Advertisement

அடைமழைக் காலமும், ஆன்ட்ராய்டு போனும்!

"ஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலங்கிறதால விடாம மழைபேஞ்சிக்கிட்டே இருக்கும். மண்ணுல ஈரத்தோட, இருட்டு விடியாத நேரத்துல நாங்க தீவாளி கொண்டாடுற சந்தோஷமோ சந்தோஷந்தான்” என்று அந்தக் கிழவனார் என்னிடத்தில் சொல்லத் தொடங்கினார்.
"கங்காஸ்நானம்ஆச்சா? இந்தத் தீபாவளிய நாங்க காசியில கொண்டாடுகிறோம்” என்று எல்லாரும் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, நாங்கள் குடும்பத்தோடு எங்கள் கிராமத்தைநோக்கிச் சென்றோம். முதலில் குழந்தைகள் கிராமத்திற்கு வரத் தயங்கினாலும் பிறகு 'லேப்டாப்', 'டேப் லெட்', 'ஆன்ட்ராய்டு போன்', 'ஐ-போன்', 'ஐ-பேட்', 'புளூடூத் ஹெட்செட்', 'பி.எஸ்.பி.,' (பிளே ஸ்டேஷன் போர்ட்டபிள்), புத்தாடைகள், பட்டாசுக் கட்டுகள் என்று சகல உபகரணங்களோடும் காரில் ஏறினார்கள்.
கலகலப்பு வீடு : தாத்தா, பாட்டி, பெரியப்பா, அத்தை, மாமா மற்றும் தூரத்து உறவினர்களோடு எங்கள் கிராமத்துப்பெரிய வீடு, விடிந்தால் கல்யாணம் என்பது போல கலகலப்பும் பரபரப்புமாய் காணப்பட்டது. நான் எப்போது கிராமத்திற்கு வந்தாலும் தவறாது என்னைச்சந்திக்க வரும் 96 வயது பாட்டனார் மகிழ்ச்சியோடு வந்து திண்ணையில் உட்கார்ந்து கொள்ள நான், "உங்க காலத்துல தீவாளி எப்படி இருக்கும்?” என கேட்டதற்கு அவர் சொல்லத் தொடங்கியதுதான், அது. (மீண்டும் முதல் 'பாரா'வைப் படிக்கவும்)."படிச்சவுக உங்களுக்குத் தெரியாததா? நம்ம பெரியவுக 12 மாசத்த பிரிக்கிறப்ப சித்திரை, வைகாசி- -இளவேனில், ஆனி, ஆடி - முதுவேனில், ஆவணி, புரட்டாசி -கார்காலம், ஐப்பசி, கார்த்திகை- - கூதிர்க்காலம், மார்கழி, தை - முன்பனிக்காலம், மாசி,பங்குனி -பின்பனிக்காலம் அப்படின்னு பிரிச்சிருக்காக. இதுல ஆவணி, புரட்டாசியில தொடங்குற மழை ஐப்பசியிலயும் அடைமழையாத் தொடரும். பொழுது ராத்ரியா? பகலான்னு கூட கண்டுபிடிக்க முடியாது'' என்றார் அவர்.
அதிரசமும், முறுக்கும் : அதற்குள் வீட்டில் செய்த அதிரசம், முறுக்கு பலகாரங்கள் தட்டில் வந்துசேர பாட்டனார் சந்தோஷமாக இனிப்பையும் முறுக்கையும் தின்னத்தொடங்கினார். நான் என் பக்கத்தில் இருந்த பேரனிடம் "பார்த்தீயாடா, இந்த பெரிய தாத்தாவுக்குப் பல்லும்நல்லாயிருக்கு; சுகரும் கிடையாது. அதனால சந்தோஷமாக சாப்பிடுறாரு” என்றேன்."கண்ணும் நல்லாத்தெரியுது. அதனால அதிரசம் இதுல எது? முறுக்கு எதுன்னு கரெக்டா கண்டு பிடிக்கிறாரு” என்றான் அவன் குறும்பாக. "வேற என்ன செய்வீக தீவாளிக்கு?” என்று பேரன் அவரைப்பார்த்து கேட்க,"இந்தக்கிராமத்துல தீவாளி எப்ப வரும்ன்னு அக்ரகாரத்துல இருக்கிறவர்களுக்குத்தான் முதல்ல தெரியும். தீவாளி அமாவாசையில வரும். அதோட விடிய விடிய தீபாவாளி; விடிஞ்சு பார்த்தா அமாவாசை அப்படின்னு கிராமத்துல பேசிக்கிருவோம். வேட்டி, துண்டு புதுசா எடுப்போம். அரிசிச் சோறு, ஆட்டுக்கறி கொழம்புஇட்லி,- தோசை. இது தான் தீபாவாளிக்கு அடையாளம்” என்று தாத்தா சொல்ல "அரிசிச்சோறு, இட்லி, -தோசையா! இது நாம தினம் சாப்பிடுறது தானே?”என்று பேரன் ஆச்சரியத்தோடு கேட்டான். "அதென்ன ஆட்டுக்கறி?” என்று அவன் தொடர... "மட்டன் தான்டா; அதத்தான் அவர் இங்கிலீஷ்ல சொல்றாரு” என்று அவனைக்காட்டிலும் சின்ன பேத்தி சொல்ல எல்லோரும் சிரித்தோம்.கிராமத்து ஆச்சரியம் பிறகு நான் பேரனை நோக்கி, "இன்னைக்கு நாம தினம் சாப்பிடுற அரிசிச்சோறும், இட்லி- தோசையும் கிராமத்து ஆச்சரியங்களில் ஒன்று. சோளம், கேழ்வரகு போன்ற உணவு வகைகள் தான் கிராமங்களில் அன்றாட சாப்பாடாக இருக்கும். பண்டிகைகள் வந்தால்தான்மத்ததெல்லாம்” என்றேன்."தாத்தா அப்பெல்லாம் நீங்க வெடி விடமாட்டீங்களா?” என்று பெரிய தாத்தாவைப் பார்த்து குழந்தைகள் கேட்க"பொட்டுக் கேப்பு, சீனிவெடி, ஓலவெடி, குச்சி மத்தாப்பு இதுதான் நாங்க அதிகமா பார்த்தது. அப்ப எங்களுக்கு வெடி வாங்க காசும் இல்லை; மூச்சுக் காத்துல தூசியும் இல்லை. பட்டாசு செய்யுறம்ன்னு அதிகமா ஆளுக பலியானதும் இல்லை” என்று சொல்லிய அவர் "ஆனாலும் விடாது பெய்ற அடைமழையில புதுத்துணி கட்டிக்கிட்டு உறவுக்காரகள பார்த்துப் பேசிட்டு சந்தோஷமா திரியுவோம்” என்று சொன்னார்."அப்ப தீவாளிக்கு எண்ணெய் தேச்சி குளிக்கமாட்டீங்களா?” என்று குழந்தைகள் கேட்க"அப்படி அடிக்கிற மழையில குளிக்கிறதே பெரிய விஷயம்” என்று சொல்லிச் சிரித்தார் கிழவனார்.
பள்ளிக்கூடம் லீவு "நீங்க..?” என்று என்னை நோக்கி குழந்தைகள் கேட்க"நான் சின்னபிள்ளையா இருக்கிறப்போ தீவாளிக்குப் பள்ளிக்கூடம் லீவு. அப்புறம் தைக்கப் போட்ட துணிய வாங்க தையல் கடைக்குப் போற சந்தோஷம். அணுகுண்டு, ஆகாயவெடி, எலக்ட்ரிக் பட்டாசுன்னு தெருவே கலகலத்துப் போகும். இன்னொருமுக்கியமான விஷயம் தீபாவளியன்னைக்கு ரிலீசாகுற புதுப்படத்த முதல் நாளே பார்ப்பதை தான் வாழ்க்கையின் லட்சியமா வச்சிருந்தோம்” என்றேன் நான்."குழந்தைகளா! உங்க தீவாளி எப்படி?” என்று தாத்தா குதூகலமாக கேட்க"டிரஸ், நகை எல்லாம் அம்மாவுக்கும் அத்தைக்குந்தான். எங்களுக்கு பேஸ்புக்ல பேச்சுவார்த்த; டுவிட்டர்ல கிண்டல். ஆன்ட்ராய்டுல அரட்டை; எஸ்.எம்.எஸ்.ல., ஜாலி. வாட்ஸ் அப்ல கேலி; வீடியோ கேம்ஸ் பார்ப்போம்” என்று காலேஜ்ல படிக்கிற மகன் அடுக்கிக்கொண்டே போக"அப்ப இட்லி-, தோசை? இனிப்பு பலகாரம்? இதுக்கெங்க போவீங்க?” என்று கிழவனார் கவலையோடு கேட்டார்."கிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஆரியபவன், அடையாறு ஆனந்தபவன், சரவணபவன்” என்று எல்லோரும் கோரஸாக முழங்கினர்.உள்ளிருந்து மனைவி "என்னங்க! தீவாளிக்கு காலையில உங்க பட்டிமன்றமாம். 'டிவி'யில ட்ரைலர் வருது. பண்டிகைகளை நாம் கொண்டாடுவது மரபுகளைக் காக்கவா? உறவுகளைச் சேர்க்கவா? என்பது தலைப்பாம்'' என்று சொன்னார்.பட்டாசுகள் முழங்க, ஐ-போனிலும், ஐ-பேடிலும் குழந்தைகள் படமெடுக்கத் தொடங்க, குழந்தைகளோடு பாட்டனார் சிரித்த சிரிப்பு மத்தாப்பாய் ஜொலித்தது.-முனைவர் கு.ஞானசம்பந்தன்humour_sambandangmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement