Advertisement

போருக்கு என்று 'போர்' அடிக்கும்?:அழியும் கனிமவளங்கள்

தடுப்போர் இல்லாமல் பல வகையிலும் பாதகம் உண்டாக்கும் போரினால்,ஆறுகள், நிலங்கள், மணற்பாங்கான பகுதிகள்,காடுகள், கடல்கள் என பல இயற்கை பகுதிகளும் பாதிப்படைகின்றன. இதில், முக்கியமாக நிலத்தின் அடியில் உள்ள எண்ணைய் மற்றும் கனிம வளங்கள் அழிந்து விடுவது வேதனையே!
ஏற்கனவே ஜப்பானில் வீசப்பட்ட இரண்டு அணு குண்டுகள் உண்டாக்கிய அவல நிலையை, இன்றும் நம்மால் மறக்க முடியாத நிலையில், தற்போதைய போர்களின் சோகம் தொடர்கிறது.
நிலத்தில் கண்ணிவெடிகள் புதைத்து வைத்து வெடிக்க வைப்பதாலும், பூமியின் மேற்பகுதியை தாக்குவதாலும், உண்டாகும் அதிர்வு, பூகம்பத்தை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. கண்ணுக்கு புலப்படாத கோடிக்கணக்கான நுண்ணுயிர்களும், மண்ணில் உள்ள பிற நன்மை செய்யும் உயிரினங்களும் வெடிகுண்டுகளால் அழியும் சூழல் உருவாகி வருகிறது.
தட்பவெப்பநிலை மாற்றம் எண்ணெய் கிணறுகள் தொடர்ந்து எரிவதால், உண்டாகும் புகை பூமியை கருப்பு வளையமாக சூழ்ந்து, சூரிய ஒளி உள்ளே வருவதை தடுக்கிறது. இதனால், பூமியின் வெப்பம் அதிகரித்து, தாவரம் மற்றும் பிற உயிரினங்கள் பாதிப்படைகின்றன. எண்ணெய் கிணறுகள் அழிவதால், பூமியின் உள்பகுதியிலும் வெப்பம் அதிகரித்து, உள்ளே மேலும் பல மாற்றங்கள் உண்டாகின்றன.
பல ஹைட்ரோ கார்பன் மூலக்கூறுகள், காற்றுடன் கலந்து, பூமியில் தட்ப வெப்ப நிலையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. இதனால், இயற்கை சூழலுக்கு தடுமாற்றம் உண்டாகிறது.
தாவரங்கள் பல்வேறு வாயுக்களை எடுத்துக் கொண்டு தரும் காய், பழம் மற்றும் பிற உணவு பொருட்களும், மனித உடலில் தங்கி தீங்கை உருவாக்குகின்றன. இதனால் எதிர்கால தலைமுறையினர் உடல் ஊனமுற்றும், இன்னும் பிற குறைபாடுகளுடன் பிறக்க நேரிடும்.
மழை குறையும் : பூமியின் தட்ப வெப்பம் மாறுவதால், மழை அளவு குறைகிறது. இப்பொழுது கூட தையல்காரர் அளவெடுத்து தைப்பது போல் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால் எதிர்காலத்தில், பூமியில் மழை துாறல் என்பது அதிசய நிகழ்வாகி விடும். உயிரியல் சூழல் மாறுபடுவதால், செயற்கையான சூழல் பூமியில் உண்டாகும். இது உயிரினங்களுக்கு ஆபத்தான முடிவாகும்.1991-ல் வளைகுடாவில் நடந்த போரினால் வீரர்களுக்கு பல்வேறு நோய்கள் உண்டானது. யுரேனியத்திலிருந்து வெளியேறும் மாசு அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்துகி
பாலைவனத்தில் வீசப்படும் வெடிகுண்டுகளால் உண்டாகும் துாசுக்கள், எண்ணெய் போன்றவைகளிலிருந்து வெளியேறும் புகையால், வீரர்களின் நுரையீரல், மூச்சுக்குழாய் அதிகமாக பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. வளைகுடா போரில் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரம். போரில் உண்டாகும் வெப்பத்தினாலேயே பனிப்பாறை உருகுகின்றனவாம்.
இது ஒரு புறம் இருக்க உலகையே இன்று அச்சுறுத்தி வருகிறது அணுகுண்டு எனும் அணு ஆற்றல். ஜப்பானில் வீசப்பட்ட 'குட்டிப்பையன்' முதல் நேற்று ஈராக்கில் வீசப்பட்ட 'அப்பாச்சி'யில் உள்ள, அணு ஆற்றல் ஆபத்திற்கே வழி வகுக்கிறது. இந்த அணு ஆற்றலை ஆக்க பூர்வமாக பயன்படுத்தினால், மருத்துவ துறையில் பல சாதனைகள் புரியலாம். மின் உற்பத்தியை அதிகரிக்கலாம். விவசாய துறையிலும் இன்று அணு ஆற்றல், அளவிட முடியாத செயல்களை புரிகின்றது.
இப்படி பல துறைகளிலும் துணையிருக்கும், அணு ஆற்றலை உலக நாடுகள் அழிவிற்கு ஏன் பயன்படுத்துகின்றன. உயிரினம் அழிந்து மீண்டும், புழு, பூச்சி என உயிரினத்தை ஆரம்பிக்க பல கோடி ஆண்டு காத்திருக்க வேண்டும்.
சாதாரண வைக்கோல்போர் தகராறு கூட, பெரிய 'அக்கப்போராக' நமக்கு தோன்றும் நிலையில், நாடுகளுக்கிடையேயான போர் தேவையா? போர்கள் தொடர்ந்தால் பூமியே அகதியாகி, வேறு கிரகங்களை நாம் நாடும் நிலை உண்டாகி விடும். போருக்கு என்று போர் அடிக்கும்? உலக மக்களிடம் சகோதரத்துவம் ஓங்கி, அமைதி நிலவும் அந்த நாளிலேயே போருக்கு போர் அடிக்கும்.
வி.சுந்தரராமன்,
முதுகலை ஆசிரியர்,எஸ்.எம்.எஸ்.மேல்நிலை பள்ளி, காரைக்குடி. 94880 06025
வாசகர்கள் பார்வை
எளிமையான ஏலக்காய்
என் பார்வையில் வெளியான 'கமகமக்கும் ஏலக்காய் படபடக்கும் பிரச்னை' கட்டுரை அருமை. மணக்கக்கூடிய ஏலக்காய் ஏழைக்காயாக மாறக்கூடாது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. வனங்களுக்கு பாதுகாப்பாகவும் பெருமையாகவும் இருந்து வரும் வாசனை திரவியம் ஏலக்காய் ஓர் எளிமையான பயிர்.
- கே. இளஞ்செழியன், ஆண்டிபட்டி.
குமரியில் வள்ளுவர்
வரலாற்று ஆய்வாளர் முனைவர் பத்மநாபன் எழுதிய 'வட்டார வழக்கியலும் வள்ளுவர் வரலாறும்' கட்டுரை படித்தேன். கட்டுரையாளர் சுட்டிக் காட்டும் வட்டார வழக்கியல் ஆதாரங்கள் வள்ளுவர் குமரி மண்ணில் பிறந்தவர் என்பதை வலுப்படுத்துகிறது. தொழில் சார்ந்த, வாழும் நிலம் சார்ந்த வட்டார வழக்குச் சொற்கள் பெரும்பாலும் அப்பகுதி மக்களால் மட்டுமே பேசப்படுபவை, பயன்படுத்தப்படுபவை. அம்மக்கள் எங்கு குடிபெயர்ந்தாலும் இப்படிப்பட்ட பேச்சு வழக்குகள் மாறுவதில்லை. முக்கடல் சங்கமிக்கும் குமரியில் இன்று கம்பீரமாக சிலையாக நிற்கும் வள்ளுவர் அன்று இதே பகுதியில் உலாவியவர் என்ற செய்தியை சொன்ன தினமலர் நாளிதழின் என் பார்வைக்கு பாராட்டுக்கள்.
-- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
நடை நோய்க்கு தடை
வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் இளசை சுந்தரம் எழுதிய 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்ற கட்டுரை படித்தேன். நடை பயிற்சி செய்யாத மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களை பற்றி தெரிந்து கொண்டேன். நடை நோய்க்கு தடை என்பதை வெளிப்படுத்திய கட்டுரையாளரின் எழுத்து திறமை ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது. தலைப்புக்கு ஏற்ப ஒரு குட்டி கதையும் சொல்லி நடையின் அவசியத்தை உணர்த்திய தினமலர் நாளிதழுக்கு நன்றி.
- கே.கனகவிஜயன், மதுரை.
அஞ்சல் சேவை
தினமலர் என் பார்வையில் வெளியான 'என் மன வானில் நீலப்பறவை' கட்டுரை என் மனதில் சிறகடித்தது. கம்ப்யூட்டர் யுகத்திலும் பெரும்பாலான மக்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் உள்ளது என்பதை தினமலர் நாளிதழ் மூலம் தெரிந்து கொள்ளலாம். வாரமலர், இது உங்கள் இடம், என் பார்வை, அறிவுப் போட்டிகள், மாணவர் மலர், நீங்களும் எழுதலாம் போன்ற பகுதிகளில் கருத்துக்களை கடிதங்கள் மூலம் வாசகர்களிடம் பெற்றுக் கொள்ளும் தினமலர் நாளிதழ் அஞ்சல் சேவை செய்கிறது என்பதை உணர முடிகிறது,
- எஸ்.கே.வி.கந்தன், மதுரை.
கைக்கு கடிவாளம்
என் பார்வையில் வெளியான 'வரவு எட்டணா செலவு பத்தணா' கட்டுரையை படித்ததும் அளவுக்கு அதிகமாக செலவு செய்யும் என் கைக்கு கடிவாளம் போட்டுவிட்டேன். சிக்கனம், கருமித்தனம் இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை பேராசிரியர் கூறிய பின் என் நெருங்கிய நண்பர்களின் நடவடிக்கைகளை கவனிக்க தொடங்கி விட்டேன். 'ஒன் பை டூ' டீ ஆர்டர் செய்தால் சிக்கனம். ஆனால் 'ஒன் பை த்ரீ' டீ ஆர்டர் செய்தால் அது கருமித்தனம் இப்படியும் ஒரு சிலர் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காட்டிய தினமலர் நாளிதழுக்கு என் தாராளமான நன்றி.
- எம்.சுவாதிகா, மதுரை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement