Advertisement

விடுதலை வேட்கை

கான் ஷா அஃப்ரீதி, காஷ்மீர் விடுதலை அடையவேண்டும் என்று பெரிதும் விரும்பினார். 1947ல் அங்கு நடந்த சண்டையில் பங்கெடுத்தார். அறுபது ஆண்டுகள் கழிந்தபிறகும் காஷ்மீர் விடுதலை குறித்த அந்தக் கனவு அவர் மனத்தில் இருக்கவே செய்கிறது. 'அல்லா காஷ்மீருக்கு விடுதலை பெற்றுத்தருவார் என்று நம்புகிறேன். அதுவும், என் வாழ்நாளுக்கு உள்ளாகவே' என்று மூச்சுவிடச் சிரமப்பட்டபடி, முனகலைப் போன்ற மெல்லிய குரலில் அவர் சொன்னார். 'அது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும். ஏனெனில் அது ஒரு முஸ்லிம் பகுதி.

அவர் முதிர்ந்த வயதினராக இருந்தார். தனக்கு 120 வயது ஆவதாகச் சொன்னார். ஆனால், அவருடைய மகன், அவர் 1906 அல்லது அதற்குப் பிறகுதான், வட மேற்கு எல்லை மாகாணத்தின் தலைநகரான பெஷாவருக்குத் தெற்கே இருக்கும் மட்னி என்ற கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்ததாகச் சொன்னார். அவரது கால்கள் செயலிழந்திருந்தன. தொய்வாகப் பின்னப்பட்ட ஒரு கட்டிலில் படுத்த படுக்கையாகக் கிடந்தார். கண் பார்வை பெருமளவு மங்கியிருந்தது. கேட்கும் சக்தியை இழந்துவிட்டிருந்தார். வெள்ளைத் தாடியுடனும் வழுக்கைத் தலையை மறைக்கும் தலைப்பாகையுடனும் இருந்தார். 1947 அக்டோபரில் காஷ்மீர்மீது தாக்குதல் நடத்திய லஷ்கர் படையினரில் இன்றும் உயிருடன் இருக்கும் ஒரு சிலரில் அவரும் ஒருவர்.

தன் இளவயதில் அவர், ஆறு அடிக்கு மேலான உயரத்துடன், கம்பீரமான மனிதராக இருந்திருப்பார். தன் கடைசிக் காலத்தில் மூச்சுவிடச் சிரமப்படும் நிலையிலும்கூட, போர் பற்றிப் பேசும்போது அவரது பேச்சில் சக்தி வெளிப்பட்டது. 'மான்கி ஷரீஃபின் பிர் எங்களைப் போருக்குப் புறப்படும்படி அறைகூவல் விடுத்தார். நான் அவருடைய தொண்டன். என் கையில் அப்போது ஒரு துப்பாக்கி இருந்தது. 'நாம் போர் புரிந்தாகவேண்டும். பயப்படவே கூடாது' என்றார் பிர். 'இது முஸ்லிம்களுக்கும் பிறருக்கும் இடையிலான போர். இதில் காஷ்மீரை நாம் வென்றெடுப்பது நிச்சயம்' என்று அவர் சொன்னார்.'

அஃப்ரீதிகள், மொஹ்மாண்டுகள் மற்றும் பிற எல்லைப்புறப் பழங்குடிகள் காஷ்மீரை நோக்கிப் புறப்பட்டனர். கான் ஷா அஃப்ரீதி சொல்வதன்படிப் பார்த்தால், அந்தத் தாக்குதலை ஒருங்கிணைத்தவர்களில் அவரும் ஒருவர். இரண்டு வாகனங்களில் சென்ற படைக்கு அவர் தலைமை ஏற்றிருந்தார். 'ராணுவத் தலைவர் யாரும் எங்களை வழிநடத்த வரவில்லை. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தனித் தலைவர் இருந்தார்.' தன் குழுவினர் போரில் தொடர்ந்து ஈடுபடுவதை ஊக்குவிப்பதே அவருடைய பெரிய பணியாக இருந்திருக்கிறது. அவர் சொன்னதைக்கொண்டு ஊகித்தால், அது மிகவும் சிரமமான ஒரு வேலை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 'நாம் ஒரு போரில் ஈடுபட்டிருக்கிறோம்; கோழிக் குஞ்சுகள் போல் ஓடிவிடக்கூடாது; நிச்சயமாக ஓடக் கூடாது என்று நான் அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்.'

அரை நூற்றாண்டு கழித்துத் திரும்பிப் பார்க்கும்போது, லஷ்கர் பற்றி உருவான புராணக் கதைகளை விலக்கிவிட்டு, கான் ஷா அஃப்ரீதி தாம் பட்ட கஷ்டங்களைச் சொன்னதைக் கொண்டு பார்த்தால், லஷ்கர் போர் அப்படியொன்றும் மாபெரும் சாகசமாக இருந்தது என்று சொல்லிவிடமுடியாது. வயதான ஒரு மனிதரின் ஞாபகங்கள் வலுவான ஆதாரங்களாக ஆகமுடியாது. ஆனால், அவர் சொல்வது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. மேலும், அவர் சொன்ன விஷயங்களை நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவை ஒத்துப்போகின்றன. முதல் மூன்று நான்கு நாள்கள் லஷ்கர் படை எளிதாக முன்னேறிச் சென்றது என்றார் அவர். முதலில் ஊரியிலும் அதன் பிறகு பாரமுல்லாவிலும் சண்டை நடந்தது. பாரமுல்லாவில் குழு இரவைக் கழித்தது. மேலும் முன்னேறி ஸ்ரீநகருக்குச் சில மைல் தொலைவுவரை சென்றது. காஷ்மீரி முஸ்லிம்கள் அவர்களை வரவேற்று, ரொட்டி, பால் என தங்களால் முடிந்தவற்றைத் தந்தனர்.

முஸ்லிம் அல்லாதவர்களை நடத்தியவிதம் குறித்து கான் ஷா மிகவும் சாதாரணமாகவே பேசினார். அவர்கள் தேடப்பட்டு, கொல்லப்பட்டனர். 'பாரமுல்லாவில் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டோம். எத்தனைபேரைக் கொன்றோம் என்று தெரியவில்லை. இந்துக்களை உயிர் பயத்துடன் ஓட ஓட விரட்டினோம்' என்றார் அவர். கிறிஸ்தவ மடாலயத்தில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது? 'பாரமுல்லாவில் இருந்த கிறிஸ்தவர்களை எனக்கு நினைவிருக்கிறது. எங்கள் தலைவர் சுபாத் கான் அப்படி ஒன்றும் நல்லவரல்லர். அவர் அங்கிருந்தவர்கள்மீது கை வைத்தார்.' யாரும் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றே இவரும் சொன்னார். கொள்ளையடித்தோம்; ஆனால், பிற பழங்குடிகள்தான் எல்லாத் தவறுகளையும் செய்தார்கள் என்று தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் தொனியில் சொன்னார்.

பாரமுல்லாவில் இருப்போர் நினைவில் இருப்பவையெல்லாம் கொலை, கொள்ளை, தீ வைப்பு, முறைகேடுகள், பாலியல் பலாத்காரம் ஆகியவையே. இனாயத்துல்லா எனும் வர்த்தகர், தாக்குதல் நடந்தபோது தன் இருபதுகளில் இருந்தார். அவருக்கு லஷ்கர்மீது வீண்பழி சுமத்தவேண்டிய அவசியம் இல்லை. 1940களில் பாகிஸ்தானுக்கு ஆதரவான முஸ்லிம் கான்ஃபரன்ஸ் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டார். ஜின்னாவின் முஸ்லிம் லீக் கூட்டங்களில் பங்கெடுத்திருந்தார். பாரமுல்லாவில் தன் வீட்டில் இருந்தபடி அவர் என்னிடம் சொன்னவை உறுதிப்படுத்த முடியாதவை; ஆனால் அவருடைய ஞாபகத்தில் இருந்து விலகாதவை; அபாரமானவை.1

பழங்குடிகள் பாரமுல்லாவில் நுழைந்த சமயம், இனாயத்துல்லா, பாரமுல்லாவில் இருந்த தன் தியேட்டரில் காண்பிப்பதற்காக ஃபிலிம் சுருள் ஒன்றை வாங்க லாஹூருக்குப் போயிருந்திருக்கிறார். சண்டை காரணமாக வாகனப் போக்குவரத்து முடங்கியிருந்ததால், ஆக்கிரமிப்பாளர்களுடன் பேசி, அவர்களுடைய வாகனத்தில் ஏறி பாரமுல்லா வந்து சேர்ந்திருக்கிறார். இதன் காரணமாக, இந்தியப் படைகள் பாரமுல்லாவைக் கைப்பற்றியதும், இனாயத்துலாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

'ஊரியில் இருந்து பாரமுல்லாவரை நான் அவர்களுடைய வாகனத்தில் வந்தேன். என் பாதுகாப்புக்காக அவர்கள் ஒருவரை நியமித்திருந்தனர். இரண்டு நாள்கள் கழிந்தபிறகு அவர்கள் என்னிடமிருந்தே கொள்ளையடித்தனர்.' லஷ்கர் படையினர் உள்ளூர் நட்புச் சக்திகளுடன் நடந்துகொண்ட விதம் குறித்து, இத்தனை ஆண்டுகாலம் கழிந்தபிறகும் அவர் மிகவும் கோபத்தில் இருந்தார். 'என்னை பாரமுல்லாவில் இறக்கிவிட்டதும் என் பாதுகாவலுக்காக அவர்கள் ஒரு பழங்குடியை நியமித்தனர்' என்று அதையே இனாயத்துல்லா மீண்டும் அழுத்தமாகச் சொன்னார். 'நான் அவரை என் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இரண்டு நாள்கள் கழித்து என்னையே கொள்ளையடித்தனர்.'

ஜீலம் பள்ளத்தாக்குச் சாலை வழியாக ஸ்ரீநகரிலிருந்து பாரமுல்லா வரும்போது, புறநகர்ப் பகுதியில் ஒரு பெரிய, நவீனமான, போர்த் தியாகிகள் நினைவிடம் அமைந்துள்ளது. போர் இன்னும் முடியவில்லை என்பதை உணர்த்துவதுபோல் அந்த நினைவிடத்துக்கு ஓர் இந்திய ராணுவ வீரர் காவலாக நிற்கிறார். நான் அந்தப் பகுதியைக் கடந்தபோது, ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையினர் பணியில் இருந்தனர். யாருமே வராத நினைவிடம் ஒன்றுக்கு நான் வந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கவேண்டும். என்னுடன் வந்த இரண்டு காஷ்மீரிகளும் காரிலிருந்து இறங்கவேயில்லை. இந்திய ராணுவ நினைவிடத்துக்கு உள்ளூர்க்காரர்கள் வருவது, அவர்கள்மீது அதிக கவனத்தைக் குவிக்கக்கூடும்.

செங்கல்லால் கட்டப்பட்ட வளைவைத் தாண்டி இருக்கும் ஒரு கறுப்பு பளிங்குக் கல்லில், காஷ்மீரின் ஆரம்பகட்டப் போரில் இறந்த இந்தியர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காவலர்களின் உற்சாகப்படுத்தலைத் தொடர்ந்து, சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டபின், நன்கு பராமரிக்கப்பட்ட, இரு புறமும் பூச்செடிகள் வளர்க்கப்பட்ட மேடான ஒரு பாதையில் நடந்து சென்றேன். அந்தப் பாதை, அருமையான நினைவுத்தூண்கள் இருக்கும் மலைப்பகுதிக்கு இட்டுச் சென்றது. அதன் கீழே இருந்த கல்வெட்டில், 'காஷ்மீரிகள் சுதந்தரமாக வாழவேண்டும் என்பதற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த சீக்கிய ரெஜிமெண்ட்டின் முதல் பட்டாலியனைச் சேர்ந்த வீரம் நிறைந்த ராணுவத்தினரின் நினைவாகக் கட்டப்பட்டது. 27 அக்டோபர் 1947ல் ஸ்ரீநகரில் முதன்முதலாகக் கால் பதித்த இந்திய வீரர்கள் இவர்களே. இந்தக் குன்றில்தான் அவர்கள் முதல் போரை நிகழ்த்தினர்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்துதான், பாகிஸ்தானின் படைகளை விரட்டுவதற்காக முதல் தோட்டா சுடப்பட்டது.


இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன?1947 அக்டோபர் நவம்பரில் நடந்தவற்றை நேரில் அனுபவித்தவர்களின் வாய்மொழி வரலாற்றைத் தொகுத்து, அதன்மூலம் காஷ்மீர் பிரச்னையின் மூல ஊற்றைக் கண்டுபிடிப்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். நேரடி ஆய்வின் மூலம் பெறப்பட்டு, இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் தகவல்களும் பார்வைகளும் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்குச் சாதகமாக உருவாக்கியுள்ள அதிகாரபூர்வ வரலாறுகளைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன. முக்கியமாக, காஷ்மீர்மீதான லஷ்கர்களின் தாக்குதலைத் திட்டமிட்டு வழிநடத்தியதை முற்றாக மறுக்கும் பாகிஸ்தானை இவை கேள்விக்கு உள்ளாக்குகின்றன. அதேபோல, இந்தியாவுடன் காஷ்மீர் சேர்ந்தது தொடர்பாக இந்தியத் தரப்பில் சொல்லப்படுவனவற்றையும் இவை கேள்விக்கு உட்படுத்துகின்றன.

புதிதாக உருவான பாகிஸ்தான் அரசு, பதவி ஏற்ற சில வாரங்களுக்குள்ளேயே காஷ்மீரில் ஒரு ராணுவக் குறுக்கீட்டை நடத்தி, அதன்மூலம் இந்தியாவிடமிருந்தும் மகாராஜாவிடமிருந்தும் காஷ்மீரைப் பறிக்கத் தீர்மானித்தது. பாகிஸ்தானின் குழப்பமான முயற்சி தொடர்பாக இரு அம்சங்களைச் சொல்லலாம். பூஞ்சிலும் அதைச் சுற்றியிருக்கும் பகுதியிலும் மகாராஜாவுக்கு எதிராக ஏற்கெனவே நடைபெற்றுக்கொண்டிருந்த கலகங்களுக்கு மேலும் உதவி செய்யலாம் என்று பாகிஸ்தானின் அரசும் அதன் ராணுவத்தின் ஒரு பிரிவினரும் எண்ணினர். இது, பாகிஸ்தானின் கோணத்தில் நல்லபடியாகவே நடந்தது. ஜீலம் ஆற்றின் இடது கரைப் பகுதியில் பாகிஸ்தானின் பஞ்சாப் வரையிலான பகுதியின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. அந்தப் பகுதியை மகாராஜாவாலோ இந்திய அரசாலோ இதுவரை திரும்பப் பெற முடியவில்லை. இந்தப் பகுதிதான் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆஸாத் காஷ்மீரின் அதிகமான மக்கள் இருக்கும் பகுதியாக இப்போதும் இருந்துவருகிறது.

மற்றொரு கோணத்தில் காஷ்மீரைக் கைப்பற்ற பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட ராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எந்த வெற்றியையும் பெற்றுத்தரவில்லை. இந்தக் கலகத்துக்கு உள்ளூர் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, பாகிஸ்தான் அதிகாரிகள் காஷ்மீருக்கு வெளியிலிருந்து, ஹஸாரா அல்லது பதான் பழங்குடிகளையே பெரிதும் நம்பவேண்டியிருந்தது. இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு உள்ளூரில் பெரிய அளவில் ஆதரவு ஏதும் இருக்கவில்லை. இருந்த கொஞ்சநஞ்ச ஆதரவும் ஆக்கிரமிப்பாளர்களின் கொள்ளையடிப்பாலும் பிற அட்டூழியங்களாலும் முற்றாக இல்லாமல் போனது.

வாசிரிஸ்தானில் இருந்து ஜிஹாத் மனநிலை கொண்ட பழங்குடிப் படையினரை ஆக்கிரமிப்புக்குப் பயன்படுத்தும் நோக்கம் அப்படி ஒன்றும் நன்கு ஆலோசித்து எடுத்த முடிவுபோல் தெரியவில்லை. சட்டெனத் தோன்றிய ஒரு முடிவுபோலத்தான் தெரிகிறது. பழங்குடிகள் சண்டை போட ஆவலாக இருந்தனர். வட மேற்கு எல்லைப் பகுதியில் இருந்த அதிகாரிகளும் குர்ஷித் அன்வர் போன்றவர்களும் லஷ்கர் படைகளைப் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்கள். லஷ்கர் படையில் இயல்பிலேயே இருந்த ஒழுங்கின்மை, ஓர் ஆக்கிரமிப்புச் சக்தியாக அவர்கள் வெற்றி பெறும் வாய்ப்புகளை வெகுவாகக் குறைத்தது. கட்டுப்பாட்டைக் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகளும் பழங்குடிகளுக்குள் இயல்பாக இருந்த பிரிவுகளும், ஸ்ரீநகர் நோக்கிய நகர்வைத் தாமதப்படுத்தின. பாரமுல்லாவிலிருந்து விரைவாக ஸ்ரீநகருக்கு லஷ்கர்கள் போய்ச் சேர்ந்திருந்தால் ஸ்ரீநகரின் விமானதளத்தைக் கைப்பற்றியிருக்க முடியும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் கால் பதிக்க விடாமல் தடுத்திருக்க முடியும். அப்படி மட்டும் நடந்திருந்தால், லஷ்கர் படை ஸ்ரீநகரைக் கைப்பற்றியிருக்கும் என்றும் இன்று ஒட்டுமொத்தக் காஷ்மீருமே பாகிஸ்தானின்கீழ் இருந்திருக்கும் என்றும் இந்திய மற்றும் பாகிஸ்தானி ராணுவ அதிகாரிகளும் ஆய்வாளர்களும் கணிக்கிறார்கள்.

அது கொஞ்சம் அதிகப்படியான கணிப்புதான். ஏனெனில், அப்படி நடந்திருந்தால் இந்தியா தன் படைகளை ஜம்முவில் களமிறக்கி இருக்கும். குளிர்காலத்தில் பனிஹால் கணவாய் வழியாகப் பயணம் செய்வது சிரமமாக இருந்திருக்கலாம். ஆனால், அதன் பிறகு நிச்சயமாக இந்தியா, காஷ்மீர் தொடர்பான தன் சண்டையைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி, லஷ்கர்களின் ஸ்ரீநகர் முற்றுகையை உள்ளூர் மக்கள் கடுமையாக எதிர்த்திருப்பார்கள். குறைந்தபட்சம் தேசிய கான்ஃபரன்ஸ் படையினராவது தீவிரமாக எதிர்த்திருப்பார்கள். பாரமுல்லாவில் நடந்துகொண்டது போலவே ஸ்ரீநகரிலும் மக்கள்மீது லஷ்கர் படை அத்துமீறி நடந்துகொண்டிருக்கும். அதனால், இந்தியாவும் சர்வதேசச் சமூகமும் இதனைக் கடுமையாக எதிர்த்திருப்பார்கள். பழங்குடிப் படைகள் ஆரம்பத்தில் பெற்ற வெற்றிகளை, முறையான ராணுவத்தை அனுப்பி பாகிஸ்தான் பலப்படுத்திக்கொண்டிருந்தால் மட்டுமே ஸ்ரீநகர் பாகிஸ்தான்வசம் போயிருக்கும்.

பழங்குடிகள் மூலமான காஷ்மீர் ஆக்கிரமிப்பு குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் எம்மாதிரியான எண்ணங்களைக் கொண்டிருந்தாலும், இந்தியப் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்தவுடன், பழங்குடிப் படைகளுக்கு ஆதரவு தருவதைத் தவிர, பாகிஸ்தான் ராணுவத்துக்கு வேறு வழியில்லாமல் போனது. அதற்கு ஒரே மாற்றுவழி, பாகிஸ்தான் தன் ஒட்டுமொத்த ராணுவத்தைத் திரட்டி இந்தியாவைப் போருக்கு அழைப்பதாக மட்டுமே இருந்திருக்கும். பாகிஸ்தானின் நிறுவனரும் தலைவருமான முகமது அலி ஜின்னா பழங்குடிப் படைகளுக்கு ஏராளமான பண உதவிகளையும் ஆயுத உதவிகளையும் கொடுக்குமாறு உத்தரவிட்டார். பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் சிலரையும் உதவிக்கு அனுப்பினார். 1947 கடைசி வாரத்தில் இந்தியா காஷ்மீரில் மேலும் முன்னேறாமல் தடுக்க அவை உதவின. அதையடுத்த கோடைக்காலத்தில், பாகிஸ்தானின் பஞ்சாப் நோக்கி மேற்குத் திசையில் இந்தியப் படைகள் முன்னேற ஆரம்பித்ததும், பாகிஸ்தான் அரசு அதைத் தடுக்கத் தன் ராணுவத்தை அனுப்பியது. அதைத் தொடர்ந்து யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாத நிலை உருவானது. காஷ்மீரை இரண்டாகப் பிரித்ததோடு அந்தப் போர் முடிவுக்கு வந்தது. அன்றுமுதல் காஷ்மீரில் இதே நிலை நிலவிவருகிறது.

காஷ்மீர்மீதான இந்தியாவின் உரிமை கோரல் இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது: பழைய மற்றும் புதிய காஷ்மீரின் இரு முக்கிய அரசியல் தலைவர்களான மகாராஜாவும் ஷேக் அப்துல்லாவும், ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் சேரவேண்டும் என்று விரும்பியிருந்தனர்; மேலும், காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தபிறகே இந்தியா ஸ்ரீநகருக்குத் தன் படைகளை அனுப்பியது. ஆனால், இரண்டாவது விஷயம் தொடர்பாகக் குழப்பமே நிலவுகிறது. இந்தியாவுடன் காஷ்மீர் சேர்ந்தது தொடர்பாக மகாராஜாவிடமிருந்து கையெழுத்து பெற்ற வி.பி. மேனன் இது குறித்துச் சொல்லும் தகவல்கள் பிழையானவையாக இருக்கின்றன. நிச்சயமாகச் சொல்லமுடியாது என்றாலும், இந்தியப் படைகள் ஸ்ரீநகரில் கால் பதித்த சில மணிநேரங்கள் கழித்தே மகாராஜா இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

காஷ்மீர் பிரச்னையின் புவிஅரசியல் குறித்துப் பேசுவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். இந்த ஆய்வின் நோக்கம், காஷ்மீர் நிலப்பகுதி என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் பிரச்னைக்குரிய ஒரு பகுதி என்பதை வலியுறுத்துவது மற்றும் 1947ல் நடந்த வன்முறைச் சம்பவங்களை, பாதிக்கப்பட்டவர்களின், அதாவது, காஷ்மீரிகள் மற்றும் வெளியாட்கள், போராளிகள் மற்றும் பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் குடிமக்கள் ஆகியோரின் வார்த்தைகள்மூலமாக விவரிப்பது.

இந்தப் புத்தகம், 27 அக்டோபர் 1947 என்ற ஒரே ஒரு நாளை மையமாகக் கொண்டு சுழல்கிறது. இந்த நாளில்தான் மவுண்ட்பேட்டன் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை ஏற்றுக்கொண்டார். இதே நாளில்தான் இந்தியா காஷ்மீருக்குத் தன் படைகளை அனுப்பியது. இதே நாளில்தான் பாகிஸ்தான் பழங்குடியினர் பாரமுல்லாவின் செயிண்ட் ஜோசப் மடாலயத்தையும் மருத்துவமனையையும் சூறையாடினார்கள். இந்தத் தேதியில்தான் காஷ்மீர் பிரச்னையின் முக்கியமான சம்பவங்கள் நடந்தேறின. இந்தப் புத்தகம், இந்தச் சம்பவங்களை இயக்கியவர்கள் பற்றியல்ல, இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியது.

சமூக வரலாறு என்பது மக்களைப் பற்றியது. நல்ல செய்தி சேகரிப்பு என்பதும் அப்படியே. காஷ்மீர் பிரச்னைக்கான சிறந்த தீர்வு என்பது காஷ்மீர் மக்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதைக் கூர்ந்து கேட்பதில்தான் இருக்கிறது. அத்துடன் அவர்களுடைய தலைவிதியை அவர்களையே தீர்மானிக்க விடுவதுதான் சிறந்தது. அது எப்போது, எப்படி நடக்கவேண்டும் என்பதைத்தீர்மானிப்பதில்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தேசிய நலன்கள், அதிலும் குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கை ஆண்டுவரும் இந்தியாவின் நலன்கள், இருக்க முடியும்.

========================

காஷ்மீர் : முதல் யுத்தம்

ஆண்ட்ரூ வைட்ஹெட்

தமிழில் : B.R.மகாதேவன்

கிழக்கு பதிப்பகம்

408 பக்கம் விலை ரூ.300

இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/kashmir.html

தொலைபேசி வழியாக இந்தப் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement