Advertisement

சிரமம் தாண்டிய சிகரங்கள்: டிச.3 -உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

கண் வலிக்காரர்களைக் கண்டவுடன் ஒதுங்குகிற நாம் அவநம்பிக்கைக்காரர்களை அருகில் வைத்திருக்கிறோம். அவநம்பிக்கையைப் புறந்தள்ளி நம்பிக்கையின் அடையாளமாய் திகழும் சிரமம் தாண்டிய சிகரங்கள் சிலரை இந் நாளில் நினைப்பது இனிமையானது.

அனைத்து உறுப்புகளும் பெற்றிருந்தும் மனவலிமையில்லாதவர்களுக்கு மத்தியில் ஓரிரு புலன்கள் அதன் பணியைச் செய்யாவிட்டாலும்கூட, மனஉறுதியோடு மாற்றுத்திறனை வளர்த்துக்கொண்டு சாதனையாளர்களாய் தடம்பதித்து வரலாற்றில் இடம்பிடித்த மாற்றுத்திறனாளிகள் மகத்தான சாதனையாளர்கள்; பிரியத்தைப் பிரியமாகப் புரியவைப்பதில்தான் வாழ்க்கை வாழ்கிறது. வாழ்வில் பிரியம் வைத்து தடைகளை உடைத்தெறிந்தவர்களின் வாழ்க்கை நமக்கு நம்பிக்கை தருகிறது.

இலக்கியம் படைத்த இரட்டைப் புலவர்கள்: எண்ணம் கிண்ணம் போன்றது, ஊற்றியதை ஏற்றுக்கொள்ளும் அப்படியே தன் வடிவத்தில். ஒருவர் கண்களால் மற்றவர் பார்த்து, ஒருவர் கால்களால் மற்றவர் நடந்த அதிசயம் நடந்தது அவ்விருவர் வாழ்விலே. சோழ நாட்டில் பிறந்த இளஞ்சூரியர்,முதுசூரியர் எனும் இருபுலவர்கள் தில்லைக் கலம்பகம் உள்ளிட்ட அரிய இலக்கியங்கள் படைத்த சாதனையாளர்கள். நினைத்தவுடன் கவிபாடும் ஆற்றல் மிக்கவர்கள். இவர்களில் ஒருவருக்குப் பார்வைத்திறன் கிடையாது, மற்றொருவருக்கு நடக்க இயலாது. நடக்க இயலாதவரை கண்பார்வைத்திறனற்ற புலவர் தூக்கித்தன் தோள்களில் வைத்து மேலே அமர்ந்தவர் பார்த்துச் சொல்லும் திசையில் நடப்பாராம். நடக்க இயலாதவர் செய்யுளின் முதலிரு அடிகளைப் பாட பார்வையற்றவர் அவர் பாடியதைக் கேட்டு சரியாக அச்செய்யுளைப் பாடிமுடிப்பாராம். ஒருவர் புலன்களை மற்றவர் பயன்படுத்தி இறவா இலக்கியங்களைப் படைத்தது சாதனைதானே.

இசைமேதை பீதோவன்: உலகின் பிரபலமான இசைமேதையாகத் திகழ்ந்த பீதோவன், கடினமான சிம்பனியில் பாடலையும் சேர்த்து 'கோரல் சிம்பனியை' உருவாக்கி இசை ரசிகர்களின் காதுகளைக் கவுரவப்படுத்தியபோது அவர்களின் கைதட்டலைக்கூட கேட்கத் திறனற்றவராக மாறியிருந்தார். குடித்துவிட்டு துன்புறுத்திய தந்தை, கண்ணெதிரே சகோதரர்களின் இறப்பு, குடும்பத்தின் கடன்சுமை, காதல் தோல்வி போன்ற நிகழ்வுகள் பீதோவனை மூர்க்கத்தனமான மனிதராய் மாற்றின. நிம்மதிதேடி அவர் விரும்பிச்செய்த செயல்கள் அவர் உடல்நலத்தைக் கெடுத்துக் காதுகளின் கேட்கும்திறனைக்கெடுத்தன. இசைக்கோர்வையை உருவாக்கியவரே அதைக் கேட்கமுடியாவிட்டாலும் உலகம் இன்றும் பீதோவனைப் போற்றுகிறது மகத்தான மாற்றுத்திறன் கொண்ட இசைமேதையாக.

குமரகுருபர சுவாமிகள்: ஐந்துவயது வரை வாய்பேசா சிறுவராக திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊரில் வாழ்ந்து, திருச்செந்தூர் திருமுருகன் திருவருளால் பேசும்திறன் பெற்று கந்தர்கலி வெண்பா, கயிலைக் கலம்பகம், மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ், நீதிநெறி விளக்கம், முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லிமாலை போன்ற பதினைந்து நூல்களைத் தந்த குமரகுருபர சுவாமிகள் ஒப்பற்ற சாதனையாளர்.

"மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வௌர் தீமையு மேற்கொள்ளார் செவ்விஅருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணா யினார் ”

சாதனையாளராய் மலரவேண்டுமானால் உடல்வருத்தம்பாராமல், பசியைக்கூட நினைத்துப் பார்க்காமல், தூங்காமல்,தனக்கு யார் எந்தத் தீமைசெய்தாலும் அதைப்பற்றி எதுவும் எண்ணாமல்,பாராட்டியோ விமர்சித்தோ சொல்லப்படும்செய்திகளைப் பெரிதாய் கருதாமல் தன்பாதையில் துணிவுடன் பயணிக்கவேண்டும் என்ற பாடலை 'நீதிநெறி விளக்கம்' நூலில் தந்த ஒப்பற்ற சாதனையாளர் குமரகுருபரசுவாமிகள்.

தாமஸ் ஆல்வா எடிசன்: மூளைவளர்ச்சிக் குறைந்தவரென்றும், காதுகேட்கும் திறனற்றவரென்றும் ஆசிரியர்களால் குறைசொல்லப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன், ஏழுவயதில் ஏற்பட்ட உள்ளெழுச்சியால் 1093 பொருட்களைக் கண்டறிந்து உலகம் போற்றும் மகத்தான அறிவியல்மேதையாக மாறியது விடாமுயற்சியாலும் தொடர்பயிற்சியாலும்தான். எட்டரை வயதில் பள்ளிக்குச் சென்றவரை ஆசிரியரின் சுடுசொற்கள் பள்ளிப்படிப்பை நிறுத்துமளவு கடுமையாய் பாதித்தது. தாயாரிடம் கற்ற கல்வி புதுமையான கண்டுபிடிப்புகளில் நாட்டம் கொள்ளுமளவிற்கு தன்னம்பிக்கை உடையவராய் மாற்றியது. நியூட்டனும்,பாரடேயும் சிறுவயதில் அவரை நூல்கள் மூலம் வந்தடைந்தார்கள். ரயில்நிலையத்தில் செய்தித்தாள் போட்டு சம்பாதித்த பணத்தை ஆய்வுக்கு பயன்படுத்தினார். தந்திப்பதிவுக்கருவி, கிராமபோன், மின்விளக்கு போன்ற சாதனங்களை கண்டறிந்தார். மூளைவளர்ச்சிக் குறைந்தவரென்றும் செவித்திறன் குறைந்தவரென்றும் இகழப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் 84 வயதில் காலமானபோது உலகநாடுகள் மின்விளக்கை அணைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தின.

சாதனைப் பெண்மணி ஹெலன் ஹெல்லர்: எல்லாக் குழந்தைகளையும் போல் நன்றாக பிறந்தது,ஒன்றரை வயது வரை எல்லாக் குழந்தைகளையும் போல் நன்றாக வளரத்தொடங்கியது. திடீரென்று ஒரு நாள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வாய்பேசமுடியாது,காதுகேட்கும் திறன் இல்லாமல் போனது. வளரவளரத் தன் தேவைகளைக் கூட அடுத்தவர்களிடம் தெரிவிக்கச் சிரமப்பட்டது. எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட நிலையில்அந்தக் குட்டிதேவதை மீது அன்பைச் செலுத்த ஆசிரியர் வடிவில் ஆன் சல்லிவன் வந்தார். சிறப்புக்கல்வியைஅந்தக் குழந்தைக்குப் பொறுமையாய் தந்தார். இடதுகையில் பொம்மையைத் தந்து வலதுகையில் ஆட்காட்டிவிரலால் "பொம்மை” என்று எழுதினார். உச்சரிக்கும்போது உதட்டில் விரலைவைத்து உச்சரிப்பின் அதிர்வை உணரவைத்தார். பேச்சுப்பயற்சி தந்தார். ஆன் சல்லிவனின் விடாமுயற்சியால் அந்தக் குழந்தை வளர்ந்து ஹெலன் ஹெல்லர் என்ற பெயரில் எல்லாமேடைகளிலும் பேசினார். செவித்திறன் குறைந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளைச்சாதனையாளராய் உருவாக்கினார்.

எவரெஸ்ட் சிகரம்தொட்ட அருணிமா சின்ஹா: "சிகரத்தை அடைய எங்கிருந்து பயணத்தை தொடங்கவேண்டும்?” என்று குருவிடம் கேட்டான் சீடன். அவர்,” சிகரத்தை அடைய வேண்டுமானால் சிகரத்தின் உச்சியிலிருந்து தொடங்கவேண்டும்' என்றார். 'அது எப்படி குருவே' என்றான் சீடன். ”நீ எப்போது சிகரத்தை அடையவேண்டும் என்று நினைத்து விட்டாயோ அப்போதே உன் மனம் சிகரத்தை அடைந்துவிட்டது. ஏறி நடந்து நீ இரண்டாம் முறையாய் சிகரம் தொடுகிறாய்” என்றாராம். தேசிய அளவில் சாதித்த கைப்பந்து வீராங்கனை அருணிமாசின்ஹா, லக்னோவிலிருந்து டில்லிக்கு பயணித்து கொண்டிருந்தார்;சற்றும் எதிர்பாராத வகையில் ரயில் கொள்ளையர்கள் வண்டியில் ஏறிப்பயணிகளிடம் நகைகளைக் கொள்ளையடிக்க அவர்களை எதிர்த்து வீரத்துடன் போராட அவர்கள் அருணிமாவை ஓடும்வண்டியிலிருந்து வெளியே வீச அடுத்த தண்டவாளத்தில் சென்றுகொண்ருந்த ரயில் வண்டியில் சிக்கித் தன்ஒருகாலை இழந்தார். ஆனாலும் மனம்தளராமல் மூச்சுபிடித்து முன்னேறி 25 வயதில் ஒற்றைக்காலில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டினார் லட்சியப் பெண்மணி அருணிமா சின்ஹா. ஆம்! காலை இழந்தாலும் அவர் நம்பிக்'கை'யை இழக்கவில்லை. ஆணியில் தொங்கும் அப்பாவின் சட்டை அவரை அப்படியே ஞாபகப்படுத்துவதைப் போல் நம்பிக்கை எனும் ஒற்றைச்சொல் நம்மை செயற்கரிய செயல்கள்செய்ய அழைத்துச் செல்கிறது. நீரெழுச்சியைப் போல் பேரெழுச்சியோடு பயணப்பட வேண்டிய நேரத்தில் தயக்கத்தைத் தள்ளி நிறுத்துவோம். எதுவும் குறையில்லை. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல், விடுதலையாகிப் பறப்போம் சிட்டுக் குருவிகளாய்! விரிவானம் வெளியே காத்திருக்கிறது.

- முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி
mahabarathi1974gmail.com
99521 40275
(தேசிய விருது பெற்ற கட்டுரையாளர்)

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement