Advertisement

எத்தனை குத்துக்களை தாங்க போகிறார் சரிதா தேவி?

வலிதாங்க முடியாமல் துடித்துக் கொண்டு இருக்கிறார், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி. இந்த வலி, களத்தில் குத்துவாங்கியதால் வந்ததல்ல.விளையாட்டில் கலந்துவிட்ட அரசியலால் விடுக்கப்பட்ட குத்து. அதுவும் சாதாரண குத்து அல்ல,

சர்வதேச போட்டிகளில் விளையாட தடை என்று, நாக்-அவுட் குத்து.ஒரு தாயாய், பெற்ற குழந்தையைக் கூட பாலுாட்டி கொஞ்சி மகிழ நேரமில்லாமல், தேசத்திற்காக விளையாடத் தெரிந்த சரிதா தேவிக்கு கிடைத்த பரிசு தான் இந்த தடை.மணிப்பூர் மாநிலத்தின் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த லய்ஷ்ராம் சரிதா தேவி என்ற இந்த பெண், வீட்டின் விறகு தேவைக்காக, மலைப்பகுதியில் விழுந்து கிடக்கும் மரக்குச்சிகளை பொறுக்குவதற்காக, பலமுறை ஏறி இறங்கியதில் உடம்பிலும், மனதிலும் வலு கூடியது.குத்துச்சண்டை வீரர் முகமது அலியை, இவருக்கு மிகவும் பிடிக்கும். இதற்காகவே குத்துச்சண்டை போட்டியை கற்றுக்கொண்டார்.கடந்த, 2000ம் ஆண்டில், இந்தியாவின் இளம் வீராங்கனையாக, 16 வயதில் பாங்காக்கில் களம் இறங்கியவர் பதக்கத்தோடு திரும்பவே,
குத்துச்சண்டை உலகம் இவரை விரும்பி ஏற்றுக்கொண்டது.அதன்பின், கடந்த 14 ஆண்டுகளில் எத்தனையோ போட்டிகள், எத்தனையோ பதக்கங்கள் எவ்வளவோ வெற்றிகள். இந்த வெற்றிகளில் உலக குத்து சண்டை சாம்பியன் பட்டம் பெற்ற வெற்றியும் அடங்கும்.

நாட்டிற்கு நிச்சயம் தன்னால், ஒரு பதக்கம் வாங்கித்தர முடியும் என்ற உத்வேகத்தோடு, தென்கொரியாவில் நடந்து முடிந்த ஆசிய போட்டியில், 60 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு, வெகுவேகமாகவும், லாவகமாகவும் முன்னேறினார்.அரை இறுதியில், உள்ளூர் வீராங்கனையான, ஜினா பார்க்குடன் மோதினார். தலா இரண்டு நிமிட இடைவெளியில், மொத்தம் நான்கு ரவுண்டு மோதல் நடந்தது.முதல் ரவுண்டில் இருந்தே சரிதா தேவியின் ஆக்ரோஷமான குத்துக்கள் தொடர்ந்தன. மூன்றாவது ரவுண்டில் சரிதா விட்ட குத்தில், ஜினா பார்க்கின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.இரு வீராங்கனைகள் கைகளையும் பிடித்து இருந்த தென்கொரியா நடுவர், சரிதா தேவியின் கையை உயர்த்தி வெற்றியை அறிவிக்க போகிறார் என்று, மொத்த அரங்கமும் காத்திருக்க, யாரும் எதிர்பாராத விதமாக ஜினா பார்க்கின் கையை உயர்த்திபிடித்து அவரே வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

அதிர்ச்சியில் உறைந்து போனார் சரிதா தேவி. ஆவேசத்துடன் நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார், சரிதா தேவியின் கணவர் தொய்பா சிங். விளையாட்டை பார்க்க வந்த தென்கொரியா வாழ் இந்தியர்கள், நடுவர்களை நோக்கி தண்ணீர் பாட்டில்களை வீசியெறிந்து, தங்கள் கோபத்தை பதிவு செய்தனர். வேடிக்கை பார்க்க வந்த மங்கோலியா நாட்டு வீரர்கள், 'தோற்றது சரிதா தேவியல்ல குத்துச்சண்டை தான்' என்று சொல்லி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.ஆனால், இதில் தங்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லை என்பது போல, வி.ஜ.பி., காலரியில் அமர்ந்திருந்தனர், நம் இந்திய அதிகாரிகள். இவர்கள் தான், இதற்கு எல்லாம் நியாயம் கேட்டு போராட வேண்டியவர்கள், இதற்காகத்தான் விமான பயணம், நட்சத்திர ஓட்டல் வசதி, செலவிற்கு சில கோடிகள் என்று கொடுத்தனுப்பப்பட்டது.
நடுவரின் தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் செய்ய வேண்டும் என்றால், உடனடியாக, 30 ஆயிரம் ரூபாய் கட்டி அப்பீல் செய்ய வேண்டும். ஆனால், சரிதா தேவியின் கையிலோ, அவரது கணவர் தொய்பா சிங்கின் கையிலோ உடனடியாக அவ்வளவு பணம் இல்லை. இந்திய அதிகாரிகளிடம் கேட்டபோது, தரமுடியாது என்று, சொல்லி விட்டனர். காரணம், இந்த டிபாசிட் பணம் திரும்ப பெறமுடியாத பணம் என்பதால்.

தொய்பா சிங், கிட்டத்தட்ட பிச்சை எடுக்காத குறையாக, அங்கு இருந்த இந்தியர்களிடம் கேட்டு, அப்பீல் செய்திருக்கிறார். இருந்தும், தொழில்நுட்ப குழு, சரிதாவின் கண்ணீரை கதறலை பொருட்படுத்தவில்லை; தோற்றது தோற்றது தான் என்று சொல்லி சென்றுவிட்டது.சம்பவம் நடந்து, 24 மணி நேரத்தை தாண்டி பதக்கம் வாங்க வேண்டிய நேரம். சரிதா தேவியுடன் வந்த எந்த அதிகாரியும், அவரை பார்த்து நடந்த சம்பவத்திற்கு ஆறுதலாகவோ, அன்பாகவோ பேசவில்லை. இன்னும் சொல்லப் போனால், இதற்கு சம்பந்தமில்லாதவர்கள் போல முகத்தை வேறு பக்கம் திருப்பி சென்றனர்.போட்டியில் தோற்றதாக சொன்ன போது ஏற்பட்ட வலியை விட, இது அதிக வலியைத் தரவே, பதக்கம் வாங்க மேடை ஏறிய சரிதா தேவி, அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.'தங்க பதக்கம் வெல்வோம்; அதன் மூலம், நம் தேசியக் கொடி எல்லா கொடிகளையும் விட, உயரே பறக்கும்' என்று நினைத்தவருக்கு, கொடி மூன்றாவது இடத்தில் தாழப்பறப்பது கண்டு நிலைகுலைந்து போனார்.வெண்கல பதக்கத்தை வாங்க மறுத்தார்; ஆனால், நிர்பந்தம் தொடரவே கையில் வாங்கி கதறி அழுதார்.

அவரது கண்ணீரிலும், கதறலிலும் இருந்தது உண்மையும், நேர்மையும், நியாயமுமே என்பதை உணர்ந்த மீடியாக்கள், சரிதா தேவிக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை படம்பிடித்து காட்டின.கையில் வைத்திருந்த வெண்கல பதக்கத்தை அவமான பதக்கமாக கருதினாரோ, என்னவோ, அதையும் வெள்ளி பதக்கம் பெற்ற ஜினா பார்க்கிடமே கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.பதக்கம், பணம், பதவி இதற்காக ஆசைப்பட்டு இருந்தால், சரிதா தேவி சமரசமாகியிருப்பார். ஆனால், விளையாட்டில் வைத்திருந்த ஈடுபாடு காரணமாக, உண்மை வெல்லும் என்ற வார்த்தையின் காரணமாக, தன் திறமை மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக, கடைசி வரை தன் எதிர்ப்பை சரியாக காட்டிவிட்டார். இது ஒரு சார்பாக செயல்பட நினைக்கும் நடுவர்களுக்கான, சரியான சவுக்கடி என்றே ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.தன், இந்த நிலைப்பாட்டை நாட்டு தலைவர்கள் வரவேற்பர் என்ற எண்ணத்துடன், நாடு திரும்பியவருக்கு சரியான அதிர்ச்சி. எந்த அரசியல்வாதியும் இது குறித்து வாயை திறக்கவில்லை. பெண்கள் குத்துச்சண்டையை மையமாக வைத்து, உணர்ச்சிபூர்வமாக சினிமா தயாரித்து, தங்களது கல்லா பெட்டியை நிரப்பிக் கொண்ட சினிமாக்காரர்களிடம் இருந்தும், எந்தவித அனுதாபமும் இல்லை.

'இவர்களுக்காகவா, நாம் குத்துச் சண்டை போட்டியில் இறங்கினோம்... நாட்டின் பெருமைக்காகத்தானே இறங்கினோம்; சர்வதேச போட்டிகளில் என் திறமையை, வலிமையை மீண்டும் நிரூபிப்பதன் மூலம், நான் நடந்து கொண்டவிதம் சரிதான் என்பதை, அனைவரும் அறியச்செய்வேன்' என, சூளுரைத்த சரிதா தேவிக்கு உலக குத்துச்சண்டை சம்மேளனம், சமீபத்தில் ஒரு அடியை அல்ல, இடியை தலையில் இறக்கியிருக்கிறது.'அடுத்த உத்தரவு வரும் வரை சரிதா தேவி, சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் ஈடுபடக் கூடாது' என்பதுதான் அந்த உத்தரவு. இந்த உலக குத்துச்சண்டை போட்டிக்கான சம்மேளனம் தென்கொரியாவில் தான் இயங்குகிறது என்பது கூடுதல் தகவல்.இன்னும் எத்தனை குத்துக்களைத்தான் சரிதா தேவி தாங்கப் போகிறாரோ?
இ-மெயில்: murugaraj2006gmail.com

- எல்.முருகராஜ்- -
பத்திரிகையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (19)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement