Advertisement

கொல்லும் நினைவுகள்; இந்தியாவா பாகிஸ்தானா?

காலையில் கண் விழித்தபோது சுற்றிலும் துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டது. அக்கம்பக்கம் எல்லாம் துப்பாக்கிச் சூடு நடந்துகொண்டிருந்தது. நான் எழுந்து, மருத்துவமனைத் தோட்டத்துக்குச் சென்றேன். அங்கே சில கன்யாஸ்திரீகள் மிகுந்த கவலையுடனும் பயத்துடனும் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். என்னை அருகில் வருமாறு அழைத்தனர். உடனேயே அந்தப் பகுதி முழுவதுமே துப்பாக்கிச் சூடு, மரண ஓலங்கள், கதறல்கள் ஆகியவற்றால் நிரம்பியது. கன்யாஸ்திரீகள் என்னை இழுத்துக்கொண்டு தோட்டத்தின் அருகில் இருந்த அறைக்குப் போனார்கள். அது மருந்துகள் வைக்கப்படும் அறை என்று நினைக்கிறேன். உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டுக்கொண்டோம்.'


இது நடந்தது அக்டோபர் 27, திங்கள்கிழமை காலை. பழங்குடிகள் மடாலயத்தில் நுழைந்து சுடத் தொடங்கியிருந்தனர். இந்தக் களேபரத்தின் நடுவே, டாம் டைக்ஸ் தன் பெற்றோரிடமிருந்தும் சகோதரர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டான். 'அதன்பின் அவர்கள் நாங்கள் ஒளிந்திருந்த அறையின் கதவை உடைக்க ஆரம்பித்தார்கள். மரத் துண்டுகள் அறை முழுதும் தெறித்தன. கதவின் உடைசல்கள் வழியே அவர்களது பயங்கரமான முகங்கள் தெரிய ஆரம்பித்தன. அப்போது, அந்த அறையின் பின்பக்கம் இன்னொரு கதவு இருப்பதைக் கண்டேன். அதைத் திறக்க முயன்றேன். நல்லவேளையாக அது தாழிடப்படவில்லை. கதவைத் திறந்துகொண்டு, கன்யாஸ்திரீகளை அங்கேயே விட்டுவிட்டு, நான் மட்டும் வெளியே ஓடிவிட்டேன். கன்யாஸ்திரீகள் ஒரு மூலையில், ஒருவரை ஒருவர் இறுகப் பிடித்தபடி, பயத்தில் உறைந்துபோயிருந்தனர். அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாது. அவர்களில் சிலரை நான் பிறகு பார்க்கவே இல்லை.வேறு சிலர், உடைகள் கிழிந்த நிலையில் அங்கும் இங்கும் அலைந்தனர். அவர்கள் சிலர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.'


அவனது பெற்றோர்கள் பழங்குடிகளால் கொல்லப்பட்டபோது, டாம் டைக்ஸுக்கு ஐந்து வயதுதான். மூன்று டைக்ஸ் சகோதரர்களில் கடைசிப் பையன் பிறந்து இரண்டு வாரங்கள்தான் ஆகியிருந்தன. அவர்கள் மூவரையும் அவர்களது சித்தி எடுத்து வளர்த்தார். தம் பெற்றோர் பற்றியோ, அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது பற்றியோ கேள்வி கேட்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் மீண்டும் காஷ்மீருக்குத் திரும்பவே இல்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மற்றொரு சோகமான அங்கமான தென் ஆப்பிரிக்காவிலேயே அவர்களது வாழ்க்கை கழிந்தது. ஜொஹான்னஸ்பர்குக்கு அருகில் ஓர் இடத்தில் டாம் வசிக்கத் தொடங்கினார். தன் சகோதரரைப் பார்க்க அவர் லண்டனுக்கு வந்தபோது நான் அவரைச் சந்தித்தேன்.


தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்டிருந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு டாம் தன்னை மாற்றிக்கொண்டிருந்தார். அந்த நாட்டிலிருந்து தப்பிச் செல்லும் வெள்ளையர் கூட்டத்தில் ஒருவராக அவர் இருக்க விரும்பவில்லை. பிரதான நகரத்தின் மையத்தைவிட்டுக்கூட விலகிச் செல்ல அவர் விரும்பவில்லை. ஜொஹான்னஸ்பர்கை, அதன் எல்லாக் குறைகளுடனும் அவர் நேசித்தார். மிதமான, ஆனால் உறுதியான தொனியில் பேசினார். இதமான, சிறிய, உறுதியான முகம். சற்றே பருமனானவர். நிறையத் தலை முடி. அவரது குரலில் தென்னாப்பிரிக்க உச்சரிப்பு சிறிது மட்டுமே இருந்தது. அவருடைய அடக்கமும் உள்ளொடுங்கிய தன்மையும் அவர்மீது ஒருவித நம்பிக்கையைக் கொடுத்தது. அவருடைய வார்த்தைகள் ஆணித்தரமாக இருந்தன.


அவர் தன் சகோதரர்களிடம் ஒருபோதும் பெற்றோரின் மரணம் குறித்துப் பேசியதில்லை என்று அவருடைய சகோதரர் கூறினார். டாம் அதைப்பற்றி அதிகம் பேசியதில்லை என்றாலும் அவரது ஞாபகம் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தது. பெற்றோர் குறித்த அவரது நினைவு பிரத்தியேகமானது. குடும்பப் படங்கள், நினைவுப் பொருள்கள் ஆகியவற்றால் வலுவூட்டப்பட்டது. 'பெற்றோரின் படங்களைப் பார்க்கும்போது விசித்திரமாக இருக்கும். ஏனெனில், அவர்கள் தங்கள் முப்பதுகளிலேயே இறந்துவிட்டிருந்தனர். உங்கள் பெற்றோரை இள வயதினராக, அதுவும் உங்களைவிட இள வயதினராகப் பார்க்க நேர்வது மிகவும் வேடிக்கையானது. அவர்களைப் பற்றி என்னால் அப்படி மட்டுமே நினைத்துப்பார்க்க முடிகிறது. அவர்கள் எப்போதுமே நிரந்தர இளைஞர்கள்! அது மிகவும் வித்தியாசமானதுதான்.'


பாரமுல்லா, அவருடைய பெற்றோர்கள் கொல்லப்பட்ட இடம் மட்டுமல்ல, டாம் பிறந்த இடமும்கூட. அதுவும், அதே மடாலய மருத்துவமனையில்தான் அவர் பிறந்தார். செயிண்ட்ஜோசப் மருத்துவமனை, பிரசவத்துக்குச் சிறந்த இடம் என்று பெயர் பெற்றிருந்தது. இந்த இடம் ராவல்பிண்டிஸ்ரீநகர் வழித்தடத்தில் இருந்த காரணத்தால், பிரிவினைக்கு முந்தைய காலகட்டத்தில் அங்கு வந்து போவது மிகவும் எளிதாக இருந்தது. காஷ்மீரில் விடுமுறை நாள்களில் படகு வீடுகளில் இருந்தது, தந்தையுடன் மீன் பிடித்தது போன்ற இனிமையான நினைவுகள் டாமின் மனத்தில் பதிந்திருக்கின்றன.


'ராணுவத்திலிருந்து விலகியபிறகு என் தந்தை என்ன செய்திருப்பார் என்பது குறித்து என்னால் ஊகிக்கமுடியவில்லை. எடின்பரோவில் பிறந்து வளர்ந்த அவருடைய பேச்சில் ஸ்காட்லாந்தின் சாயல்கூட இருக்குமா என்பது சந்தேகமே' என்றார் டாம். 'பல வருடங்களுக்குமுன் நடந்த விஷயங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், எனக்கு ஒரு வருத்தம் உண்டு. நான் குழந்தையாக இருந்தபோது அந்தக் கெட்ட சம்பவங்கள் பற்றிப் பேச முயல்வேன். அவை என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தன. ஆனால், யாரும் என்னுடன் அது பற்றிப் பேசத் தயாராக இல்லை. என் குடும்பத்தினரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். எங்கள் குடும்பத்தில் யாருமே அது பற்றிப் பேசிக்கொண்டதை நான் கேட்டதில்லை. அதை மறப்பதுதான் சிறந்த வழி என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், என்னால் அதனை ஏற்க முடியவில்லை.'


டாம் ஜூனியர், அவருடைய சகோதரர்கள், உயிருடன் இருக்கும் சக அதிகாரிகள், கர்னல் டைக்ஸின் பணி ஆவணங்கள், பிற அலுவலக ஆவணங்கள் ஆகியவற்றில் இருந்து டாம்பிட்டி தம்பதிகளின் வாழ்க்கை குறித்த முழுச் சித்திரத்தைப் பெற முடிகிறது.1 டாம் 1914ல் எடின்பரோவில் பிறந்து, அங்கேயே கல்வி கற்றார். சாந்தர்ஸ்ட்டில் இருந்த ராயல் மிலிட்டரி கல்லூரியில் படித்தார். விஷய ஞானம் இருந்தாலும், அதிக வசீகரம் இல்லாதவராக இருந்திருக்கிறார். தன் 21வது வயதில் இந்திய ராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். லாஹூரில் இருக்கும் ராயல் ஸ்காட்ஸ் ரெஜிமெண்டில் இரண்டாம் நிலை லெப்டினண்டாக முதல் வருடம் பணிபுரிந்திருக்கிறார். இந்திய ராணுவத்தில் ஃபீல்ட் மார்ஷலாக மிக உயர்ந்த பதவியை எட்டிய சாம் மானெக்ஷா, டாமின் சம காலத்தவர், நண்பர். 'அவர் மிக உயரமானவர். 6.2 அல்லது அது போன்ற ஏதோ உயரம் கொண்டவர். வெளிர்நிற முடி, அழகானவர் என்று ஞாபகம் உள்ளது' என்று மானெக்ஷா நினைவுகூர்ந்தார். கவலையற்றுத் துள்ளித் திரியும் இளைஞர்களுக்கு 1930களில் லாஹூரில் வாழ்வது எளிதாகவே இருந்தது. 'எங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தோம். பெண் நண்பர்களுக்குக் குறைவே இல்லை. உணவு விடுதிகள் பல இருந்தன. நடன அரங்கங்கள் இருந்தன. 'சாம், உன் காரை எடுத்துச் செல்லலாமா?' என்று நண்பர் ஒருவர் வந்து கேட்பார். 'தாராளமாக எடுத்துச் செல். ஆனால், பத்திரமாகப் பார்த்துக் கொள்' என்பேன்.இந்தியாவா பாகிஸ்தானா?:
கரன் சிங்கின் வாழ்க்கையில் விதி விளையாடியிருக்கிறது. பிரெஞ்ச் சுற்றுலா நகரான கானில் மகாராஜா சர் ஹரி சிங்கின் நான்காவது மனைவிக்கு மகனாகப் பிறந்து அரச வாரிசான அவர், டோக்ரா வம்சம் நீடித்திருந்தால் காஷ்மீரின் மன்னர் ஆகியிருப்பார். 'நிலப்பிரபுத்துவ மாதிரியில் மன்னர் ஆகவேண்டும் என்ற விருப்பம் எனக்கு நிச்சயமாக இருக்கவில்லை. மரணத்தைவிடக் கொடிய நிகழ்வான அதிலிருந்து காப்பாற்றப்பட்டு, ஒரு ஜனநாயக நாட்டில் சொந்தக் காலில் முன்னேறும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 1 தெளிவாகப் பேசும் திறன், தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் என தன் தந்தையிடம் இருந்திராத பல குணங்களைத் தன் வாழ்க்கையில் காண்பித்தவர் கரன் சிங். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் கேபினட் அமைச்சராகவும் இருந்தவர். இந்தியாவின் ஜனாதிபதி ஆகும் கனவும் ஒருகாலத்தில் அவரிடம் இருந்திருக்கிறது. பல துறைகளில் இருக்கும் ஆர்வம், கம்பீரமான மேதைமை ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் முதிய ராஜதந்திரியாக இருந்தார். இந்தக் காரணத்தாலேயே, காஷ்மீர் குறித்துப் பேச மிகவும் தயங்கினார். தன் தந்தை ஒரு காலத்தில் ஆட்சி செய்த சமஸ்தானத்தைத் தாண்டியே தன் கவனங்கள் இருப்பதாக அழுத்தமாகச் சொன்னார்.


ஆனால், அவர் வெறுத்த நிலப்புரபுத்துவம்தான் அவரது வாழ்க்கையை உயர்த்தியது என்பதை மறுக்க முடியாது. அவருடைய சுய சரிதையின் முதல் தொகுப்பின் தலைப்பு 'வாரிசு'. அவர் வகித்த முதல் அரச பதவி முற்றிலும் பிறப்பின் காரணமாகவே அவருக்குத் தரப்பட்டது. 1949ல் ஜம்மு காஷ்மீர் ஆட்சியில் இருந்து அவரது தந்தை நீக்கப்பட்டதும், கரன் சிங் அந்த இடத்தில் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் கழிந்து, இந்திய காஷ்மீரின் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, கரன் சிங் காஷ்மீரின் புதிய ஆட்சித் தலைவராக (சாதர்இரியாசத்) நியமிக்கப்பட்டார். டோக்ரா அரச வம்சம் கலைக்கப்பட்டது. ஆனாலும், ஒருவிதத்தில், அவருடைய தந்தை ஒருபோதும் இருந்திராதவகையில் சட்டபூர்வமான தலைவராக மகன் பதவியேற்றார். அந்தப் பதவி, வெறும் 21 வயதிலேயே அவருக்குக் கிடைத்துவிட்டது. 35 வயதானால்தான் அந்தப் பதவியை வகிக்க முடியும் என்று இருந்த சட்டத்தை அவருக்கு சாதகமாக எப்படி மாற்றினார்கள் என்பது குறித்து அவரே தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.2


ஒரு வருடத்துக்குப்பின், தில்லியின் ஆசியுடன் அவர்தான் ஷேக் அப்துல்லாவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார். காஷ்மீரின் சிங்கம், அடுத்த 22 வருடங்களின் பெரும்பகுதியை சிறையிலேயே கழிக்க நேர்ந்தது. ஆட்சிப் பொறுப்புக்காக தயார்ப்படுத்தப்பட்டிருந்தாலும் கரன் சிங் அதற்கு முழுவதுமாகத் தயாராக இல்லை. 1947ன் இறுதியில் நியூ யார்க்குக்கு மருத்துவ சிகிச்சைக்காகப் போனபோதுதான் முதன் முதலாகத் தான் ஒரு பனிப் பொழிவைப் பார்த்ததாக அவர் தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார். குழந்தையாக இருந்தபோது காஷ்மீரில் அவர் குளிர்காலத்தைக் கழித்ததே இல்லை. அதுமட்டுமின்றி, அந்த நியூ யார்க் பயணத்தின்போதுதான் அவர் ஷேக் அப்துல்லாவை முதன் முதலாகச் சந்தித்தார். ஷேக் அப்துல்லா அப்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியக் குழுவில் பிரதிநிதியாகச் சென்றிருந்தார். அவர்கள் காஷ்மீரில் இருந்தபோது சந்தித்துக்கொண்டதே இல்லை!


தான் தன் தந்தையுடன் நெருக்கமாக இருந்ததில்லை என்பதைக் கரன் சிங் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளார். தந்தை, கடுமை நிறைந்தவராகவும் தொலைவானவராகவுமே அவருக்குத் தோற்றம் அளித்தார். பழங்குடிகளின் தாக்குதல்தான் சுதந்தர காஷ்மீர் குறித்த அவருடைய தந்தையின் கனவை கைவிடச் செய்தது; இந்தியாவுடன் சேரவும் வைத்தது என்று கரன் சிங் என்னிடம் சொன்னார். 'இப்படியான ஓர் ஆக்கிரமிப்பு நடக்கும் என்று அவர் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. ஆனால், உண்மையில் அவர் அதை எதிர்பார்த்திருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அது, பாகிஸ்தானால் தூண்டப்பட்டு, பண உதவி அளிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. எல்லைப் பகுதிப் பழங்குடியினரை ஊடுருவச் செய்து காஷ்மீரைக் கைப்பற்ற முயன்றனர். பறித்து விடும்படித் தூண்டும்வகையில் பழுத்த பழமாக காஷ்மீர் இருந்தது. நேராக உள்ளே நுழைந்து எடுத்துச் சென்றுவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் மாறாக, என் தந்தையை இந்தியாவுடன் சேரும்படி அது வற்புறுத்தியது. நிச்சயமாக, பாகிஸ்தான் விரும்பியது அதுவாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.' பெரும் குரலில் சிரித்தபடி இவ்வாறு அவர் சொன்னார். 'அந்த ஆக்கிரமிப்புதான் கட்டாயமாக இந்தமாதிரி ஒரு முடிவை எடுக்க வைத்தது.' முடிவே எடுக்காமல் குழப்பத்திலேயே எப்போதும் இருக்கக்கூடிய மகாராஜாவை இந்த நிகழ்வு, ஒரு முடிவை எடுக்கவைத்தது.


புதிதாக உருவான நாடுகளுடன் சர் ஹரி சிங் சேர விரும்பாமல் இருந்ததன் காரணத்தை ஊகிப்பது கடினமல்ல. சமஸ்தான மன்னர்களுக்கு நெருக்கமாக இருப்பதுபோல் பாகிஸ்தான் தன்னைக் காட்டிக் கொண்டது. என்றாலும், அதன் வலுவான மத அடையாளம் பெரும் பிரச்னையாக இருந்தது. அதன் அடிப்படையே, முஸ்லிம்கள் ஒரு மதத்தினர் என்பதைத் தாண்டி, ஒரு தேசம் என்ற கட்டமைப்பைக் கொண்டவர்கள் என்று சிந்தித்ததுதான். பெரும்பாலான காஷ்மீரிகள் முஸ்லிமாக இருந்தாலும், மகாராஜா ஓர் இந்து. அவருடைய அரசவையின் மூத்த மந்திரிகள் அனைவருமே முஸ்லிம் அல்லாதவர்கள். அவருடைய படை பெரும்பாலுமே முஸ்லிம் அல்லாதது. அதிலும், அதன் மூத்த அதிகாரிகள் மேலும் அப்படிப்பட்டவர்கள். அவருடைய பிரஜைகளில் கால்வாசிப் பேர், முஸ்லிம் அல்லாதவர்கள். அந்தக் கால்வாசியில்தான் ராஜாவின் சமூகமான ஜம்மு டோக்ரா பிரிவினர் அடங்குவர்.


ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான், முஸ்லிம்கள் அல்லாதோருக்கு ஏற்ற இடமாக இருக்கவில்லை. பிரிவினையின்போது உயிர் பிழைத்த சீக்கியர்கள் அனைவருமே இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர். எல்லைப் பகுதியில் இருந்தவர்கள் காஷ்மீர் வழியாகவே இந்தியாவுக்குச் சென்றனர் அல்லது காஷ்மீரிலேயே தங்கிவிட்டனர். பாகிஸ்தானில் இருந்த இந்துக்களில் பெரும்பான்மையோரும் இந்தியாவுக்கு வந்துவிட்டிருந்தனர். ஒரு காலத்தில் பல சமூகங்கள் இணைந்து வாழ்ந்த மேற்கு பஞ்சாப், இப்போது ஒற்றைத்தன்மை கொண்டதாக ஆகியிருந்தது. இந்துக்கள் சொற்ப அளவிலேயே இருந்தனர். சீக்கியர்கள் இல்லவே இல்லை. லாஹூர் போன்ற பகுதிகளில் இருந்த கோவில்களிலும் குருத்வாராக்களிலும் பிரார்த்தனை செய்ய யாருமே இல்லை. அதேபோல் இந்திய பஞ்சாபில் இருந்த பெரும்பாலான முஸ்லிம்களும் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். எஞ்சிய மக்கள்தொகையில் 1% பேரே முஸ்லிம்கள்.


வழக்கறிஞரும் 1947 அக்டோபர் நடுவில் காஷ்மீரின் பிரதமராக ஆனவருமான மெஹர் சந்த் மஹாஜன், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு மகாராஜா எந்த நிலையிலும் சம்மதிக்கமாட்டார் என்று நம்பினார். 'பாகிஸ்தானில் இந்துக்களுக்கு ஏற்பட்ட கதியையும், இந்துக்களின் சொத்துகள் எப்படிக் கொள்ளையடிக்கப்பட்டன என்பதையும், ஒட்டுமொத்த இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் அவர் மறக்கக்கூடாது. பாகிஸ்தானில் படுகொலைகள் நடந்துகொண்டிருந்த அதே நேரம், இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழ்ந்துவரும் காஷ்மீரிலும் இதே வன்முறைச் சம்பவங்கள் நடந்துவிடக்கூடாது என்று மகாராஜா நினைக்கிறார்' என்று மஹாஜன் எழுதினார்.3


காஷ்மீர் அரசரின் நன்மதிப்பைப் பெற்று அந்த சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைப்பதற்காக, பாகிஸ்தான் பிரதிநிதியாக மேஜர் ஏ.எஸ்.பி. ஷா ஸ்ரீநகருக்கு வந்தார். ஷேக் அப்துல்லாவின் தேசிய கான்ஃபரன்ஸுடனும் பேச்சுவார்த்தைக்கான வழிகளை பாகிஸ்தான் திறந்துவைத்திருந்தது. தன் கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டதாக மேஜர் ஷா பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவித்தார். 'மூன்று, நான்கு நாள்கள் எல்லாம் சுமுகமாக இருந்தன. ஆனால், புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் (மஹாஜன்), ஷாவை அங்கிருந்து கிளம்பும்படிச் சொல்லிவிட்டார். காஷ்மீர்மீதான தாக்குதல் ஹரி சிங்கை இந்தியாவுடன் இணையவைக்கும்; அதைத் தொடர்ந்து அடுத்த மூன்று நான்கு மாதங்களில் ஒரு பெரும் போரில்போய் அது முடியும் என்று ஷா நினைக்கிறார்' என்று பெஷாவரில் ஷாவைச் சந்தித்த எல்லை மாகாண ஆளுநர் சர் ஜார்ஜ் கன்னிங்ஹாம் குறிப்பிட்டிருந்தார். 4 மேஜர் ஷா சொன்னது, சொன்னபடியே நடந்தது.


இந்தியாவுடன் இணைவது என்பதும் மகாராஜாவுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. மகாராஜாவைக் கடுமையாக விமரிசனம் செய்யும் ஷேக் அப்துல்லாவின் நெருங்கிய நண்பரான ஜவாஹர்லால் நேருதான் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டதும், அவரைச் சந்திக்க 1946ன் கோடைக்காலத்தில் நேரு காஷ்மீர் வர முற்பட்டபோது, மகாராஜா அவரைத் தடுத்து நிறுத்த முயன்றார். அது முடியாமல் போனதும், நேருவை வீட்டுக் காவலில் வைக்க மகாராஜா உத்தரவிட்டார். அது நயமான செயலாக இருக்கவில்லை. இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் இடையிலான நட்புறவுக்கு அது எந்தவகையிலும் உதவவில்லை. ஹரி சிங்கின் மகன் கரன் சிங், நேருவின் அரசியல் எழுத்துகளால் கவரப்பட்டு அவரைத் தன் வழிகாட்டியாக மதித்தார். அவரது தந்தையின் செய்கை அவரை அதிர்ச்சி அடையச் செய்தது: 'அவரை வரவேற்று, அவருடைய உதவியைக் கேட்பதற்கு பதிலாக அவரைக் கைது செய்துள்ளோம். காஷ்மீர் வரலாற்றில் இது முக்கியமான திருப்புமுனை என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.'


========================


காஷ்மீர் : முதல் யுத்தம்


ஆண்ட்ரூ வைட்ஹெட்


தமிழில் : B.R. மகாதேவன்


கிழக்கு பதிப்பகம்


இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/kashmir.html


தொலைபேசி வழியாக இந்தப் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement