Advertisement

பாரமுல்லாவும் முஸ்லிம்களும்

இஸ்லாமியர் அல்லாதாரின் பயமும் இஸ்லாமியர்களின் உற்சாகமும் பாதிரியார் ஷாங்க்ஸின் குறிப்புகளிலிருந்து நன்றாகவே தெரியவருகிறது. பாரமுல்லாவுக்குள் பழங்குடியினர் நுழைவதற்கு முன்பாக நடந்த ஓர் உரையாடலை அவர் பதிவு செய்துள்ளார்.முகமது யூசுஃப் எனும் பி.ஏ. மாணவன் பாதிரியார்களை எச்சரிக்க வந்திருந்தான்.

'இன்று மாலை பதான்கள் பாரமுல்லாவுக்குள் நுழைந்துவிடுவார்கள் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என்று அவன் கவலையுடன் கேட்டான்.

'அந்த வதந்தி பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் யூசுஃப். அதனால் என்ன? நீ ஒன்றும் பதற்றப்படவேண்டியதில்லையே? அவர்கள் இந்துக்களிடமிருந்து உங்களை விடுவிக்க வருகிறார்கள் என்பது உனக்கு மகிழ்ச்சியைத்தானே தரவேண்டும்?முனிசிபல் அலுவலகத்தில் அவர்களுக்கு ஒரு பெரிய விருந்து தர நீ இன்னும் தயாராகவில்லையா? வரவேற்புக் குழுவின் மாணவர் பிரிவில் நீயும் ஒருவன் என்றல்லவா நினைத்தேன்?'

'உண்மைதான் பாதிரியாரே. ஆனால், அவர்கள் ஒரு பெரும் காட்டுமிராண்டிக் கூட்டம். சிலராவது கட்டுப்பாட்டை மீறி ஏதேனும் விஷமம் செய்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறேன்.'

சாதாரண விஷமமா என்ன! எல்லையின் இந்தப் பக்கத்தில் முஸாஃபராபாத்தில் இருக்கும் அனைத்துக் கட்டடங்களும் தீக்கு இரை! இங்கிருந்து வெறும் 27 மைல் தொலைவில் இருக்கும் ஊரியின் பிரபலமான சந்தை முழுவதுமாக அழிவு. இதையா இவன் வெறும் விஷமம் என்று சொல்கிறான்? தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டு பாதிரியார் எக்ஸ் நினைத்தார்: 'என்னவிதமான விடுதலை இது? விடுவிக்கப்படுபவர்களின் கிராமங்களை எல்லாம் தீ வைத்துக் கொளுத்தி அவர்களை வீடற்றவர்களாக ஆக்குவதா விடுதலை?'

'ஊரியில் கொஞ்சம் பிரச்னை என்று கேள்விப்பட்டேன்' என்று யூசுஃப் தொடர்ந்தான்.

'ஓ அதுவா? பதான்களைப் பொருத்தவரை அது சந்தோஷமான ஒரு விளையாட்டு. கொஞ்சம் கூடுதலாகியிருக்கலாம்... ஆனால்...''இங்கும் அப்படி நடந்ததென்றால்?'

'அது எப்படி நடக்கும்? உங்களுடைய பதான் நண்பர்கள், காஷ்மீரை விடுவிக்க வருகிறார்கள், இல்லையா? ஏன், சொல்லப்போனால், கிறிஸ்தவ மடாலயமும் கடந்த 40 வருடங்களில் அதைத்தானே செய்ய முயன்றுவருகிறது? பள்ளிக்கூடம், மருத்துவமனை ஆகியவற்றைக் கட்டி உங்களை அறியாமையில் இருந்து மீட்க முயன்று வருகிறது. எங்களை துன்புறுத்த அவர்களுக்கு ஒரு காரணமும் இருக்காது. ஸ்ரீநகருக்குப் போவதற்கு முன்னால் லேசாகக் கொஞ்சம் கொள்ளையடிக்கலாம். ஆனால், எங்கள் உடலில் கத்தியைச் செருகி, மடாலயத்தைத் தீக்கிரையாக்கி அழிப்பார்கள் என்று நினைக்கிறாயா?'

'எல்லாம் சரிதான் பாதிரியாரே. ஆனால், நீங்களும் பாதிரியார் ஒய்யும் இரண்டு நாள்களுக்காவது காட்டுப் பகுதிக்குப் போய், குறைந்தபட்சம் முக்கியமான பழங்குடிப் படைகள் கடந்து போவது வரையாவது அங்கே இருப்பது நல்லது.'

'காட்டுக்குள் ஓடி ஒளியவேண்டுமா? நான் அந்த அளவுக்கு கோழை அல்லன். மேலும் அப்படிச் செய்தால், அதன்பிறகு எந்த முகத்துடன் பாரமுல்லாவுக்குள் நான் மீண்டும் நுழையமுடியும்?'

'சரி. அப்படியே ஆகட்டும். ஆனால் பின்னர் வருத்தப்படமாட்டீர்கள் என நினைக்கிறேன்.' அதன்பின் யூசுஃப், பழங்குடிகளை வரவேற்பதற்கான அலங்கார வளையம் அமைக்கச் சென்றுவிட்டான்.

அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த பாதிரியார் எக்ஸ், தங்கள் பாதுகாப்பு குறித்து அவன் ஏன் திடீரென அஞ்சுகிறான் என்று யோசித்தார். காஷ்மீரிகள் மத்தியில் கடந்த பத்து ஆண்டுகளாக அவர் செய்துவந்த சேவைக்குப் பலனாக எதையுமே தான் எதிர்பார்க்கக்கூடாது என்பதை அவர் அறிந்திருந்தார். மேலும் அப்படி எதிர்பார்த்தால் அதற்குப் பெயர் சேவையும் கிடையாது. இந்தக் காஷ்மீரிகள் அய்யோ பாவம் என்று நினைத்தார் அவர். நீண்ட காலமாக வேதனையில் உழல்பவர்கள். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். பிரச்னை வந்தால் விதியை அப்படியே சந்தோஷமாக ஏற்றுக்கொள்பவர்கள்.

அந்தத் தாக்குதலை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதைச் சொல்வதோடு, எந்த மக்களிடையே மதப் பணிகள் செய்துவந்தாரோ அவர்களைப் பற்றி தான் என்ன நினைத்தார் என்பதையும் பாதிரியார் தெளிவாகவே பதிவு செய்திருந்தார். அவை மிகவும் தெளிவான பதிவுகள். பாரமுல்லாவில் இருந்த படித்த இஸ்லாமியர்கள் பழங்குடிப் படையினரை ஆதரித்தனர்.

பாதிரியார் ஷாங்க்ஸ் குறிப்பிட்டிருக்கும் யூசுஃப் என்பது, முகமது யூசுஃப் சராஃப் என்பவராக இருக்க வாய்ப்பிருக்கிறது. அவர் 1923ல் பாரமுல்லாவில் பிறந்தார். செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். அங்கு மாணவர் அணியின் தலைவராக இருந்தார். முதலில் ஷேக் அப்துல்லாவின் தேசிய கான்ஃபரன்ஸ் கட்சியிலும் பின் அதன் போட்டிக் கட்சியான முஸ்லிம் கான்ஃபரன்ஸ் கட்சியிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். 1970களில், பாகிஸ்தான் காஷ்மீரின் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அவர், பாரமுல்லா தாக்குதலுக்கு உள்ளானதைப் பற்றி விவரமாக எழுதியிருக்கிறார். அதில், ஆரம்பத்தில் லஷ்கர் படைகளுக்குக் கிடைத்த ஏகோபித்த ஆதரவும், உடனடியாகவே அந்த ஆதரவு சரிந்த விதமும் விளக்கப்பட்டுள்ளது. சராஃப் எழுதுகிறார்:

எவ்வளவு ஆர்வத்துடன் லஷ்கர் வருகையை முஸ்லிம்கள் எதிர்பார்த்து நின்றனர்! நூற்றுக்கணக்கானோர் பல மைல்கள் நடந்து சென்று பதான் பழங்குடிகள் தம் நகரத்துக்குள் நுழைவதை உற்சாகத்துடன் வரவேற்றனர். டோக்ரா வம்சத்தின் அடிமைகளாக நூறு ஆண்டு காலம் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற தங்களுக்கு உதவ வந்தவர்களுடன் தாங்களும் சேர்ந்து செயல்பட்டதைத் தம் குடும்ப உறுப்பினர்களிடம் பிற்காலத்தில் பெருமையாகச் சொல்லி மகிழ அவர்கள் விரும்பியிருக்கலாம். சில நூறு ஆண்டுகால வரலாற்றில் இதுபோல் ஓர் எழுச்சியையும் உற்சாகத்தையும் அந்த ஊர் அதுவரை கண்டதில்லை. ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியில் பித்துப் பிடித்ததுபோல் ஆனார்கள். நூறு ஆண்டுகளாக அனுபவித்த வேதனையிலிருந்து விடுதலை கிடைக்கும்போது எந்த ஒரு முகத்தில்தான் ஒளி வீசாது? அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. உணர்ச்சிகளுக்கு இடமில்லாத ஒரு பள்ளியில் படித்த என்னைப் போன்ற ஒருவனால் எப்படி அந்தக் களிப்பையும் கொண்டாட்டத்தையும் வார்த்தைகளால் வடிக்க முடியும்? சோபோர் வரையிலான பகுதிகளில் இருந்த எல்லா முஸ்லிம் ஆண்களும் தங்களிடம் இருப்பதிலேயே அதி உயர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு தங்களுக்கு விடுதலை தர வந்தவர்களை வரவேற்க கான்புராவில் அணி திரண்டார்கள். மேஜர் குர்ஷித் அன்வர்தான் நிகழ்வுகளின் மையமாக இருந்தார். ஒவ்வொருவரும் அவருக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல விரும்பினர்.

செயிண்ட் ஜோசப் கல்லூரியிலிருந்து இதே காட்சியைப் பார்த்த பாதிரியாருக்கு லஷ்கர் படையின் நுழைவு விடுதலையைத் தரும் என்று தோன்றவில்லை. தம் சேவைகள் பாதிக்கப்பட்ட கன்யாஸ்திரீகள், முதலில் மடாலயத்திலேயே தங்கியிருக்க முடிவு செய்தனர். ஆனால், பாதிரியார் ஷாங்க்ஸ் கடைசி நேரத்தில் அனைவரையும் அங்கிருந்து தப்பிச் செல்லவைக்க முயன்றிருக்கிறார். மரத் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்துவந்த ஜே.இ.தாம்சன் என்ற பிரிட்டிஷ் பணியாளர், லீலா பாஸ்ரிச்சாவைக் காதலித்து, பிறகு திருமணமும் செய்துகொண்டார். அவர்மூலமாக காஷ்மீர் அரச அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளப் பாதிரியார் ஷாங்க்ஸ் முயன்றார்.

========================

காஷ்மீர் : முதல் யுத்தம்

ஆண்ட்ரூ வைட்ஹெட்

தமிழில் : B.R. மகாதேவன்

கிழக்கு பதிப்பகம்

இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/kashmir.html

தொலைபேசி வழியாக இந்தப் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement