Advertisement

வீட்டுச்சுவர் எல்லாம் சிகரெட் நச்சுக்கள்..! நாளை (நவ., 19) உலக சி.ஓ.பி.டி., தினம்

புகைபிடித்தல், புகைப்பிடிப்பவரின் அருகில் இருத்தல், கொசுவர்த்தி புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, குப்பைகளை எரிப்பதால் வரும் புகை... இதில் ஏதேனும் ஒன்றை நாம் அனைவரும் சுவாசித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதனால் வரும் பிரச்னை தான் சி.ஓ.பி.டி., எனப்படும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய். உலகம் முழுவதும் ஆறரைகோடி பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டிற்கு 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோயால் உயிரிழக்கின்றனர். 2002ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மனிதனை அழிக்கும் உயிர்க்கொல்லி நோய் பட்டியலில் இந்நோய் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதை நாம் சரியாக கவனத்தில் கொள்ளவில்லை எனில் 2030ம் ஆண்டில் இந்நோய் மூன்றாமிடத்திற்கு முன்னேறிவிடும்.

நோய்க்கான காரணங்கள்:முக்கியமான காரணம் புகைபிடித்தல். புகைபிடிப்பவரின் அருகில் இருத்தல், கொசுவர்த்தி புகை, அடுப்பு புகை, வாகன புகை, சிமென்ட், டெக்ஸ்டைல், ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து .வெளியேறும் தூசி, புகை போன்றவை இந்நோய் ஏற்பட காரணங்கள். புகையிலை பழக்கமும் இந்நோயை உண்டுபண்ணும். நுரையீரல் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது. நுரையீரலின் உள்ளேயும் ?வளியேயும் காற்று செல்லக்கூடிய பாதை சுருங்கிவிடும். இதனால் நுரையீரலுக்கு செல்லக்கூடிய காற்றின் அளவு குறையும். ஆக்ஸிஜன் அளவும் குறைவதால் இருதயம், சிறுநீரகம் போன்ற பிற உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

நோய் அறிகுறிகள்:தொடர் இருமல், மஞ்சள் மற்றும் மஞ்சள் கலந்த பச்சை நிற சளி, கெட்டியான சளி, மூச்சுவிடுவதில் சிரமம், மார்பின் தோற்றம் குடுவை போன்று மாறுவது, சீரற்ற இருதயத் துடிப்பு, நகம், உதட்டின் நிறம் நீலம் அல்லது சாம்பலாக மாறுவது, மூச்சை வெளிவிட சிரமப்படுதல் போன்றவை அறிகுறி. முதற்கட்டமாக புகைபிடிக்கும் பழக்கமுள்ள 45வயதுக்கு மேற்பட்டவர்களை இந்நோய் பாதிக்கும். இரண்டாம் கட்டமாக புகைபிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களையும் தொழிற்சாலை, அடுப்பு புகை, கொசுவர்த்தி புகையை அதிகம் சுவாசிப்பவர்களையும் பாதிக்கும். மூன்றாம் கட்டமாக புகைபிடிக்கும் போது புகையிலுள்ள 700 க்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்கள் உங்களின் ஆடை, வீட்டுச்சுவர், வாகனங்களில் படிகிறது. இந்நச்சுப் பொருட்கள் உங்கள் மனைவி, குழந்தைகளை மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பதே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ உண்மை.

அக்கறை உள்ளதா?நீங்கள் உபயோகிக்கும் சிகரெட்டில் உள்ள காரீயம் எனும் நச்சுப்பொருள் உங்கள் குழந்தையின் மூளைவளர்ச்சியை பாதிக்கும். சிகரெட்டில் உள்ள சயனைடு, திசுக்களுக்கு செல்லும் ஆக்ஸிஜனை குறைத்துவிடும். குழந்தைகளின் வளர்ச்சி இதனால் பாதிக்கலாம். எலிகளை கொல்ல பயன்படுத்தும் ஆர்சனிக் நச்சுப்பொருள் சிகரெட்டில் உள்ளது. அவ்வளவு விஷத்தன்மையுடையது சிகரெட். இது வெறும் உதாரணம் தான். இதிலுள்ள அனைத்து நச்சுக்களும் உங்கள் வளமான சந்ததியினரை மோசமாக பாதிக்க வாய்ப்புள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. 700 நச்சுக்களில் 200 நச்சுகள் புற்றுநோயை உண்டாக்கும். எக்ஸ்ரே, ஸ்பைரோமீட்டர், எக்கோ மற்றும் ஆறுநிமிட நடைபரிசோதனை இந்நோயின் தன்மையை சரியாக உணர்த்தும்.

நோய்க்கு தீர்வு:'இன்ஹேலர்கள்' நல்ல பலன் தரும். 'ஆன்டிகொலாஜினிக்' மருந்துகளான 'டையோடிரோப்பியம்' முதன்மை மருந்து, 'மியூக்கோலைடிக்' போன்றவை சளியை இளகச்செய்து எளிதில் வெளியேற உதவும். மருந்துகளுடன் முறையான உணவுக் கட்டுப்பாடு, போதுமான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி மிக அவசியம். அத்துடன் சில நவீன முறைகளான ஆக்ஸிஜன் அளிக்கும் கருவி, 'நான் இன்வேசிவ் வென்டிலேட்டர்' உபகரணங்களும் இந்நோயை கட்டுப்படுத்த தற்போது பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு முறைகள்:வந்தபின் இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. புகைபிடிக்காமல் இருப்பது நல்லது. புகைபிடிப்பவரின் அருகில் இருக்கக்கூடாது. டீக்கடை, ஒயின்ஷாப், அடுப்பு புகை, தொழிற்சாலை புகைகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. முடியாத சூழலில் முகமூடி அணியுங்கள். ஒருநபர் அறைக்குள் புகைபிடித்து வெளியேறினால், உடனடியாக அந்த அறையினுள் செல்லாதீர்கள். நமக்கு மட்டுமின்றி நம்மை நேசிப்பவர்களையும் இந்த புகை பாதிக்கும். வந்தபின் முற்றிலும் குணப்படுத்த இயலாத இந்நோயை வராமல் பார்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

-டாக்டர் மா. பழனியப்பன், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நிபுணர், மதுரை. 94425 24147

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement