Advertisement

பொது சொத்து சேதத்தை தடுக்க வழி

கடந்த, 1985க்கு முன்பெல்லாம், சென்னை அண்ணா சாலையில் ஊர்வலம் என்றால், ஊர்வலப் பாதையில் உள்ள கட்டடங்களின் கண்ணாடிகளோடு கற்கள் பேசிக் கொள்ளும். அப்படி பேசாத ஊர்வலம் இருந்தால் அபூர்வம். ஊர்வலம் என்றாலே கடைக்காரர்களும், நிறுவனங்களும் தங்களுக்குள்ளே மூடுவிழா செய்து கொள்வர். வாரத்திற்கு இரண்டு ஊர்வலம் என்றால், என்றைக்கு அவர்கள் தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பது?

அண்ணா சாலை வழியாக ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்ற நிலை ஏற்பட்ட பின் தான் கட்டடங்களும், கடைகளும் நிம்மதி பெருமூச்சு விட்டன.ஒவ்வொரு இயக்கமும், ஒவ்வொரு அமைப்பும் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தும்போது, தங்களின் போராட்டம் சம்பந்தப்பட்டவர்களை எச்சரிக்கும் வகையில் அமைய வேண்டும் என, நினைக்கின்றனர். நினைத்த இடமெல்லாம் ஆர்ப்பாட்டம், தர்ணா, ஊர்வலம், மறியல், பொதுக்கூட்டம் என, நடத்த ஆரம்பித்ததால், பொதுமக்கள் பல வகையில், பல வழிகளில் பாதிக்கப்பட்டனர். சென்னை நகர மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையை மாற்றுவதற்காக, சென்னையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், தர்ணா, பொதுக்கூட்டம் ஆகியவைகளை அனுமதிக்க முடியும் என்ற முடிவை காவல் துறை கையில் எடுத்தது. குறிப்பிட்ட பாதையில் மட்டுமே ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அது, இன்றைக்கு நடைமுறையில் இருந்தும் வருகிறது.

அப்படி அனுமதி கொடுக்கப்படும் போது, சில இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அனுமதியை வாங்கிய பின், விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறுவதுண்டு.
அதன்பின், இயக்கங்கள் போராட்டம் நடத்தும்போது ஏற்படும், ஏற்படுத்தும் அரசு மற்றும் தனியார் பொருட்களின் சேதத்திற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைப்படுத்தப்பட்டது.போராட்டத்தின்போது அரசு மற்றும் தனியார் சொத்திற்கு சேதம் ஏற்படுத்துகிறவர்கள் கைது செய்யப்படும்போது, அவர்கள் ஜாமின் கோரினால், அவர்கள் ஏற்படுத்திய சேதத்திற்கான தொகையை நீதிமன்றத்தில் கட்டினால் தான் வெளிவர முடிந்தது.இந்த இரு நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. போராட்டத்தின்போது, இயக்கங்களின் போர்வையில் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகளும் அடையாளம் காணப்பட்டு, அவர்களும் இந்த நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்டதால், போராட்டத்தை தலைமை ஏற்று நடத்த விரும்பியவர்களும் நிம்மதி அடைந்தனர். அதே நேரத்தில், அனுமதி கோரும்போது கவனமாக இருந்தனர்.

ஒவ்வொரு இயக்கத்தை சேர்ந்த தொண்டனும் இயக்கத்திற்கு, இயக்கத்தின் தலைமைக்கு பாதிப்பு வரும்போது, வருத்தப்படுவது மனித இயல்பு. ஆனால், தலைவருக்காக, எந்த இயக்கத்தையும் சாராத பொதுமக்களை வருந்துவது எந்த வகையில் நியாயம்?எந்த ஒரு போராட்டத்திலாவது, எந்த ஒரு வன்முறையிலாவது எந்த ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தன் வாகனத்தையோ அல்லது தன் இயக்கத்தை சார்ந்த வாகனத்தையோ நெருப்பிட்டதுண்டா? குறைந்தபட்சம் வாகனத்தின் கண்ணாடிகளையாவது உடைத்ததுண்டா?சிலர், தங்களின் தலைவருக்காக உயிரை மாய்த்திருக்கின்றனர். அதுவும், இதுவரை எந்தவித பதவியும், பலனும் பெறாத அடிமட்டத்தில் இருந்தவர்களே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.தலைவருக்காக உன் அனுதாபத்தை காட்டும்போது, அது பொதுமக்களின் அனுதாபத்தையும் சேர்த்து பெற வேண்டுமேயல்லாமல், அவர்களை வருத்தப்பட செய்வது எந்த வகையில் நியாயம்? இதனால் தான் பல பேர், 'எந்த கட்சிக்கும் நான் ஓட்டுப் போடுவதில்லை; போட விரும்பவில்லை' என்ற முடிவுக்கு வந்ததனர், 'நோட்டா' ஓட்டுகளின் எண்ணிக்கை உயர்வதற்கு இதுவே காரணம்.

சுதந்திரத்திற்காக போராட்டத்தில் குதித்த காந்தியும், அவரோடு இணைந்து போராடியவர்களும் தங்களையே வருத்திக் கொண்டனர். தங்களின் ஆயுதமாக அவர்கள் கொண்டது அகிம்சை, அடுத்தவர்களுக்கு கொடுக்கும் இம்சை அல்ல. வெள்ளைக்காரர்கள் இந்திய நிலைமையைப் பற்றி தங்கள் நாட்டில் பேசும்போது, 'நம் எதிராளி துப்பாக்கியையோ அல்லது பீரங்கியையோ உபயோகப்படுத்தினால் நாம் அவர்களை அழித்து விடலாம்; ஆனால், அவர்களின் தலைவன் உபயோகப்படுத்தும் ஆயுதம் சத்தியாகிரகமாக இருக்கிறதே...' என்று, என்ன செய்வது எனத் தெரியாமல் அல்லல் பட்டனர்; அவதிப்பட்டனர்.
அப்படிப்பட்ட சுதந்திர போராட்டத் தில் கூட ஒரு சிலர், போராட்டத்தை தீவிரப்படுத்த நினைத்தனர்.

இந்திய மக்களை கடுமையாக மட்டு மல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி, கூட்டம் கூட்டமாக சுட்டு வீழ்த்தினான், ஜெனரல் டயர்ஸ் என்ற வெள்ளையன். இச்செயலை பார்த்த இந்திய குடிமகனின் ரத்தம் தாய் மண்ணில் சிந்தியதை பொறுக்க மாட்டாத இளைஞன், நெல்லை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய வெள்ளையன் ஆஷ் துரை, ரயிலில் பயணம் செய்தபோது, அவன் பயணித்த ரயில், மணியாச்சி ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அவனை சுட்டு வீழ்த்தி விட்டு, அன்னியன் கையில் அகப்பட்டு விடுவோம் என்று தெரிந்தபோது, தன்னையே சுட்டு, இந்திய தாயின் காலடியில் தன் ரத்தத்தை சிந்தி உயிரை விட்டான், வாஞ்சிநாதன்.ஆங்கிலேய அதிகாரி பயணம் செய்த ரயிலை கவிழ்க்கவோ அல்லது அந்த ரயிலுக்கு நெருப்பிடவோ அவன் விரும்பவில்லை; அவ்வாறு செய்து பொதுமக்கள் உயிருக்கும், பொது சொத்துக்கும் சேதம் விளைவிக்க அவன் விரும்பவில்லை. அவை அனைத்தும் இந்திய மண்ணுக்குச் சொந்தமானது என்று எண்ணியது அவன் மனம்.

அரசு அலுவலகங்களை சேதப்படுத்துவதும், அரசு மற்றும் தனியார் வாகனங்களை உடைப்பதும், சொத்துகளை அழிப்பதும், எரிப்பதும் என, போய்க் கொண்டே இருந்தால், பட்ஜெட் போடும்போது வரவு - செலவு துண்டு விழுவது என்று கூறுவது போல், இனி வரும் காலங்களில், 'போராட்டத்தின் மூலம் அடைந்த சேதம்' என்ற தனிப் பிரிவும் கணக்கில் கொள்ள வேண்டிய சூழ்நிலை வருமோ என்ற அச்சம் நிலவுகிறது.சில அரசியல் கட்சியை சேர்ந்தோர் மாநாடு நடத்தும்போது, மாநாடு நிறைவு பெற்று அவரவர் வீடுகள் திரும்பி செல்லும்போது, 'கவனமாக செல்ல வேண்டும்; வேகமாக செல்லக் கூடாது, தூக்கத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது' என்று அந்த இயக்கத்தின் தலைவர், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது இனிப்பான செய்தியாக இருக்கிறது.அதே நேரத்தில், 'எந்த ஒரு தொண்டனும் போகும் வழியில் பொதுமக்களுக்கு ஆபத்தோ, பொது சொத்துக்கு சேதமோ ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. கட்சியின் கட்ட ளையை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், கட்சியிலிருந்து நீக்கப்படுவர்' என்ற ஒரு எச்சரிக்கையும் சேர்ந்து வருமானால், அந்த எச்சரிக்கை பொதுமக்கள் மத்தி யில் வரவேற்பை மட்டுமல்லாது, அந்த கட்சிக்கு ஓட்டையும் வாங்கிக் கொடுக்கும் என்பது நிச்சயம்.

முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, தன் பள்ளிக்கு நடந்து செல்ல ஆற்றுப் பாலம் இல்லாததால், புத்தகங்கள் நனையாதபடி உயரத்தில் பிடித்தபடியே நீந்தி செல்வாராம்.ஆனால், இன்றைக்கு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்து படிக்க அனுப்பினால், கல்வி பயில செல்லாமல், இவர்களால், அதே பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடுவதும், நடுரோட்டில் படங்களில் வரும் காட்சிகளைப் போன்று கத்தி களுடன் சண்டை போடுவதும், வாரத்திற்கு வாரம் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.இதே மாணவர்கள் நாளை பணியாற்றும்போது, தன் கோரிக்கைக்காக இதே நடைமுறையில் தான் செயல்படுவர் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத செயல்பாடு, பள்ளிப் பருவத்தில் எடுத்துரைக்கப்பட வேண்டும். அந்த இளம் வயதில், அவன் மனதில் அந்த விதைவிதைக்கப்பட வேண்டும்.ஒவ்வொரு இயக்கத்தின் தலைவரும் வெறும் வெற்று அறிக்கையோடு மட்டுமல்லாது, சமுதாய சிந்தனையோடு வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து இயக்கத்திலிருந்து நீக்குவரேயானால், '10 தொண்டர்களை இழக்கிற அதேநேரத்தில் பொதுமக்களின், 100 ஓட்டுகள் கிடைக்கும்' என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.அதேநேரத்தில், போராட்ட காலங்களில் ஏற்படுத்தும் சேதத்தை அந்த இயக்கத்தை சார்ந்தோர் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும், அதை செய்தோர் அந்த சேதத்தை நீதிமன்றத்தில் கட்டினால் தான் ஜாமினில் செல்ல முடியும் என்ற நடைமுறையையும் தீவிரப்படுத்த வேண்டும்.
இ-மெயில்: madasamy000yahoo.com
- பெ.மாடசாமி
- காவல் உதவி ஆணையாளர் (ஓய்வு)
சிந்தனையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement