Advertisement

செம்பையின் சங்கீதம்; இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள்

கர்நாடக சங்கீத உலகில் அழியாப் புகழுக்கு உரியவர் செம்பை வைத்தியநாத பாகவதர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாய் என்னும் கிராமத்தில் செம்பை அக்ரகாரத்தில் அனந்த பாகவதருக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாக 1896ஆகஸ்ட் 28 ல் பிறந்தார்.

ஒன்பதாவது வயதில் முழுமையானதொரு கச்சேரி நடத்துவதற்கான திறமையை வைத்தியநாதரும், அவரது சகோதரரும் கற்றுக் கொண்டனர். மலபாரில் பல கச்சேரிகள் நடத்திட செம்பை சகோதரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் வாழ்ந்த ஊர் பாலக்காடு. அந்த கலைஞர்கள் எல்லாம் செம்பை அக்ரகாரத்திற்கு அடிக்கடி வந்து செம்பை சகோதரர்களை சந்தித்தனர். இவர்களின் சந்திப்பில் இசை விவாதங்கள் நடந்தன. இசை குறித்த அரிய அறிவு செம்பை சகோதரர்களுக்கு கிடைத்தன.

வாழ்வின் திருப்புமுனை :செம்பை சகோதரர்கள் கேரளாவில் புகழ் பெற்றிருந்த நேரத்தில், அதையறிந்த ராமாயணப்புகழ் நடேச சாஸ்திரிகள் செம்பைக்கு வந்தார். சிறுவர்களுடைய சங்கீத ஞானமும், பாடும் திறமையும் நடேச சாஸ்திரிகளை கவர்ந்தது. அனந்த பாகவதரின் அனுமதியோடு செம்பை சகோதரர்களை அழைத்துக் கொண்டு தமிழகத்திற்கு வந்தார் நடேச சாஸ்திரி. ஹரிகதை நிகழ்த்தும் மேடைகளில் கதைச்சூழலுக்கு ஏற்றவாறு, இடையிடையே கீர்த்தனைகளை பக்கவாத்தியங்களோடு பாட வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார் நடேச சாஸ்திரிகள். இந்நிகழ்ச்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. சங்கீதத்தின் உறைவிடமான தஞ்சைக்கு சென்ற போது, மடப்புரக் குருபூஜை விழாவினை முன்னிட்டு நடைபெறும் இசைவிழாவில் பாடுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. செம்பை சகோதரர்களின் சங்கீதத்தின் எளிமையையும், அழகையும், நளினத்தையும் பார்வையாளர்கள் அறிந்து மகிழ்ந்தனர். புகழ்பெற்ற மிருதங்க கலைஞர் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தியுடன் நட்புறவு கொண்டிட இந்நிகழ்ச்சி உதவியது. செம்பையின் சங்கீத வாழ்க்கையில் இந்நிகழ்ச்சி திருப்பு முனையாக அமைந்தது.

வாய்ப்பு கேட்ட செம்பை :கரூர் சங்கீத திருவிழாவில் கச்சேரி நடத்த செம்பை வாய்ப்பு கேட்டார். 'இது இளைஞர்கள் பாடும் அவை அல்ல' என முத்தையா பாகவதர் மறுத்துவிட்டார். அந்த அவையில் பக்கவாத்தியம் வாசிக்கும் வயலின் இசைக்கலைஞர்கள் வரவில்லை. இந்த வாய்ப்பை பெற்றுக் கொண்டு அனைவரின் பாராட்டை பெற்றார். முத்தையா பாகவதர் மகிழ்ச்சி அடைந்து, மறுநாளே அந்த அவையில் பாட வாய்ப்பு கொடுத்தார். அந்த அவையில் சுருதி சுத்தமாக ஆரோகண அவரோகணங்கள் பாடி பாராட்டுகளை செம்பை சகோதரர்கள் பெற்றனர். இதனால் தமிழகம் முழுவதும் கச்சேரிகள் நடத்தும் வாய்ப்புகள் கிடைத்தன. தனக்கே உரிய திறமையும் தனித்தன்மையும் கொண்டு செம்பையின் புகழ் பரவியது.

சென்னைக்கு சென்றார் :கோட்டாயில் உள்ள அக்ரகாரத்திலிருந்து சென்னை சாந்தோமிற்கு 1945ல் குடிபெயர்ந்தார். கச்சேரிகள் அதிகமானதே இதற்கு காரணம். செம்பையில் செயல்பட்டு வந்த குருகுல கல்விக்கூடத்தையும் பூர்வீக சொத்துக்களையம் தம் தம்பி சுப்பிரமணிய பாகதவரிடம் ஒப்படைத்தார். தவிலுடனும், நாதசுரத்துடனும் இணைந்து கச்சேரி நடத்திய பெருமை செம்பைக்கே உரியது. குருவாயூர் ஏகாதசி நாளில் சீடர்களுடன் கச்சேரி நடத்தும் அதிர்ஷ்டம், செம்பைக்கு எழுபது ஆண்டுகள் கிடைத்தது. 1974 அக்., 16ல் இயற்கை எய்தினார்.கோட்டாயில் உள்ள செம்பை கிராமம் சங்கீதத்தை விரும்புபவர்களின் புண்ணிய பூமி. செம்பையின் வீட்டிற்கு முன்புள்ள பார்த்தசாரதி கோயிலில் ஜப்பசி பவுர்ணமி தினத்தில் துவங்கி ஒரு வாரம் இசைவிழா நடக்கும். இது 1914ம் ஆண்டு செம்பை வைத்தியநாத பாகவதரால் தொடங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 18. அன்றிலிருந்து தொடர்ச்சியாக நடைபெறும் இந்த இசைவிழா 2014 மார்ச்சில் நூற்றாண்டு விழா கண்டது.

பாடகர் ஜேசுதாஸ், டி.வி.கோபாலகிருஷ்ணன், ஜெயவிஜயன், மண்ணுமர் ராஜகுமாரணுண்ணி, சுகுமாரி நரேந்திர மேனோன் உட்பட செம்பை பாகவதரின் சீடர்கள் 45 ஆண்டுகளாக குருசமர்ப்பணம் செய்ய வேண்டி செம்பை கிராமத்திற்கு வந்து கச்சேரி நடத்துகின்றனர்.1986 ம் ஆண்டில் பாகவதருடைய நினைவாக செம்பை வித்யாபீடம் தொடங்கப்பட்டது. சனி, ஞாயிறு நாட்களில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் சங்கீதம் கற்கின்றனர். தன் திறமைகள் அனைத்தையும் சங்கீதத்திற்காக சமர்ப்பித்தவர் செம்பை. ஆனந்த பரவசத்தோடு ரசிக்கக்கூடிய கலையே சங்கீதம் என்பதை தன் வாழ்க்கை மூலம் நிரூபித்த செம்பையின் நினைவை போற்றுவோம்.
- மலையாள மூலம்கீழத்தூர் முருகன்
(செயலாளர், செம்பை வித்யா பீடம்)
- தமிழாக்கம்
ச.ஷாமிலா
௦0492-228 5492

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement