Advertisement

தீ...தீபம்....தீபாவளி..!

கடவுளின் அருஞ்செயலுக்காகவும், கடவுள் அருள் வேண்டியும் இன்று பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அந்த பாண்டிகைகள் ஒவ்வொன்றிற்கும் ஆன்மிகப் பின்புலம், வரலாற்றுப் பின்னணி நிச்சயம் உண்டு. பண்டிகைகளுக்கு பஞ்சமில்லாத இந்த பாரத நாட்டில் தீமையை வெற்றி கொள்ளும் ஒளித்திருநாளாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த இனிய தீபாவளிப் பண்டிகை பற்றி இன்றைய இளைய சமுதாயம் வரலாற்று பின்னணியுடன் தெரிந்து கொள்ளவே இந்த தீ...! தீபம்...!! தீபாவளி...!!!
சிவனின் ஆயுதம் 'தீ' : நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ என பஞ்ச பூதங்களால் ஆன இந்த பரந்த உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் ஒரு வரலாறு உண்டு என்பது நாம் அறிந்ததே. இந்த பஞ்ச பூதங்களை பார்த்து மனிதன் பயந்தபோது, அவை சக்தி மிக்கதாக கருதப்பட்டு வணங்கப்பட்டன. பஞ்சபூதங்களில் முக்கியமாக 'தீ' மிகவும் சக்திமிக்கதாக வணங்கப்பட்டு கடவுள் நிலைக்கு உயர்ந்தது. அழிக்கும் கடவுளான சிவனின் ஆயுதம் 'தீ' என்பதால் 'தீ' என்ற சொல் இன்று பெரும்பாலும் அழிவின் குறியீடாகக் கருதப்படுகிறது.
நெற்றிக்கண் தீப்பொறி : உண்மையில் 'தீ' என்றால் 'அறிவு' மற்றும் 'இனிமை' என்று பொருள். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறக்கும் 'தீ' தீமையை அழித்து நன்மையை நிலை நிறுத்தி மக்களுக்கு வழிகாட்டுகிறது. எனவே தான் 'தீ' என்ற சொல்லுக்கு 'உபாய வழி' என்று பொருள் கொள்ளப்படுவதாக ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றுப்படி சிவன், தன் நெற்றிக்கண் தீப்பொறி மூலம் தீமையை அழிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் மனித குலத்திற்கான தீபாவளியே. 'தீ' என்ற ஒளியின் தோற்றமே காடுகளில் கால்நடைகளாக ஓடிக்கொண்டிருந்த மனிதர்களை ஓரிடத்தில் நிலையாக அமர வைத்தது. எனவே, கூட்டமாக வாழும் கூட்டுக் குடும்பத்திற்கு முதல் அச்சாரமிட்டது 'தீ'.
ஆதி மனிதனும் தீயும் : மனிதன் தீயை கண்டறியா விட்டால் இன்றைய மனித சரித்திரம் வேறொன்றாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பூமியின் அற்புதப் படைப்பே 'தீ' என்கிறது யவன புராணம். தீயின் மூலமாக வெளிச்சத்தைக் கண்ட ஆதிமனிதன் உணவு சமைக்க, இரவில் வெளிச்சம் தர, கொடிய மிருகங்களிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள தீயை பயன்படுத்தினான். தன்னை தாக்கும் கொடிய மிருகங்களை தீயின் உதவியுடன் விரட்டியடித்து வெற்றி கொண்டபோது கையில் தீயை வைத்து எக்காளமுழக்கமிட்டு, அந்நிகழ்வை கூட்டமாக கொண்டாடினர். தங்களுக்கு தீமை செய்ய வரும் கொடிய மிருகங்களை 'தீ' உதவியுடன் விரட்டி நன்மையடைந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆதிமனிதனுக்கு தீபாவளியே.
வேள்வியில் அடங்கிய தீ : தீயினால் நாடோடி வாழ்க்கையை கைவிட்ட மனிதன் நிலையான இருப்பிடத்தை அமைத்தான். ஆதிகாலத்தில் நினைத்தவுடன் தீயை உருவாக்க இயலாது. எனவே, ஒவ்வொரு வீட்டிலும் 'தீ' எப்போதும் இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. புயல், மழை, காற்று, பனி, என அனைத்து பருவ காலங்களிலும் எப்பொழுதும் கனன்று கொண்டிருக்கும் வகையில் 'தீ' பாதுகாக்கப்பட்டது. இதன் மூலம் தீயை அடக்கியாளப் பழகிய மனிதன் தீயை சிறு சிறு பொறியாக மாற்றி தீக்குண்டங்களில், அதாவது வேள்வியில் நிலை நிறுத்தினான். இதுவே பின்னாளில் சிறு ஒளியாக தீபமாக மாறியது.
தீயை காக்கும் மனிதன் : மனிதன் உயிர் வாழவும், உயிரை பாதுகாக்கவும் பயன்பட்டதால் 'தீ' புனிதமாக்கப்பட்டது. தீயும், தீயுள்ள இடங்களும் பின்னாளில் புனிதமான இடங்களாயின. இரவு நேரங்களில் வரும் பாதிப்புக்களை தவிர்க்க தீபங்களை ஏற்றினர். அதனால் கிடைத்த நன்மைகளை அவ்வப்போது கொண்டாடி மகிழ்ந்தனர். இன்றும் மாலை நேரத்தில் வீடுகளில் தீபமேற்றி செல்வத்தின் அதிபதி லட்சுமியை வரவேற்கும் முறை உள்ளது. எனவே, ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை தீ மற்றும் தீப ஒளியை பாதுகாக்கவே மனித சமூகம் அதிகம் போராடி வருகிறது என்பது தெளிவு.
'தீபாவளி' : இறைவனுடன் ஒளியை தொடர்பு படுத்தி வணங்க ஆரம்பித்த பின் யாகம், வேள்வி, நிகழ்த்துவதில் 'தீ' வணங்கப்பட்டது. மனிதன் மனதிலுள்ள இருள் எனும் தீமையை போக்க தீப ஒளியில் இறைவனை வணங்கினான். தீமை விலகி நன்மையை உணர்ந்த வேளையில் 'தீ' மற்றும் தீபம்' இரண்டும் இணைந்து 'தீபாவளி' என்ற ஜோதி நாளாக கொண்டாடப்பட்டது. ஆம், 'தீபாவளி' என்றால் 'தீபவரிசை' என்று பொருள். நரகாசுரன் என்ற அரக்கனை ஸ்ரீகிருஷ்ண பகவான் வதம் செய்து இந்த உலக மக்களை காத்தருளிய நாளை நாம் தீபமேற்றி தீபாவளியாக கொண்டாடி வருகிறோம் என்கிறது நமது ஆன்மிகக்கதை. உள்ளத்து தீமையை சுட்டெரி 'தீ' என்ற அறிவை பயன்படுத்தி தீமையை விரட்டி குறைவில்லா செல்வத்தை இல்லங்களுக்கு கொண்டு வரும் நன்னாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இன்னும் பல கதைகள், பல விளக்கங்கள் தீபாவளி பண்டிகை பற்றி இருந்தாலும், மனிதனின் உள்ளத்தில் இருக்கும் தீமையை, அகங்காரத்தை, ஆணவத்தை 'தீ' என்ற அறிவால் பொசுக்கும் பண்டிகை என்பதை உணர்ந்து மனிதகுலம் சுபிட்சமாக வாழ தீப ஒளியேற்றி கடவுளை வணங்குவோம் நாளைய தீபாவளி நன்னாளில்!
- முனைவர் சி. செல்லப்பாண்டியன், உதவி பேராசிரியர், தேவாங்கர் கலைக்கல்லூரி,அருப்புக்கோட்டை. 78108 41550

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement