Advertisement

முயன்றால் ஊழலை வெல்லலாம்

ஊழல் என்ற சொல், ஊழ்+அல் என்று பிரிக்கப்படும். ஊழ் என்பது விதி. அது இயற்கை விதியாகவும் இருக்கலாம், மனிதனால் இயற்றப்பட்டதாகவும் இருக்கலாம். அல் என்றால் அல்லாதது; புறம்பானது என்று பொருள். ஊழல் என்பது விதிகளுக்குப் புறம்பானது என்று அறிகிறோம்.

விதிக்கு மாறானது ஒரு நிறுவனத்தில் பரவலாக நடைபெறுகிறது என்றால், அந்நிறுவனம் அழியும் நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.இன்று, நம் நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது என்று கூறுகின்றனர். 'ஊழல் உலகு எங்கும் வியாபித்துள்ளது; எல்லா நாடுகளிலும் உள்ளது போலவே நம் நாட்டிலும் இருக்கிறது. அதை ஒழிக்க முடியாது; அதோடு நாம் வாழ வேண்டியதுதான். ஊழல் மூலம் நாம் நமக்கு வேண்டியதைச் சாதித்து கொள்ள வேண்டியதுதான். அகப்பட்டால் தானே திருடன் என்பதால், நமக்கு வாய்ப்பு கிடைத்தால் நாமும் அகப்படாமல் ஊழலில் ஈடுபட்டு பொருள் சேர்ப்பதுதான் புத்திசாலித்தனம்' என்று பலர் நினைக்கின்றனர்.ஊழல் என்பது புற்று நோய் போன்றது. புற்று நோய் வந்த பின், மற்ற நல்ல சதை, தசைகளை வளரவிடாது, புற்றுநோய் தாக்கப்பட்ட சதை, தசை மட்டுமே எப்படி வளரு மோ அப்படி ஊழல் புகுந்த நிறுவனத்திலும், நாட்டிலும் ஊழல் புரிபவர்கள் எண்ணிக்கையும், ஊழலின் பரிமாண மும் பெருகும்; நல்லோரின் எண்ணிக்கை குறையும். ஒரு நிலையில் ஊழலின் பரிமாணம் தாங்க முடியாததாகி, ஊழல் மலிந்த நிறுவனம்,சமுதாயம், நாடு அழிந்து போகும்.

கீழ்மக்கள் தவறு செய்யாமல் இருப்பதற்கு காரணம், அகப்பட்டுக் கொள்வோமோ, தண்டனை கிடைக்குமோ என்ற அச்சம் தான்.நம் நாட்டில் எப்போதும், இப்போது போல ஊழல் மலிந்திருந்தது என்று சிலர் கூறுவது உண்மையல்ல. முன்பு, ஊழல் தலை காட்டினால் ஊழல் செய்தவர் தண்டிக்கப்பட்டார். அவர் பணியாற்றிய நிறுவனத்தில், நேர்மையானவர் பதவியை ஏற்றார். மறுபடியும் நிறுவனம் நேர்மையைக் கடைப்பிடித்தது. அந்த நிலையே நாம் வேண்டத்தக்கது.நமக்கு ஒரு பிரச்னையை தீர்க்க வேண்டியுள்ளது, அதற்கு உதவி தேடுகிறோம்; கிடைக்கவில்லை. உதவி வரும் என்று ஓரளவுக்கு மேல் காத்து இருப்பதில் பயனில்லை. சோர்வு இல்லாது முயல வேண்டும்; பிரச்னையைத் தீர்க்க எவ்வாறு செயலில் இறங்க வேண்டும் என்று சிந்திப்போம்.இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வு கொள்ளாது, முயன்றால் பெருமை நம்மை வந்து அடையும் என்றார் வள்ளுவர் (குறள் 611). மேலும் அவர், அறிய வேண்டியதை அறிந்து முயலாதிருப்பதே பழி என்கிறார் (618).நமக்கு பழி வராதிருக்க, நாம் ஏற்ற முறையை அறிந்து செயலில் இறங்கி வெற்றி காண்போம்.

பதவியுடன் வருவது பொறுப்பு; அந்த பொறுப்பை நிறைவேற்ற தேவையானது அதிகாரம். இன்று, பதவியைத் தேடுவதே அதிகாரத்திற்கு என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், நம் இலக்கியங்கள், பதவி என்றால் அதற்கு என்று கடமைகள் உண்டு. அவற்றை நிறைவேற்ற முடியவில்லை என்றால், தானாகவே முன் வந்து பதவி விலகவேண்டும் என்று அறிவுறுத்துகின்றன.இன்று ஆட்சிக்கு வந்துள்ள, வர முயல்பவர்கள் யாவரையும் மக்களாகிய நாம், 'அந்த பதவிக்கு பல கடமை கள் உண்டு. அவை யாவையும் உங்களுக்குத் தெரியுமா? அக்கடமைகளை ஆற்ற தேவைப்படும் திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொண்டீர்களா?' என்று கேட்க வேண்டும்.அவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நாம் ஊக்கப்படுத்த வேண்டும்; உதவ வேண்டும். இக்கருத்தை, அனைத்து மக்களும் உணரச்செய்ய வேண்டும்.மேலும், நாம் தேர்ந்து எடுத்து ஆட்சிக்கு அனுப்பியவர், செம்மையாகச் செயல்படவில்லை; நாம் அறிவுறுத்தியும் அவர் தன் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அவர் தொடர்ந்து ஆட்சி செய்யாமல் விலகச் செய்வதும் நம் கடமை. காந்திஜி, 'ஒத்துழையாமை' இயக்கத்தின் மூலம், சூரியன் அஸ்தமிக்காத உலகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட ஆங்கிலேயர்களை, நம் நாட்டை விட்டு வெளியேற்றினார். அதே போல, நாம் நினைத்தால் ஊழல் செய்பவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாமல் ஓடச் செய்ய முடியும்.ஆட்சிப் பொறுப்பில் இருப்பவரிடம் நாம் என்ன எதிர்பார்க்க வேண்டும்?

தகுதி, நற்பண்புகள், பொறுப்புகளை நிறைவேற்றும் செயல் திறமை, இலவசங்கள் அளிப்பது, மக்கள் நலத்திட்டம் என்று சொல்ல இயலாது. இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டில் பரந்துகெடுக உலகு இயற்றியான் (குறள் 1062) என்றார் வள்ளுவர்.இப்பரந்த உலகில் மற்றவரிடம் கையேந்தித்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில் சிலர் இருக்கத்தான் வேண்டும் என்றால், இவ்வுலகை படைத்தவன் கெடுவானாக. நம் மக்கள் உலகைப் படைத்தவன் இறைவன். ஆட்சி செய்பவர் கண் கண்ட இறைவன் என்று நம்புகின்றனர். ஆகவே, இலவசத்தை எதிர்நோக்கும் மக்கள் சிலர் ஒரு நாட்டில் இருக்கின்றனர் என்றால், அது கண் கண்ட தெய்வமான ஆட்சி செய்பவருக்கு இழுக்கு.இன்றைய சூழலில் மக்கள் நல அரசு, மக்கள் அனைவருக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும், தரமான கல்வியும், தேவையான உடல்நல வசதிகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். அதாவது, அவற்றைப் பெற்றுக் கொள்ளத் தேவைப்படும் அளவுக்கு, அவர்களின் இயற்கையான திறமைகளை மேம்படுத்த வேண்டும்.தேவைப்படும் தகுதிகள், நற்பண்புகள், திறன்களை அனைத்துக் குழந்தைகளும் பெறும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதாவது, அனைவருக்கும் கல்வி வசதிகள் செய்யப்பட வேண்டும். தரமான கல்வி பெற்ற மக்கள் வாழும் நாட்டில், நல்லரசு (வல்லரசு அல்ல) நிலவும். மக்கள் அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வு வாழ்வர்; அங்கு, சாந்தி நிலவும்.

நம் கண் எதிரே தவறு நடப்பதை நாம் காண்கிறோம்; தவறு என்பதை உணர்கிறோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் நமக்குத் தெரிகிறது; ஆனால், செயலில் இறங்கத் தயங்குகிறோம். வரலாற்றைப் பார்த்தால், ஒரு சில தீயவர்களால் சமுதாயங்கள் அழியவில்லை. சமுதாயத்தில் உள்ள பல நல்லவர்கள் தீமையைக் கண்டும் வாளா இருந்ததே காரணம் என்பது விளங்கும். யாராவது ஒருவர் முதல் கல்லை எடுத்து எறிய வேண்டும். அதன் பின், பலரும் செயலில் இறங்குவர். அந்த முதல் கல்லை எறிபவர் ஏன் நாமாக இருக்கக்கூடாது?

இ-மெயில்: muthukumaran28531yahoo.com
- ச.முத்துக்குமரன்
- கல்வியாளர், முன்னாள் துணைவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement