Advertisement

டிக்... டிக்... டிக்... வாழ்க்கையில் 'நேர மேலாண்மை'

ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியும், வெற்றியும் அவன் காலத்தை கையாளும் விதத்தை பொறுத்தே அமைந்துள்ளது. இயற்கை எல்லோருக்கும் ஒரே நேர அளவைத்தான் அளிக்கிறது. வித்தியாசம் ஏதுமின்றி எல்லோருக்கும் பொருத்தமான வகையில் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்களே சமுதாயத்தில் வெற்றியாளர்கள் எனக் கண்டறியப்படுகிறார்கள்.

காலம் 'பெரும் வளம்', 'கண் போன்றது' என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த காலத்தை விவரித்துப் பார்த்தால் அதற்குள் அமைந்திருக்கும் அர்த்தம் மிகவும் இனிமையானது மட்டுமல்லாது வல்லமை படைத்ததாகவும் இருப்பதை காணமுடியும். காலத்தை ஒரு குறிப்பிட்ட நேர அளவு என்னும் நிலையில், அந்த அளவிற்குள் நமது பல்திறன் ஆற்றலைப் பயன்படுத்தி வாழ்க்கைக்கு தேவையான பயன்களை அடையவேண்டியுள்ளது என்ற உண்மை புலப்படும்.

நேர மேலாண்மை :காலத்தை சரியான முறையில் 'நேர மேலாண்மை' என்ற கருத்தின் அடிப்படையில் அணுகினால் தான், நாம் ஆரோக்கியமாகவும், மனமகிழ்ச்சியாகவும் பொருளாதாரப் பலன்களைப் பெற்றவர்களாக வளர்ந்து, சமுதாய ரீதியில் உயர்வு பெறமுடியும். வாழ்க்கையில் சாதனை படைத்தவர்கள் அனைவரும், காலத்தை மதிக்கத் தெரிந்தவர்கள். காலவிரயம் இல்லாமல் தங்கள் வாழ்க்கைப் பாதையை நெறிப்படுத்திக் கொள்பவர்களுக்கே அற்புதமான வெற்றிகள் காத்திருக்கின்றன.

யார் மீது குறை :எனக்கு நேரமே கிடைப்பதில்லை. 24 மணி நேரமும் எனக்கு போதாது. நிறைய வேலைகள் பாதியிலே கிடக்கின்றன என்று பலரும் புலம்பக் கேட்டிருக்கிறோம். இவர்கள் எல்லாம் சரியான திட்டமிடல் இல்லாததாலும், ஒரு காரியத்தை முறையாக செய்யத் தவறிய காரணத்தினாலும், பொதுவாக காலத்தை குறை சொல்லுகிறார்கள்.தேனீக்களைப் போல் சுறுசுறுப்புடன் இயங்கும் மனிதர்கள் பலரும் நம் கண் முன்னே தோன்றத் தான் செய்கிறார்கள். ஆனாலும் காலத்தை கையாளத் தெரியாதவர்கள் இன்னும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக எடுத்துக் கொள்ளலாம்.

சரியான திட்டமிடல்:ஒவ்வொரு காரியத்தை செய்வதற்கும் முன்பாக எதை செய்யப்போகிறோம்? எதற்காக செய்யப் போகிறோம்? அது செய்வதற்கான என்னென்ன திறன்கள், என்னென்ன முயற்சிகள் தேவையென்று மனதில் பட்டியலிட்டு அதை செய்ய ஆரம்பிக்க வேண்டும். பட்டியலை ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொள்ளும் முறையை பயன்படுத்திப் பார்த்தால் திட்டத்தை விரைவாக செய்வதற்கு எளிய வழி என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும்.எல்லா வேலையையும் ஒரே கண்ணோட்டத்தில் இழுத்துப்போட்டுக் கொண்டு சிறப்பாக செய்ய முடியாமல் வருத்தப்படுவதற்கு பதிலாக, என்னென்ன காரியங்களை முதலில் செய்ய வேண்டும், என்பதை முதலில் வரையறை செய்து கொள்ள வேண்டும். நமது வாழ்க்கை முறைக்கு அவசியம் என்று எதை கருதுகிறோமோ? அந்த காரியத்தை செய்து முடிப்பதற்கான முக்கியத்துவம் கொடுத்து முயற்சிகளை முதலில் எடுப்பது நல்லது.அவசரமான காரியங்களை தெரிந்து கொண்டால் அதை தள்ளிப்போடாமல் உடனடியாக செய்து முடிக்க பழக வேண்டும். அவசரமான வேலைகளுக்கு உடனடி தீர்வு தேவைப்படும். அதை தள்ளிப்போடுவது ஆரோக்கியமானது அல்ல. அவசரம் என்ற வார்த்தையை நமது அகராதியிலிருந்து அழிக்கப் பழகிக் கொண்டால் வாழ்க்கையில் நிதானம் கிடைக்கும். நிதானமாக செய்யும் காரியங்கள் மிகவும் நேர்த்தியான பலன்களைத் தரும். 'பதறாத காரியம் சிதறாது' என்பது ஆன்றோர் வாக்கு.

சிந்திக்க... செயல்பட :காலம் தண்ணீரைப் போன்றது. இரண்டையும் செலவழித்து விட்டால் அவை மீண்டும் நமது கையில் இருப்பதில்லை. ஆகையால் நேரத்தை முழுமையான வகையில், நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.எதையுமே தள்ளிப் போடாமல் அவ்வப்போது செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். சோம்பேறித்தனத்தின் அடையாளம் தள்ளிப்போடுவது. வெற்றியாளர்களின் அடையாளம் உடனே செய்வது. நாம் என்னவாக இருக்க வேண்டுமென்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.அத்தியாவசியப் பணிகளுக்கு போதிய நேரம் கொடுக்காமலும், முக்கியமில்லாத பணிகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவதும் தெரிந்தால், அதை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். நமது வாழ்க்கை வாழ்வதற்காகவும், சாதிப்பதற்காகவும் என்று எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் லட்சியங்கள் தேவை. சிறந்த நேர மேலாண்மையை கையாளும்போது தான் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தின் அடையாளத்தை கண்டு கொள்ள முடியும்.சிறந்த நேர மேலாண்மை மிக்க நபர்களாக வாழ்க்கையில் நம்மை பக்குவப்படுத்திக் கொண்டு வெற்றி பெற இனிமையான பயணத்தை இன்றே துவங்க கற்றுக் கொள்வோம்.
- நிக்கோலஸ் பிரான்சிஸ்
மனிதவள மேம்பாட்டு
பயிற்சியாளர்,
மதுரை. 94433 04776

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement