருக்கும் முல்தானுக்கும் இடையில் ராவி நதிக்குத் தெற்கே சிந்துப் பகுதியின் வழியாக ஒரு ரயில்தடம் போடப்பட்டது. ஆனால், ரயில் பாதையை அமைக்க பலமான அஸ்திவாரம் வேண்டுமே, பஞ்சாப் போன்ற வண்டல் மண் நிறைந்த இடங்களில் இப்படிப்பட்ட அஸ்திவாரக் கற்களை எங்கே தேடுவது? சூறையாடத் தோதாக ஒரு பழைய சிதிலமடைந்த நகரமும் டன் கணக்கில் அதி அற்புதமான செங்கற்களும் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம்தான். மிகச் சரியாக அதுதான் நடக்கவும் செய்தது. பஞ்சாபின் ஸஹிவால் மாவட்டத்தில் இன்று ராவி நதி ஓடிக்கொண்டிருக்கும் இடத்துக்குப் பன்னிரண்டு கிலோமீட்டர் தெற்காக ராவியின் பழைய படுகை இருந்தது. அதன் கரையில் ஹரப்பா என்ற கிராமத்தில் காணப்பட்ட பெரிய குன்றுகள்தான் இந்த ரயில்பாதை அமைக்கும் பணிக்குக் கை கொடுத்தன. 'ஹரப்பா' என்ற இந்தப் பெயர் உலகப் புகழ் பெறப்போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதிலும் அன்றைய மேற்கு மண்டல ரயில்வே பொறியாளர்களுக்கு அங்கு இருந்த செங்கற்களை, வண்டி வண்டியாக வெட்டி எடுக்க வேண்டிய குவாரியாகப் பார்க்கும் கண்கள் மட்டுமே இருந்தன. இந்தச் செங்கற்களை எடுத்துக்கொண்டுச் செல்வதற்கென்றே தனியாக ஒரு சிறிய ரயில்பாதையும் அமைக்கப்பட்டது. முன்பு மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்ட செங்கற்கள் இப்போது ரயில் வண்டியில் பெயர்த்தெடுத்துக் கொண்டு செல்லப்பட்டன. 1853லும், பின்னர் 1856லும் அந்த இடத்துக்கு விஜயம் செய்த அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தலைவர் என்ற நிலையில் 1872ல் மீண்டும் அங்கு சென்றார். அவருடைய அறிக்கையில் அந்தப் பிரதேசங்களில் தான் முன்பு கண்ட பிரமாண்ட புராதனக் கோட்டைகளின் மதில்கள் காணாமற்போய்விட்டன என்றும், 160 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்ட லாகூர் முல்தான் ரயில் பாதைக்கு அவை அஸ்திவாரக் கற்களாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன என்றும் வேதனையுடன் எழுதியிருந்தார்.கச்சிதமான, துல்லியமான அளவில் இருந்த இந்தச் சுடுசெங்கற்களை யார் தயாரித்திருப்பார்கள்? கன்னிங்ஹாமுக்கோ அவருக்கு முன் ஹரப்பாவுக்குச் சென்றவர்களுக்கோ இதைப் பற்றி ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. அன்றைய தேதியில் இந்திய அகழ்வாய்வுப் பகுதிகள் மௌரிய காலகட்டத்தைச் சேர்ந்தவையாகவே இருந்தன. ஆகவே, இந்தப் பகுதியும் மௌரியர் காலத்தை, குறிப்பாக 'புத்தரின் கால'த்தைச் சேர்ந்ததாக இயல்பாகவே கன்னிங்ஹாம் நினைத்துவிட்டிருந்தார். ஏனென்றால், அவருடைய காலப் பகுப்பு மதத்தின் அடிப்படையிலானதாகவே இருந்தது (புத்தர் காலத்துக்கு முந்தையது 'பிராமணர்கள் காலம்'. இந்த அர்த்தமற்ற பகுப்பு சில இந்தியவியல் ஆய்வுகளில் இன்றும் காணப்படுகிறது).பொ.யு. ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் இந்தியாவுக்கு விஜயம் செய்த நேரத்தில்கூட ஹரப்பாவில் மக்கள் வாழ்ந்து வந்திருந்தார்கள் என்று கன்னிங்ஹாம் எண்ணினார். ஹரப்பாவில் கிடைத்த கறுப்பு கல் முத்திரையைப் பரிசோதித்தபோது அதில் ஒரு காளையின் உருவமும் வேறு சில புரியாத எழுத்துகளும் செதுக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். கன்னிங்ஹாம் அதை சுமார் பொ.யு.500 அல்லது 400ம் ஆண்டைச் சேர்ந்த ஏதோ ஒரு வழக்கொழிந்த மொழியில் எழுதப்பட்ட எழுத்துகள் என்றே கருதினார். அவருடைய மூன்று யூகங்களும் தவறாக இருந்தன. ஆனால், அந்த முத்திரையும் எழுத்தும் அவருடைய ஆவலைத் தூண்டிவிட்டன.வரலாற்றறிஞர்கள் உபீந்தர் சிங்கும் நயன்ஜோத் லாஹிரியும் இந்தியாவின் புதைபொருள் ஆராய்ச்சியின் தொடக்கால வரலாற்றைப்பற்றி இரு முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளனர். 1885ல் கன்னிங்ஹாம் பணி ஓய்வு பெற்றார். அதற்குப் பிறகு இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தது. பெரிதும் பிந்தையதே நடந்தது. 1899ல் இந்தியாவின் வைஸ்ராயாகப் பதவியேற்ற கர்சன் பிரபு இந்தத் துறையைத் திருத்தியமைக்க உடனே நடவடிக்கை எடுத்தார். இளமைத் துடிப்பு மிகுந்த ஒருவரை இந்தத் துறையின் இயக்குநராக நியமிக்க விரும்பினார். அதற்குமுன் இந்தத் துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்துவந்த தொகை காலப்போக்கில் குறைக்கப்பட்டு அந்தப் பதவியும் நிறுத்தப்பட்டிருந்தது. இருபத்தைந்து வயதான ஜான்மார்ஷல் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கிரேக்கம், க்ரீட், துருக்கி ஆகிய நாட்டு அகழ்வாராய்ச்சியில் நல்ல பயிற்சி பெற்றவர். 1902ம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியாவுக்கு வந்த மார்ஷல் தன் முதல் பணியை ஆரம்பித்தார்: தான் அதுவரை அறிந்திராத ஒரு நாடு பற்றி பரிச்சயப்படுத்திக் கொண்டது நீங்கலாக, மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்த பல நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் பணிகளையும் ஆரம்பித்தார். இந்த விஷயம் கர்சனின் மனத்தில் முன்பாகவே முக்கிய இடம் பிடித்திருந்தது. இவர் வங்காளத்தில் செயல்பட்டவிதம் மோசமாக இருந்தாலும், தொல் பொருட்களைக் காப்பதில் அவர் காட்டிய இந்த அக்கறையை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. இவர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமலிருந்திருந்தால், இந்தியாவின் நூற்றுக்கணக்கான புராதன, மத்திய கால நினைவுச் சின்னங்கள் அழிந்துபோயிருக்கும்.கர்சனின் சிஷ்யர் ஜான் மார்ஷல் தனது வேலையில் முழு உற்சாகத்துடன் ஈடுபட்டார். தன் ஆய்வுத்துறை அதிகாரிகளுக்கு நல்ல உத்வேகம் ஊட்டினார். விலை மதிப்பு மிகுந்த பழம் பொருள்கள், நினைவுச் சின்னங்களை அடையாளம் காட்டித்தர உள்ளூர் பண்டிதர்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டார். புத்தர் காலத்திய இடங்களையும் வேறு புராதன இடங்களையும் கண்டுபிடித்து அவற்றைப் பாதுகாப்பது, முடியுமானால் அங்கு அகழ்வாராய்ச்சி செய்வது ஆகிய அனைத்தையும் செய்தார். அதே சமயம் அவர் மனத்தில் ஒரு மூலையில் ஓர் புதிரான விஷயம் இருந்துகொண்டே இருந்தது: அப்போது கைவசம் இருந்த அகழ்வாராய்ச்சி ஆவணங்களில் இந்தியாவில் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த இடங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லப்படாததையும் கவனித்தார். ஏனெனில், மார்ஷல் பணிபுரிந்த எகிப்து, மெசபடோமியா, ஏஜியன் தீவுகள் ஆகிய இடங்களில் க்ரீட்டின் மினோவன் நாகரிகம் போன்றவை கடந்த சில பத்தாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. வெண்கலக்காலம் என்பது புதிய கற்காலத்துக்கும் (Nஞுணிடூடிtடடிஞி அஞ்ஞு) இரும்புக் காலத்துக்கும் (ஐணூணிண அஞ்ஞு) இடைப்பட்ட காலம் என்று தெரியவந்துவிட்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் மனித நாகரிகம் வேகமாக வளர்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரையில் தாமிரத்தாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட ஒரு சில கருவிகள் அங்குமிங்கும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்தக் காலகட்டத்தைக் குறிக்கும் முழு நிலப்பரப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இரும்புக் காலம் பொ.யு.மு.800 வாக்கில் தொடங்கியதாகக் கருதப்பட்டது (ஆனால், கங்கைச் சமவெளியில் கிடைத்த தடயங்கள் இதை இன்னும் ஓராயிரமாண்டுகளுக்கு முற்பட்டதாகத் தள்ளிவிட்டிருக்கிறது). அந்தப் புகை மூட்டமான காலகட்டத்துக்கு முன்பாக எதுவுமே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
=========சரஸ்வதி : ஒரு நதியின் மறைவுமிஷல் தனினோதமிழில் : வை. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 416 விலை ரூ.300இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-635-3.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement