Advertisement

இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள்

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் சிறகை விரித்து, சிகாகோ மண்ணில் 1981 அக்.,17ல் வாழ்வை முடித்துக் கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், பிறருக்கு எட்டாத கருத்துக்களை கொட்டியவர்.

'பத்து வயதானதொரு பாலகன்
உன் சன்னதியில் பாடியதும் நினைவில் இலையோ முத்து என இட்ட பெயர் முத்தாக
வேண்டுமென முறையீடு செய்ததிலையோ! தமிழில் ஒரு கவிமகனை
சிறுகூடல் பட்டிதனில்
தந்த மலையரசித் தாயே'-

என மலையரசி கோயிலில் கவிதை வடித்தவர். அப்போது அவரது வயது பத்து. அவர் கவிஞர் கண்ணதாசன். வேலை கேட்டு ஒரு பத்திரிகை அலுவலகம் சென்றவரிடம், 'ஏதாவது இதழ்களில் எழுதி இருக்கிறீர்களா' என கேட்க, 'ஆமாம்' என்றார் கவிஞர். 'என்ன பெயரில் எழுதுகிறீர்கள்' என சட்டென கேட்க, கொஞ்சமும் தயக்கமின்றி, 'கண்ணதாசன் என்ற பெயரில்...' என்றார். இப்படித்தான் பெயரும், எழுத்தும் அவர் வசப்பட்டது.

படைப்பாற்றல் : பெண்மையை போற்றி 'மாங்கனி' என்ற சிறு காப்பியம் படைத்தார். சங்கரர் வட மொழியில் எழுதிய கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில், 'பொன்மழை' யாகத் தந்தார். பஜகோவிந்தத்தை எளிய நடையில் மொழி பெயர்த்தார். பகவத்கீதைக்கு உரை விளக்கம் தந்தார்.
1944 - 1981க்கு இடையே அவர் 4ஆயிரம் கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேல் சினிமா பாடல்கள் எழுதியுள்ளார். தனது அனுபவங்களை கவிதையாக்கியவர். உதாரணமாக கண்ணதாசன்,
காங்கிரசில் இருந்து விலகினார். மீண்டும் அவரை காங்கிரசில் சேர்க்க தூதுவர் ஒருவரை
அனுப்பினார் காமராஜர். காமராஜரே நேரில் பேசாமல் தூது அனுப்பியது, கவிஞருக்கு வருத்தத்தை தந்தது. தனது ஆதங்கத்தை அப்போது 'பட்டணத்தில் பூதம்' என்ற படத்தில் வரும் பாடலில் தெரிவித்தார்... இப்படி:

'அந்த சிவகாமி மகனிடம்
சேதி சொல்லடி
எனை சேரும் நாள் பார்க்கச்
சொல்லடி
வேறு யாரோடும் நான்
பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல் தோகை ஏதடி'

என எழுதினார். சிவகாமி என்பது காமராஜரின் அன்னை பெயர்.
தத்துவங்களை எளிமையாக்கி பாமரரும் புரியும் வண்ணம் பாடல்களில் புகுத்திய சாதனை கவிஞருக்கே உரியது. அவரது 'அர்த்தமுள்ள இந்து மதத்தை' அவரது குரலிலேயே, தம்புரா இசைப் பின்னணியில் கேட்டுப்பாருங்கள். உலகமே உங்கள் வசப்பட்டதாய் உணர்வீர்கள். 270 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் வனவாசம் 30 பதிப்பு, மனவாசம் 20 பதிப்பையும் கண்டு சாதனை நிகழ்த்தி இருக்கிறது.

அரசவை கவிஞர்

'சாண்டோ சின்னப்பா தேவரின் 'தெய்வம்' படத்தில்

'மருதமலை மாமணியே முருகையா, தேவரின் குலம் காக்கும் வேலையா'

என்ற பாடலை எழுதினார். இசைக்கருவிகளும் பாடலும் போட்டிபோட்டு ஒலித்த இந்தப் பாடலுக்கு இரண்டு அர்த்தம் கொள்ளலாம். சின்னப்பா தேவருக்கு இப்பாடல் மிகவும் பிடித்துப் போயிற்று. நிரப்பாத செக்கை கொடுத்து கவிஞரை பாராட்டினார்.
ஒரு கவியரங்கில் கவிதை வாசித்த பத்து பேருக்கு கரவொலி கிடைக்கவில்லை. காரணம், கவிஞர் கவிதை வாசிக்க வேண்டும் எனக் கூட்டம் காத்திருந்ததுதான். கடைசியில் கவிஞர் கவிதை வாசித்தார். கைதட்டல் அடங்க நேரமாயிற்று.கவிஞர் சொன்னார், 'யார் கவிதை வாசித்தபோது நீங்கள் கூச்சலிட்டீர்களோ அவர் எழுதிய கவிதைதான் இது. புகழ்பெற்றவர் என்பதற்காக கைதட்டல் என்பது நல்ல மரபல்ல. நீங்கள் கவிதையை ரசிக்கவில்லை. வாசித்த நபரின் புகழைப் பார்க்கிறீர்கள். இது நல்ல பண்பல்ல', என்றார். கவிஞரின் தமிழாற்றலை உணர்ந்தவர்
எம்.ஜி.ஆர்., அதனால்தான் அவர் முதல்வராக இருந்தபோது, கவிஞர் கண்ணதாசனை அரசவை
கவிஞராக்கினார்.மதுவிலக்கு அமலில் இருந்தபோது மதுகுடிப்பதற்கான பெர்மிட் பெற, அமைச்சர் கக்கனை சந்தித்தார். 'எனது பெர்மிட் என்ன ஆனது' என்ற அவரது குரலில் கோபம் கொப்பளித்தது. அமைச்சர் கக்கன், 'சற்று அமருங்கள். தமிழ் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காகவே பெர்மிட்டில் கையெழுத்திடாமல் வைத்திருக்கிறேன்' எனச் சொல்ல, கவிஞரின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.ஏசுகாவியம் எழுதுவதற்காக குற்றாலத்தில் பாதிரியார் தம்புராஜூடன் இருந்தார். தினமும் காலையில் குளித்து, நெற்றி நிறைய விபூதி பூசிய பின்பு, பகல் முழுவதும் ஏசுகாவிய எழுத்துப்பணி.அவர் மதுஅருந்துவார் என்பதை உணர்ந்த பாதிரியார், 'தேவையெனில் மாலையில் மதுஅருந்தி ஓய்வெடுங்கள்' என்றார்.
கவிஞரோ 'இப்பணி முடியும் வரை மது அருந்தமாட்டேன். இது உலக மக்களின் உயர்ந்த நூல் என்பதை என்மனம் சொல்கிறது' என்றார்.

கண்ணே கலைமானே
கேள்விகளுக்கு மதிநுட்பத்தோடு பதில் சொல்வார்.
'அரசியல் மேடைக்கும்,
இலக்கிய மேடைக்கும் என்ன வித்தியாசம்'

என்றதற்கு, 'அரசியல் மேடை மனிதனை முட்டாளாக்குவதற்காகப் போடப்படுவது, இலக்கிய மேடை முட்டாள்தனத்தை தெளிய வைப்பதற்காக போடப்படுவது' என்றார்.
'உங்கள் புத்தகத்தை படிப்போருக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி' என்ன என்றதற்கு,
'புத்தகத்தில் உள்ள கருத்துக்களை பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரை பின்பற்றாதீர்கள்' என போட்டு உடைத்தார் இதற்கும் ஒருபடி மேலே சென்று, 'எப்படி வாழக்கூடாது என்பதற்கு எனது வாழ்க்கையின் முற்பகுதியையும், எப்படி வாழ வேண்டும் என்பதற்கு காந்தியடிகளின் சுயசரிதையும் உங்களுக்கு வழிகாட்டும்' என்று வனவாசத்தில் சொன்னவர் கவியரசர்.
சினிமா உலகில் கால்பதிக்க அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதாக இல்லை. 'கலங்காதிரு மனமே' என்ற பாடலுடன் துவங்கி, 'கண்ணே கலைமானே' என்ற பாடலுடன் நிறைவானார். 'சாத்தப்பனுக்கு மகனாக பிறந்தான். ஆனால் இவன்தான் சினிமா பாடல்கள் மூலம் எல்லா வாசல்களையும் திறந்தான்' என்கிறார் கவிஞரைப் பற்றி நெல்லை ஜெயந்தா.
'கண்ணதாசன் முறையாக தமிழ் படித்தவரில்லை' என, சில தமிழறிஞர்கள் சொன்னபோது, 'அதனாலென்ன, தமிழுக்கு கண்ணதாசனைத்தான் தெரிகிறது' என பதிலடி கொடுத்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். 'காட்டுக்கு ராஜா சிங்கம்.

கவிதைக்கு ராஜா கண்ணதாசன்' என காமராஜர் பாராட்டினார் என்றால், அர்த்தமில்லாமலா இருக்கும்?

-ரா.சொக்கலிங்கம், தலைவர், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம், மதுரை. 98421 88991

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement