Advertisement

நமீதா தமிழும் அமலா பாலும்

தமிழ் அரங்குகள், தமிழ் உரைகள், தமிழ்ச் சிந்தனைகள், தமிழ் இலக்கியப் படைப்புகள் குறித்த ஆர்வமும், தேடலும் இன்றைய தமிழ் இளைஞர்களுக்கு பெரும்பாலும், பெரிதும் குறைந்தே காணப்படுகிறது.

கலை அறிவியல் கல்லுாரிகளில், தமிழ்மொழி அல்லாத பிற துறை மாணவர்களை தமிழ்க் கூட்டங்களுக்கு அழைத்தால், தலைதெறிக்க ஓட விரும்புகின்றனர். ஆனாலும், கல்லுாரி நேரத்தில் அப்படி ஓடிவிட முடியாமல், நெளிந்தும், வளைந்தும், சோம்பியும், சுருண்டும் அரங்குகளில் அமர்ந்து, கொட்டாவி விடுகின்றனர்.'தமிழ் ஏன் வேப்பங் காயாக இருக்கிறது உங்களுக்கு?' என்று, என் நேரடி கேள்விக்கான நேர்மையான பதில், 'தமிழ் எங்களுக்கு வேப்பங்காயாக, கசப்பாக, கரடு முரடாக, வெறுப்பாக இருக்கிறது...' என்கின்றனர்.'பத்து திருக்குறள் உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டால், 'திருவள்ளுவரை நாங்க 'சாய்ஸ்'ல விட்டுருவோம்...' என்று தெளிவாகச் சொல்கின்றனர், மன வருத்தமோ, குறுகுறுப்போ இல்லாமல், 'ஏதாவது ஓர் அதிகாரம் முழுக்கப் படித்தாலும், தேர்வில் ஏதேனும் இரண்டு குறட்பாக்களைத் தான் எழுத நேர்கிறது. மற்ற எட்டு குறள் படித்தது வீண் தானே? எழுதும், அந்த இரண்டு குறளுக்கும் கூட மதிப்பெண் இரண்டு தான்; அப்புறம் ஏன் நாங்கள் முழுமையான அதிகாரம் படிக்க வேண்டும்?' என்ற, அவர்களின் பதிலிலுள்ள நியாயம், தாய்மைக் கனிவோடு அவர்களை அணுவோருக்குப் புரியும்.

திருவள்ளுவரின் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாலை விட, அமலாபாலை இன்று இளைஞர்களுக்குப் பிடிக்கிறது. இந்த நிலைக்குத் தமிழைத் தள்ளி விட்டதற்கு, யார் பொறுப்பு? இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று தமிழறிஞர்கள் பலரும், பழம் பெருமையில் தேங்கி நிற்க, 'மச்சான்ஸ்...' என்று கூவுகின்ற நமீதா தமிழ், நான்காம் தமிழாக விஸ்வரூபம் எடுத்திருப்பற்கும், அதை இளைஞர்கள் கொண்டாடுவதற்கும் யார் பொறுப்பு?
தொல்காப்பியனையும், சங்க காலக் கவிஞனையும் தாண்டி, தற்காலத் தமிழுக்கு வராத தமிழ்க் காவலர்கள் பலரும் கோபம் கொள்ளலாம்; உரக்கக் கருத்துரைக்கலாம். எல்லாம் சரி தான். நிதர்சனம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல், இருட்டில் வாளைச் சுழற்றுகின்றனர், அவர்கள்.தமிழை, என் தமிழ் இளைஞன், தாயின் கனிவோடும், காதலியின் வசீகரத்தோடும், தோழியின் அரவணைப்போடும், சகோதரியின் சர்வ எளிமையோடும் பேசவும், எழுதவும், சிந்திக்கவும் விரும்புகிறான்.

அவனுக்குக் கிடைப்பதோ, சனாதனத் தமிழ், ஆணவத் தமிழ், ராணுவச் சீருடை மாதிரி மொட மொடப்பான தமிழ். கம்பன், வள்ளுவன், சங்கம் என்று, 2000ம் ஆண்டுகளுக்கு முன்னால் சென்று கொக்கரிக்கும் தமிழ்.இவர்களை மொழியின் அடிவாரத்திலிருந்து, சிகர உச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அடிவாரத்தின் விஸ்தீரணத்தைச் சொன்னாலே போதும், அவனுக்குச் சிகரத்தின் பாதை பிடிபடும். அடிவாரம் - தற்கால இலக்கியம், சிகரம் - அக்கால இலக்கியம்.ஏனெனில், தற்கால இலக்கியம், அவனுக்குப் பழக்கமான சூழல், மனிதர்கள், வார்த்தைகள், உணர்வு எனப் பழக்கமான தமிழை அறிமுகப்படுத்தும்.மலை படுகடாம் என்றும், நம்பி அகப்பொருள் என்றும், நச்சினார்க்கினியர் என்றும்,'மகன் மார்பில் அழுந்துட, வெழுதுமிலைத்
தொழிற் றொய்யில், என்றும், 'கிளரொளிமகரவேறு அளவில் சீரணங்கள் வெற்றிக் கொடி...'- இப்படியான கடமுட கடமுட மொழியை அக்கால இலக்கியம் அறிமுகப்படுத்தும். அந்தத் தமிழ் மொழி, தமிழ் வாழ்வியல், தமிழ் விழுமியம் ஏதுமே இல்லை இன்றைக்கு. இயல்பாக வர வேண்டும், மொழிக் காதல்.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் குயிலைக் கூவு என்பதும், மயிலை ஆடு என்பதும், தமிழ் இளைஞனைத் தமிழை நேசி, தமிழைப் பேசி, தமிழை யோசி என்பதும் குரூரம் அல்லவா? தமிழ்க் கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் இளைஞர்கள் எதிர்பார்ப்பது - அவர்களின் வாழ்வியலை அறிஞர்கள் பேச வேண்டும் என்பதையே. ஆனால், மேடைகளிலோ, அறிஞர்கள், தங்களின் தமிழப் புலமையை வெளிப்படுத்த, ஒரே தாவாகத் தாவிச் சங்கத்துக்குள் நுழையும்போது தான், தமிழ் இளைஞனுக்குப் பங்கம் வருகிறது. கூடவே தொடர் கொட்டாவிகளும் வருகின்றன.சந்தமென்றும், சீர் என்றும், தளை என்றும், கொச்சகக் கலிப்பா என்றும், லம்போதரக் கலிப்பா, ஒச்சக்கலிப்பா, தாழிப்பா என்றும் ஒரே தாளிப்பாகக் கலையரங்க மேடைகளில் மரபுக் கவிஞர்கள், தமிழைத் தாளிப்பது பிடிக்காமல், இளைஞன் கலையரங்கிலிருந்து காலாவதியாகி ஓடிவிட்டான்.

போதும் என்று ஓடும் தமிழனைப் பிடித்து, நீ கம்பர் தமிழைக் கற்றால் தான் மதிப்பெண் என்று மிரட்டினால், அது அவனுக்கு வம்புத் தமிழாகத் தெரிகிறது; வேம்புத் தமிழாகத் கசக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகத்தின் உடனடித் தேவை, 'மாத்தி யோசி!' இன்னமும் பிடிவாதமாக, ஈராயிரம் ஆண்டுக்கு முன்னால் இப்படி இருந்த தமிழ் என்று பழம்பெருமை பேசினால், கேட்கத் தமிழ் இளைஞனின் காதுகள் கிடைக்காது. இன்றைய வாழ்வைப் பேசுதல், தற்கால இலக்கியம் தான் அவனுக்கான முதல் அறிமுகமாக இருக்க வேண்டும்.நம் அறிஞர்கள், தற்காலப் படைப்பிலக்கியத்தை விரும்புவதில்லை; நம் இளைஞர்கள், அக்காலப் படைப்பிலக்கியம் விரும்புவதில்லை. இரண்டு துருவங்கள், யார் இணைப்பது?

மொழி பெயர்ப்பும், புதுப்புது வார்த்தைகளை உருவாக்குவதும் கூட, ஆங்கிலத்துக்கான வார்த்தைத் தேடல் என்பதாக இருக்கிறது. 'Whats app' என்றும் இளைஞர்களின் நவீன தொப்புள் கொடிக்கான தமிழ் வார்த்தை, 'வாட்ஸ் அப்' என, இருந்தால் என்ன? அதை விடுத்து, நேரடி மொழி மாற்றாக 'வாட்ஸ் அப்' என்றால் கட்செவி அஞ்சல் என்று தடபுடா செய்வது சரியா? இளைஞன் என்ன செய்கிறான்? காதில் ஈயம் பாயும் முன் தன்னைக் காப்பாற்றி, ஆங்கிலத் தேனுக்குள் குதித்து விடுகிறான்.ஒற்றை வேரிலிருந்து புதிய பதங்களை ஆங்கிலம் தருகிறது; தமிழோ தடுமாறுகிறது. எனவே தான் தமிழ் இளைஞன் சொல்கிறான்: 'எங்களுக்கு நமீதா தமிழும், அமலா பாலும் போதும். முத்தமிழும், முப்பாலும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்று. இன்றைய தமிழ் இளைஞனின் தாகத்துக்குக் கானல் நீர் தரும் தமிழ் அறிஞர்களே... மாறுங்கள்; மாற்றம் ஒன்று தான் புது வெளிச்சம், புதுக்காற்று, புதுவேர் கொண்டு வரும். சொல் புதிது சுவை புதிது என்றான் பாரதி. கொஞ்சம் நிதானித்து, தாய்மைக் கனிவோடு, என் தமிழ் இளைஞனைப் பாரதி புரிந்து கொண்டான். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.
இ-மெயில்: aandalpriyadarshiniyahoo.co.in
ஆண்டாள் பிரியதர்ஷினி
தமிழ் ஆர்வலர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (21)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement