Advertisement

இயற்கை வழங்கிய அற்புத கொடை தண்ணீர்

உலகப் பருவ நிலையில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள், இந்திய மக்கள் தொகைப் பெருக்கம், நீர் நிலைகள் மீதான மக்களின் அக்கறையின்மை, மூன்றாம் நிலை அரசாகக் கருதப்படும் ஊராட்சிகளின் பொறுப்பின்மை, அரசுகளின் கொள்கை முடிவுகளில் போதிய வலுவின்மை போன்ற காரணங்கள் தண்ணீருக்கான அவலச் சூழலை மேலும் மேலும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. போதிய மழைப்பொழிவு இருந்தும் கூட, அதனை சேமித்து வைத்து பயன்படுத்தக்கூடிய கொள்திறன் இல்லாத காரணத்தால், கடலுக்கே அம்மழைநீர் அனைத்தையும் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தேசிய தண்ணீர்க் கொள்கை:இதன் பொருட்டே இந்தியாவில் கிடைக்கக்கூடிய நீர்வளம் அனைத்தும், பயன்படுத்துவதற்கு ஏற்றவையே என்ற அடிப்படையில் கடந்த 2012ஆம் ஆண்டு, இந்திய அரசால் தேசிய தண்ணீர்க் கொள்கை உருவாக்கப்பட்டது. தேசிய தண்ணீர்க் கொள்கைக்கான அரசின் பரிந்துரையைப் பொறுத்தவரை, தண்ணீர் மக்களின் சொத்து என்ற குரல் மிகவும் மெல்லியதாகவே கேட்கிறது. தண்ணீருக்கான சேவையை அளிப்பவர் என்ற நிலையிலிருந்து மத்திய மாநில அரசுகள் விடுபட வேண்டும் என்பதை இக்கொள்கை தீவிரமாக ஆதரிக்கிறது. இதிலிருந்து மாறுபட்டு, நீராதாரங்கள் குறித்த திட்டங்கள், செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கான கொள்கை வகுப்புகள் இவற்றில் பரிந்துரையாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக, தேசிய தண்ணீர்க் கொள்கை முனைந்து நிற்கிறது. நாட்டின் பல மாநிலங்கள் மிகக்கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியப் பருவ நிலை மாற்றங்கள் சூதாட்டம் நிறைந்ததாக மாறி விட்டன. இந்நிலையில் வேளாண்மையும், அதை சார்ந்த தொழில்களும், விவசாயிகளும் தாங்க முடியாத துயரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

தண்ணீருக்கான போராட்டங்கள்:தண்ணீருக்கான போராட்டங்கள் ஆங்காங்கு வலுத்து வரும் நிலையில், மக்களும் துன்பச்சுழலுக்கு ஆளாகி நிற்கின்றனர். தண்ணீர்த் தட்டுப்பாடு அல்லது பற்றாக்குறையின் பக்கவிளைவுகளாக தடையற்ற மின்சாரமும் கேள்விக்குறியாகி, தொழில்களில் பெரும் தேக்கநிலை காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வேலையில்லாத் திண்டாட்டம், சமூக விரோத செயல்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பாரம்பரியமிக்க இந்திய மரபுக்கும், பண்பாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாக இல்லை. இவை எல்லாவற்றிற்கும் மூலமாக இருப்பது தண்ணீர் என்ற காரணத்தால், இந்திய அரசின் 'தேசிய தண்ணீர்க் கொள்கை 2012' மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

முழுமையான திட்டமிடல் தேவை:இந்திய நிலப்பகுதியில் விழும் மழை நீரை முறையாக சேமிப்பு செய்வதற்கு ஏற்ற வகையில், நீராதாரங்களும், மணற்படுகைகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என இக்கொள்கை வலியுறுத்துகிறது. இந்தியாவின் மொத்த நீர்வளமான 690 பில்லியன் கன மீட்டர் நீரினை முழுவதுமாகச் சேமிப்பு செய்ய போதிய வாய்ப்புகள் இல்லை என்பதால், அதற்குரிய முழுமையான திட்டமிடல் தேவை. தற்போது ஓராண்டில் நாம் சேமிக்கும் நீரின் அளவு 4.7 பில்லியன் கன மீட்டர். வரும் 2050ல் நமக்கு தேவைப்படும் நீரின் அளவை முழுமை செய்ய, இனி வரும் காலங்களில் ஆண்டு ஒன்றுக்கு 6.2 பில்லியன் கன மீட்டர் நீரை சேமிப்பு செய்ய வேண்டும். நாட்டின் நீர் சேமிப்பை வலியுறுத்துவதற்கென்று தனியான கொள்கை ஏதுமில்லையென்றாலும், தேசிய தண்ணீர்க் கொள்கை 2002ம், தேசிய தண்ணீர்க் கொள்கை 2012ம் போதுமான பரிந்துரைகளை அளிக்கிறது. புவி வெப்பமயத்தின் கடுமையான தாக்கங்கள் உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தும் நிலையில், தண்ணீர் சேமிப்பு என்பதை தாரக மந்திரமாக, இந்திய மாநிலங்கள் கொள்ள வேண்டும் என நேடியாகவே தேசிய தண்ணீர்க் கொள்கை 2012 வலியுறுத்துகிறது.

ஈக்வடாரை பின்பற்றிய பொலிவியா:தென் அமெரிக்காவின் ஏழ்மையான நாடு ஈக்வடார். அந்நாடு மனித இனம் மட்டுமின்றி இயற்கையும் அதற்குரிய உரிமைகளைப் பெற்றிருப்பதாக கடந்த 2008ல் சட்டம் ஒன்றை இயற்றியது. இச்சட்டத்தின்படி இயற்கையின் அங்கமாகத் திகழும் மலைகளும், ஆறுகளும், ஏரிகளும் பொதுச்சொத்தான தங்களை, வணிகப் பண்டமாக்குவதையோ, கழிவுகளை கொட்டி நாசமாக்குவதையோ எதிர்த்து, தங்களது வாழும் உரிமைக்காக, தங்கள் சார்பில் வாதாடும் மனிதர்களைக் கொண்டு வழக்கு தொடுத்துப் போராட முடியும். அந்நாட்டின் வழியில் பொலிவியாவும் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இச்சட்டம் 'அன்னை நிலம்' என்றழைக்கப்படுகிறது. மனித இனம் எவ்வித உரிமைகளைக் கொண்டிருக்கிறதோ, அதற்கு இணையாக இயற்கைக்கும் சமமான உரிமைகளை பொலிவியா அளித்துள்ளது. தற்போது இது போன்ற சட்டங்களை முன்னுதாரணமாகக் கொண்டு மேலும் பன்னிரெண்டு நாடுகள், சட்டம் இயற்ற ஆலோசனை செய்து வருகின்றன.

சிக்கல் குறைய வழி:அனைத்துலக மனித உரிமை சாசனத்தின் வழியில் அன்னை நிலத்தின் உரிமைக்கான பிரகடனத்தை ஐ.நா.சபை அங்கீகரிக்க வேண்டும் என பொலிவியா முன்மொழிந்துள்ளது. இச்சட்டங்களைப் பின்பற்றி, இந்திய அரசும் செயல்படத் துவங்கினால், நாட்டின் வளங்கள் காக்கப்படுவதுடன், தண்ணீருக்கான எதிர்காலச் சிக்கல்களும் குறைய வாய்ப்புண்டு. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இயற்கை வள மேலாண்மை என்பது மிகவும் சிக்கலான ஒன்று. என்றாலும், அந்த மனித வளத்தையே சாதகமாகப் பயன்படுத்தி அரசின் கொள்கை உருவாக வேண்டும். நீர்நிலைகளைச் செப்பனிடுதல், உருவாக்குதல், பாதுகாத்தல் போன்ற தொடர் முயற்சிகளுக்கு மாநில அரசுகளையும், உள்ளாட்சி அமைப்புகளையும் ஊக்குவித்தல் மத்தியரசின் முன்புள்ள பணி. மாநிலங்களுக்கிடையே காலங்காலமாய் இருந்து வரும் ஆற்று நீர் பகிர்வுச் சிக்கலுக்கும் சுமுகமான தீர்வுகளைக் காண்பதற்கும் இந்திய அரசு திட்டம் வகுப்பது, தேசத்தின் இறையாண்மைக்குப் பெரும் பங்களிப்பாக அமையும்.

இயற்கையின் அற்புதக்கொடை:தண்ணீரை விற்கும் முயற்சி மனித உரிமைக்கும், தார்மீகத்திற்கும் எதிரான செயல். இயற்கையின் ஒப்பற்ற கொடைத்தன்மைக்கு விடுக்கப்படும் சவால். பூமியில் வாழும் உயிரினங்களுக்கு இயற்கை வழங்கிய அற்புதக்கொடை தண்ணீர். தேசிய தண்ணீர்க் கொள்கை 2012 மக்களுக்கான கொள்கையாக மலரும்பட்சத்தில், தண்ணீர்ச் சிக்கல் இந்தியாவில் இருக்காது.

-நா.வெங்கடேசன் முதன்மை நிர்வாகி, தானம் வயலக இயக்கம், மதுரை. 97516 32714.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement