Advertisement

பெண் மனமே நலமா? என் பார்வை

பெண் என்றால் அமைதியானவள், பொறுமையின் பிரதிபலிப்பு, எதையும் தாங்கும் இதயம் கொண்டவள், மென்மையானவள் போன்ற குணங்களுக்கு இலக்கணமாக திகழ்பவள்.நம் நாட்டை பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களுக்கே மனநல பாதிப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மிக மோசமான மனநோய்கள் ஆண்களை பாதிக்கக்கூடியதாகவும், மிதமான பாதிப்புகள் பெண்களை அதிகம் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன. சிறுவயதில் ஆண்கள் அதிகமாகவும், வயதான பின் பெண்கள் அதிகளவிலும் மனநல பாதிப்பிற்கு ஆளாகின்றனர். மனபதட்டம், மனஅழுத்தம், மனச்சோர்வு, மனஎழுச்சி, மனச்சிதைவு போன்ற பொதுவான மனநல பிரச்னைகள் பெண்களையும் பாதிக்கலாம். ஆனால் மனநிலை மாறுபாடு கோளாறுகள் குறிப்பாக மனவருத்த நோய் மற்றும் மனப்பதட்ட நோய்கள் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் காணலாம். வேகமாக இயங்கும் வாழ்க்கை முறையில் மனஅழுத்தம் பலரிடம் காணப்படுகிறது. வேலைக்கு சென்று வந்து வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டிய பெண்களிடம் மனஅழுத்தம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. 'ஹிஸ்டிரியா' எனும் மனநல பாதிப்பு பெரும்பாலும் இளம்பெண்களையே அதிகம் பாதிக்கும். உடல் அளவில் எப்படி பெண்ணுக்கும், ஆணுக்கும் சில வேறுபாடுகள் உண்டோ, அதுபோல் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த வேறுபாடுகளும் உண்டு. இதன் முடிவு, பெண்களுக்கென்றே சில பிரத்யேகமான மனநலம் தொடர்பான பிரச்னைகள் உள்ளன.

மாதவிடாய் சார்ந்த பிரச்னை:

மாதவிடாய்க்கு முன் பல பெண்களுக்கு மனநிலையில் ஓர் மாற்றம் தென்படலாம். இதை 'PREMENSTRUAL SYNDROME (PMS)' என்பர். இந்த நேரங்களில் எரிச்சல், கோபம், மனவருத்தம் போன்றவை ஏற்படும். சில நேரங்களில் வெறித்தனமும், தற்கொலை எண்ணமும்கூட தலை தூக்கலாம். இதுபோன்ற மனநிலை வேறுபாடுகள் மாதம் மாதம் வரும்போது கவனம் தேவை. இதற்கு வாழ்க்கை முறை மாற்றியமைப்பு மற்றும் மருந்துகளால் தீர்வு காணலாம். அதுபோன்று மாதவிடாய் நின்றுபோகும் பருவத்தில்(45 அல்லது 50 வயது) மனநல பாதிப்புகள் வரவாய்ப்புண்டு. நாளமில்லா சுரப்பிகளின் மந்தநிலை காரணமாகவும், பெண்மை போய்விட்டதோ என்ற உணர்வு காரணமாகவும், பிள்ளைகளின் படிப்பு, வேலைநிமித்தம், அவர்களை பிரிந்து வாழ்தல் ஆகிய நாட்களில் மனவருத்த நோய் அதிகளவில் வர வாய்ப்புண்டு. தவிர மனப்பதட்டம், காரணமற்ற சந்தேகங்கள், எங்கே கணவர் தன்னை கைவிட்டு விடுவாரோ என்ற நம்பிக்கையின்மை இக்கால கட்டத்தில் காணப்படும்.

பிரசவ கால மனநல பிரச்னை:

பெண்கள் கர்ப்பமாய் இருக்கும்போது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்பட்டு மனநிலை பாதிப்பை உண்டாக்கலாம். பிரசவத்திற்குபின் உடனடியாக சில நாட்களில் மனநிலையில் மாற்றம் வருவதை அடிக்கடி காணமுடியும். முக்கியமாக மனவருத்தம். மனவருத்த நோயாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழலில் குழந்தையை எப்படி வளர்ப்பது போன்ற பயம், தன்னம்பிக்கையின்மை ஏற்படலாம். குழந்தையின் மேல் பாசமின்மை, எதிலும் நாட்டாமில்லா உணர்வு போன்றவையும் ஏற்படலாம். சிலருக்கு 'ஸைகோஸிஸ்' எனும் மனநோய் வரலாம். தூக்கமின்மை, இல்லாத விஷயங்கள் இருப்பதுபோல் தவறான கற்பனை, ஆக்ரோஷம், பயம், சந்தேகம் போன்றவை தோன்றும். நோய் தீவிரமாகி தாயின் தன் உணர்வற்ற நிலையினால் கருவில் உள்ள சிசு உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம். கருச்சிதைவுக்கு பின்பும் இவ்வகை மனநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் மருத்துவ சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம்.

மண வாழ்க்கையை பாதிக்கும்:

பெண்களுக்கே உரித்தான கருக்கலைப்பு, கர்ப்பப்பை அகற்றல், கற்பழிப்பு போன்றவற்றாலும் பெண்களின் மனநிலை பாதிக்கப்படலாம். குறிப்பாக சிறு வயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளில் சில பேர் பிற்கால மணவாழ்க்கையில் சிரமப்படும் அபாயம் உண்டு. பெண்களின் தனிப்பட்ட உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி காரணமாக வெவ்வேறு காலக்கட்டங்களில், இயற்கையாகவே சில சமயம் கடுமையாகவே பாதிக்கப்படும். இம்மாதிரியான நேரங்களில் மனநிலை அறிந்து அதற்கேற்றவாறு மனநல சிகிச்சை பெறுவது அவசியம். பெண் குழந்தைகளை வளர்ப்பதில் முற்போக்கு சிந்தனை வேண்டும். அவர்களின் பழக்கவழக்கம், படிப்பு போன்றவற்றில் அவர்களுக்கு கண்காணிப்புடன்கூடிய கருத்து சுதந்திரம் வேண்டும். சிறந்த கல்வியறிவும் வேலை பார்க்கும் சூழ்நிலையும் ஏற்பட்டாலே அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு என்பது இயற்கையாகவே அமைந்துவிடும். அதேசமயம் அது அவர்களுக்கு ஒரு மனப்பாதுகாப்பு கவசமாக மாறி நிற்கும். பெண் என்பவர் தன் உடல் என்ற எண்ணெய்யில் மனம் என்ற திரியாக நின்று மகிழ்ச்சி எனும் ஒளி தரும் ஒரு குடும்ப விளக்கு என்பதை நினைவில் கொள்வோம். பெண்ணின் மனநலமே அவள் குடும்பத்தின் மனநலம்.


- டாக்டர் ஆர். பாஹேஸ்ரீதேவி, மனநல நிபுணர், மதுரை. 93444 60432

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement