Advertisement

காஷ்மீரும் கிறிஸ்தவமும்

நான் ஸ்ரீநகரில் இருந்தபோது ஞாயிற்றுக்கிழமையில் ஹோலி ஃபேமிலி தேவாலயத்துக்கு வந்திருந்தோரில் பெரும்பாலானோர் தென்னிந்தியர்களே. அவர்கள் அரசு வேலை அல்லது ராணுவச் சேவைக்காகக் காஷ்மீரில் தங்கி இருப்பவர்கள். பாரமுல்லாவின் கான்வெண்ட் தேவாலயத்திலும் இதே கதைதான். பாரமுல்லாவிலும் அதனைச் சுற்றியும் 1012 கிறிஸ்தவக் குடும்பங்கள் மட்டுமே உள்ளன. அவர்கள் பலரும் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வெளியிலிருந்து வந்தவர்கள். பல தலைமுறைக்கு முன்பே மதம் மாறியவர்கள் . சமீபத்தில் மதம் மாறியவர்கள் அதிகம் வெளியில் தெரியாமலேயே அடங்கி இருப்பார்கள்.


மதமாற்றத்தில் ஈடுபடுவது சிக்கலானது. அதுவும் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் மேலும் சவாலானது. செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர், 'வெளியேறும்போது கிறிஸ்தவர்களாகச் செல்வதில்லை. கிறிஸ்தவ மதத்தை அவர்கள்மீது திணிக்க நாங்கள் முயல்வதில்லை' என்று பாதிரியார் ஷாங்க்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, பாதிரியார் ஷாங்க்ஸுக்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்த அந்தக் கல்லூரியின் பொறுப்பில் இருக்கும் தென்னிந்தியப் பாதிரியார் ஒருவர், யாராவது ஒருவர் பைபிளின் புதிய ஏற்பாட்டைக் கேட்டாலும் தான் கொடுப்பதில்லை; மதமாற்றம் என்பதன் சாயம்கூடப் படுவதைத் தாங்கள் விரும்பவில்லை என்றார். 'அப்படி நாங்கள் செய்ய நேரிட்டால், அதுவே எங்களுக்கு இங்கே கடைசி தினமாக இருக்கும்.'
கல்விப்பணி:

கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மத அமைப்புகளும் மிகவும் குறைவாக உள்ளன என்பதாலேயே, காஷ்மீரில் கிறிஸ்தவ தேவாலயத்தின் செல்வாக்கு குறைவாக இருக்கும் என்று சொல்லமுடியாது. ஆரம்பகால ஆங்க்லிகன், கத்தோலிக்க மிஷனரிகள் கல்வித் துறையில் பெரும் கவனத்தைச் செலுத்தினார்கள். 1891ல் பாரமுல்லாவில் ஒரு கிறிஸ்தவப் பள்ளி தொடங்கப்பட்டது. செயிண்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி 1909ல் தொடங்கப்பட்டது. செயிண்ட் ஜோசப் பள்ளிகளுடன் ஸ்ரீநகரில் இருக்கும் பர்ன் ஹால், பிரசண்டேஷன் கான்வெண்ட், ஸ்ரீநகரிலும் அனந்தநாகிலும் இருக்கும் புராட்டஸ்டண்ட் டிண்டேல்பிஸ்கோ ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி ஆகியவை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் உயர் மட்டத்தினர் பலருக்கும் கல்வி அளித்துள்ளன. இப்போதும் அந்தப் பணியைத் தொடர்ந்துவருகின்றன. ஷேக் அப்துல்லா, தன் மகன்களையும் மகள்களையும் டிண்டேல்பிஸ்கோ பள்ளிக்குத்தான் அனுப்பினார். மகாராஜா ஹரி சிங், தன் பட்டத்து மகனைச் சிறிது காலம் பிரசண்டேஷன் கான்வெண்டுக்கு அனுப்பினார். அதனால் பாதிரியார் ஷாங்க்ஸுக்கு மகாராஜாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. காஷ்மீரின் மத்திய தர வர்க்கத்தினர் பெரும்பாலானோரின் விருப்பத்துக்குரிய தேர்வாக இந்தப் பள்ளிகளே இருக்கின்றன.
கன்னியாஸ்திரீகள் பற்றாக்குறை:

கல்வியைப் போன்றே, பெண்களை அணுகி, அவர்களுக்கு மருத்துவச் சேவை அளிப்பதிலும் கத்தோலிக்க மிஷனரிகள் அதிக ஆர்வம் செலுத்தினர். ஏற்கெனவே, பஞ்சாபில் நிலைபெற்றிருந்த ஃப்ரான்சிஸ்கன் கன்யாஸ்திரீகளின் உதவியுடன் இந்தப் பணிகள் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டன. 1916ல் இரண்டு கன்யாஸ்திரீகள் பாரமுல்லாவுக்குச் சென்று, 'அது மிகவும் அழகுடனும் துடிப்புடனும்' உள்ள நகரமாக இருப்பதைக் கண்டனர். 'உங்களுடைய பெண் பிள்ளைகள்தான் காஷ்மீரில் கால் பதித்த முதல் பெண் மதப் பிரசாரகர்கள்' என்று தங்கள் மடத்தின் சுப்பீரியர் ஜெனரலுக்கு அவர்கள் கடிதம் எழுதினர். 'என்ன மிஷன் இது? இதில் ஓர் உள்ளூர் கிறிஸ்தவர்கூட இல்லையே?' என்று அவர்கள் எழுதியிருந்தனர்.


பாரமுல்லாவிலும் ஸ்ரீநகரிலும் ஊருக்கு ஒன்று என்று இரு கத்தோலிக்க மிஷனரிகள் மட்டுமே இருந்தனர். பாரமுல்லாவில், ஐந்தாறு ஐரோப்பியக் குடும்பங்கள் மட்டுமே இருந்தன என்றும் அவற்றில் நான்கு மட்டுமே கத்தோலிக்கக் குடும்பங்கள் என்றும் அந்தக் கன்யாஸ்திரீகள் எழுதியிருந்தனர். 'மிஷனரிகள், அந்தப் பகுதியில் உள்ள பெண்களை அணுக கன்யாஸ்திரீகள் தேவை என்று கருதுகின்றனர். கன்யாஸ்திரீகள் இல்லாமல், மதமாற்றம் மிகவும் கடினம். நாங்கள் நான்கு கிராமங்களுக்குச் சென்றுவந்தோம். அங்குள்ள பெண்கள் அனைவரும் எங்களை அங்கேயே தங்கிவிடும்படிக் கேட்டுக்கொண்டனர்... இந்த அடித்தளத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும் என்று இறைஞ்சுகிறோம். ஏனெனில், இது ஒரு கன்னி நிலம். இங்கு கடந்த பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை எந்த ஒரு கிறிஸ்தவ அமைப்பும் வந்து பார்த்ததில்லை. மதமாற்றத்தில் ஈடுபட்டதில்லை.
மக்களுக்கான சேவை:

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான், நான்கு கன்யாஸ்திரீகளுடன் ஒரு கான்வெண்ட் பாரமுல்லாவில் நிர்மாணிக்கப்பட்டது. அவர்கள் ஒரு மருத்துவமனையை நடத்தினர். நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்தனர். சில நேரங்களில் தொலை தூரக் கிராமங்களுக்கு குதிரை மேல் ஏறி அல்லது ஷிகாரா எனப்படும் உள்ளூர்ப் படகுகளில் சென்று சிகிச்சை அளித்தனர். ஓர் அநாதை விடுதியை நிர்மாணித்தனர். அது பின்னர் ராவல்பிண்டிக்கு மாற்றப்பட்டது. 1920களின் மத்தியில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான பதினைந்து படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்று 1920களின் இறுதியில் கட்டப்பட்டது.


கன்யாஸ்திரீகள் அந்த மாவட்டத்தின் பெண்களுக்காகக் கடுமையாகப் பாடுபட்டனர்' என்று பாதிரியார் ஷாங்க்ஸ் எழுதினார். 'அவர்களுடைய மருத்துவமனையில் தினமும் 200க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவந்தனர். வருடம் முழுவதும் அந்தச் சிறிய மருத்துவமனையில் நோயாளிகள் குழுமியிருந்தனர் . கைவிடப்படும் குழந்தைகளுக்கான தொட்டில்கள் காலியாக இருந்ததே கிடையாது. சுற்றியுள்ள உள்ளூர்ப் பெண்கள், சுகாதாரமான குழந்தை பிறப்புக்காக மேலும் மேலும் அந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர். பெரும்பாலான தாய்மார்கள், தங்கள் உயிருக்கும் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்கும் இந்த வெள்ளையுடைப் பெண்களுக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.'


1947ல் இந்த கான்வெண்டில் 16 கன்யாஸ்திரீகள் இருந்தனர். ஒருவர் மட்டுமே இந்தியர். பிறர் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். பழங்குடியினர் தாக்குதலில் கொல்லப்பட்ட மதர் தெரசலீனாவும் அப்போதுதான் வந்திருந்த ஸ்பானிய கன்யாஸ்திரீ ஒருவரும் மட்டுமே 30 வயதுக்குக் குறைந்தவர்கள். பெரும்பாலானோர், 40 அல்லது அதற்கும் மேலான வயதினர். அவர்களில் பலர் செவிலியர் பணியிலும் மருந்து கொடுப்பதிலும் முறையான பயிற்சியும் அனுபவமும் பெற்றவர்கள். பிறர் தோட்டங்களைக் கவனித்துக்கொள்ளுதல், உடைகளைப் பராமரித்தல், அருகில் உள்ள கிராமங்களில் மருத்துவப் பணி செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.


உயர்ந்து கம்பீரமாக விளங்கிய செயிண்ட் ஜோசப் கல்லூரிக்கு அடுத்தாற்போல மருத்துவமனை இருந்தது. கல்லூரியுடன் சேர்ந்து கான்வெண்ட், மருத்துவமனை ஆகிய மூன்றும் பாரமுல்லாவின் முக்கியமான கட்டடங்களாக இருந்தன. காஷ்மீர் பிரச்னை முற்றி, லஷ்கர் பழங்குடிகள் உள்ளே நுழைய ஆரம்பித்தபோது, இந்த மூன்று கத்தோலிக்க நிறுவனங்களில் வசித்தவர்களும், பதான் பழங்குடியினரால் தாங்கள் கொல்லப்படுவோம் என்றே நினைத்தனர்.


உண்மையில் மடாலயத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்த முழு விவரங்களும் பாதிரியார் ஷாங்ஸின் குறிப்புகளில் இருந்தே தெரிய வருகிறது.


========================


காஷ்மீர் : முதல் யுத்தம்


ஆண்ட்ரூ வைட்ஹெட்


தமிழில் : B.R.மகாதேவன்


கிழக்கு பதிப்பகம்


408 பக்கம் விலை ரூ.300


இணையத்தில் புத்தகத்தை வாங்க : : https://www.nhm.in/shop/kashmir.html


தொலைபேசி வழியாக இந்தப் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement