Advertisement

வந்தாள் மகாலட்சுமியே...! இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

'வந்தாள் மகாலட்சுமியே!
இனி என்றும் அவள் ஆட்சியே...'

என பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் குதுாகலத்தை யாராலும் அளவிட முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும் 'ஆதி பராசக்தி' எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு. பழமைவாதம், உணர்வுகளை ஒரு காலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக் கொண்டு பயணிக்காமல் பெண்ணுக்கு பெண்ணை எதிரியாக்காமல்... எந்த திசை நோக்கி பயணித்தால் அவர்களை வழிநடத்தலாம் என்று எண்ணி அந்த பெண் குழந்தைகள் தடம் மாறி கீழே விழுவதை விட, அவர்களையும் அவர்களின் உள்ளத்தின் உணர்வுகளையும் புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் அவர்களுடன் நாம் பயணிக்க வேண்டும்.

இந்தியாவில் பெண் குழந்தைகளை வழி நடத்தும் விதம் காலம் காலமாக அன்புடனும், அரவணைப்புடனும் தொடர்கிறது. வாசலில் கோலமிடுவது முதல் பெரியோரை மதிப்பது வரை எந்த ெவளிநாட்டினராலும் சொல்லி கொடுக்க முடியாத, சொல்லி கொடுக்காத சமூக சிந்தனைகளையும் பெண் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறோம்.சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாசார போர்வையில் கம்ப்யூட்டர், மொபைல் போன் மூலம் அவர்கள் தற்காலிகமாக பாதை மாறலாம். ஆனால் அவர்களின் அடிமனதில் ஒளிந்திருக்கும் நம் கலாசாரம் மற்றும் பண்புகள் ஆன்மிக பலத்துடன் ஆழமாக பதிந்து இருப்பதால் அவர்களால் அவர்களை பாதுகாத்து கொள்ள முடிகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் இந்த பெண் குழந்தைகளை பேணி காக்கும் வகையில் நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். எந்த நேரத்திலும், எந்த காலத்திலும் பெண் குழந்தைகளை நாம் கொண்டாட மறுப்பதில்லை. நவராத்திரி காலத்தின் போது பெண்கள் கொலு வைப்பது அவர்களின் முழு ஆளுமை திறனை வளர்த்து கொண்டு வரத் தான். கொலு வைப்பதன் மூலம் ஒரு பெண் குழந்தைக்கு தேவையான நல்ஒழுக்கம், பண்பு, பணிவு, ஆன்மிக வாழ்க்கை நெறி, உழைப்பு, ஆளுமை, கட்டுப்பாடு, கலாசாரம் போன்றவற்றை புரிய வைக்கிறோம்.

கல்வியும், ஆளுமையும் அவசியம் :பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்த கல்வி மூலம் எளிதாக தந்து விடலாம். அவர்களை சரியான பாதையில் கால் பதிக்க வைத்து, அவர்களுடன் கை கோர்த்து, அவர்கள் பயணிக்கும் பாதையை பெற்றோர் உருவாக்கி கொடுக்க வேண்டும். செல்லும் பாதையை செம்மைப்படுத்தி, வழித்தடங்களில் இருக்கும் கரடுமுரடுகளையும், முட்புதர்களையும் அகற்றி விட்டாலே போதும். சிறந்த இலக்கை அடையும் சக்தி பெண் குழந்தைகளிடம் உள்ளது.நரியோடு தான் வாழ்க்கை எனில் ஊளையிட கற்று கொடுக்க வேண்டும்... பருந்துடன் தான் வாழ்க்கை எனில் அதை விட ஒரு சிறந்த உயரத்தை அடைய கற்று கொடுக்க வேண்டும். எந்த வித கேள்விகளுக்கும் அவளாகவே ஒரு சிறந்த திறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து... எந்தவித சூழ்நிலை சிக்கிலிலிருந்தும் சிறப்பாக ெவளிவந்து வெற்றி வாகை சூடும் ஒரு சிறந்த சமூக சிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கல்வியில், வழிகாட்டுதலில் பயிற்றுவிப்பதில் கஷ்டப்படுத்தாத சிறந்த வழிமுறைகளை கற்று கொடுக்க வேண்டும். கல்வி தான் சிறந்த பாதுகாப்பை பெண் குழந்தைகளுக்கு தரும்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு:பொதுவாக பெண் குழந்தைகள் எல்லாவித சூழ்நிலையையும் புரிந்து கொள்ளும் பக்குவத்தை அறிய வைப்பது நல்லது. ஆறுதல் தரும், சுகமான இளைப்பாறும் மடியை யார் மூலம் பெறுவது என உறுதிபட சொல்லி தெரிய வைக்க வேண்டும். அந்த இடம் தான் தன் கோபதாபங்களையும், விருப்பு வெறுப்புகளையும் ெவளிப்படுத்தும் இடமாக வைத்து கொள்ள கற்று கொடுக்க வேண்டும். அந்த இடம்... அந்த மடி... ஒரு தாயாகவோ... தந்தையாகவோ... சிறந்த நண்பராகவோ... உண்மையான பண்பான நபராகவோ இருக்க வேண்டும் என சொல்லி கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் தான் போலி எது? அசலுடன் கூடிய உண்மை எது? என அறிந்து புதை மணலில் சிக்காமல் தீர்க்கமாக முடிவு எடுக்கும் வகையில் பெண் குழந்தைகளை தயார் செய்ய முடியும்.

அடிப்படை வசதிகள் தேவை:கல்விக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு அடிப்படை வசதிகளும் தேவைகளும், அரசு தரும் வெற்று இலவசங்களை விட முக்கியமான தேவை. அதை அரசுகள் புறக்கணிக்க கூடாது.வெறும் கவர்ச்சி மற்றும் அழகுப்பதுமைகளாக பெண் குழந்தைகளை காட்டாமல் தோல்வி கண்டாலும் அதை எதிர்த்து போரிடும் குணத்தை கற்று கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளை பல வித பொறுப்புகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ வைக்க முடியும். மகாராணியாகவும், சிறந்த நாயகியாகவும் தன்னை தானே செதுக்கி கொண்டு ஒரு குடும்பத்தையும், ஒரு பாரம்பரியத்தையும், ஒரு சமூகத்தையும் அவள் ஒருவரால் மட்டும் துாக்கி வைத்து போற்ற முடியும். அதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.பெண் குழந்தைகள் அழகுப் பதுமைகள் அல்ல... அறிவின் ஜோதிகள். ஊக்குவிப்போம். நல்திசை காட்டுவோம். நல்வழி நடத்துவோம்.
-எம்.டி.விஜயலட்சுமி,
குடும்ப நல கவுன்சிலர்,
மதுரை. 98421 28085.
visadh2011gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement