Advertisement

சபாஷ் - சரியான சவுக்கடி!

ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் தலைவர், அஜித் சிங். இவர், கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியில், விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எம்.பி., சீட்டையும் பறி கொடுத்தவரால், அரசால் டில்லியில் தனக்கு தரப்பட்ட வீட்டை காலி செய்து கொடுக்க மனமில்லை. பொறுத்துப் பார்த்த அதிகாரிகள், அஜித் சிங் வீட்டிற்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டித்து விட்டனர்.

அவருக்கு மட்டுமின்றி காங்., முன்னாள் எம்.பி.,க்களான கிரிக்கெட் வீரர் அசாருதீன், ஜிதேந்திர சிங் ஆகியோருக்கும் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது.சாதாரண மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு அளவுக்கதிகமான வசதிகளும், சலுகைகளும் வாரி வழங்கப்படுகின்றன. தேர்தல் தோல்விகளுக்கு பின்னும், அதை இழக்க அவர்கள் சம்மதிப்பதில்லை. இது ஒரு குறிப்பிட்ட கட்சியினர் மட்டும் செய்யும் தவறு அல்ல. எல்லா கட்சி அரசியல்வாதிகளும் ஆடம்பர வசதிகள், வெளிநாட்டு சுற்றுலா, நோய் வந்தால் வெளிநாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை என்று, இன்றும் பல விதங்களில் தங்கள் பதவியை பயன்படுத்தி லாபம் பார்க்கின்றனர்; வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.ஒரு தேர்தல் தோல்வியால் அதை இழக்க அவர்கள் தயாராக இல்லை. ஆனால், அவர்களுக்கு ஓட்டுப் போட்டு தேர்வு செய்த மக்களின் கதி, அதே மோசமான நிலையில் தான் உள்ளது. அந்த மக்களுடைய அன்றாட வாழ்க்கை வளர்ச்சிக்கு
எந்தவித திட்டமும் இல்லை.

ஊழல் செய்து கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகள், ஆட்சி மாறியதும் சிறிது நாட்களுக்கு கோர்ட், கேஸ் என்று அலைந்தாலும், மீண்டும் பழைய ஆட்சி திரும்பிய தும் ராஜபோக வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். அரசியல்வாதிகள், ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு அல்லவா திருப்பித்தர வேண்டும்? பெரிய இடத்து மனிதர்கள், தொழிலதிபர்கள், சினிமா உலகத்தினர், கிரிக்கெட் மனிதர்கள், அரசியல்வாதிகள் கொள்ளையடித்து சொகுசாக வாழ்வதும், தவறுகள் செய்தாலும் தப்பித்துக் கொண்டே இருப்பதும், சாதாரண மக்களை கொதிக்க வைக்கிறது.'பெரிய ஆளுங்களுக்கு தண்டனை கிடைக்கலையே, நாம சின்னதா நம்மால முடிஞ்ச தப்பை செஞ்சா மட்டும் யார் கண்டுக்கப் போறாங்க, யார் கேட்கப் போறாங்க; கேட்டாலும் அவனை நிறுத்தச் சொல்... நான் நிறுத்துறேன்...' என, உள்ளூர் அரசியல்வாதிகள் கூலாக சொல்கின்றனர்.பெரிய இடத்தில் தப்பு செய்கிறவர்களை ஒரு தட்டு தட்டினால், எல்லாருக்கும் பயமும், பொறுப்பும் வரும். அதற்கு ஒரு ஆரம்பம் தான் அஜித் சிங்கிற்கு நடந்த சம்பவம்.

இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும்.இந்தியாவின் ஏழ்மைக்கும், நோய்களுக்கும், கல்வியின்மைக்கும், ஆங்கிலேயர்களின் ஆட்சி தான் காரணம் எனக் கூறி, இந்தியர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, 70 ஆண்டுகள் ஆகின்றன. ஆட்சியை பிடிப்பவர்கள் தான் தங்கள் வளங்களை வளர்த்துக் கொள்கின்றனர்; மக்களோ அதே நிலையில் தான் இருக்கின்றனர்.கல்வியறிவு வளர்ந்திருக்கிறது; ஆனால், வேலைவாய்ப்பு அந்த அளவிற்கு இல்லை. வேறு வழியின்றி இளைஞர்கள் சிலர், செயின் பறிப்பு போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். திருமண வயதில் பெண்களை வைத்து இருக்கும் எத்தனையோ குடும்பங்களில், 1 சவரன் தங்கம் கூட வாங்க வழி இல்லை. ஆனால், குப்பை கொட்ட தெருவுக்கு வரும் பெண் கூட, 2 சவரனில் செயின் போட்டு வந்தால், பறிப்பவர்கள் பறிக்கத் தான் செய்வர்!சமூக பிரக்ஞையுடன் தனி மனிதன் ஒவ்வொருவரும் நடக்கும் போது தான், அமைதியான சமூக சூழல் உருவாகும். எல்லா தவறுகளுக்கும், போலீஸ்காரர்கள் மீது பொறுப்பு போட்டு விட்டு, 'சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என்று சொல்வதில் நியாயமில்லை.

எப்படியும் வாழலாம், கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் ராஜா மாதிரி வாழணும்; அதற்காக எந்த தவறை செய்தாலும் நியாயமே... ஒரு வேளை போலீசில் சிக்கினாலும், அது ஒரு நாள் பத்திரிகை செய்தி; மறுநாள் மக்கள் நம்மை மறந்து விடுவர் என்ற ஒரு வித மனநோய் மனோபாவம், சமூகத்தை சூழ்ந்து வருகிறது.
அது ஆபத்தானது. அதன் விளைவு சுனாமி மாதிரி இருக்கும்; எல்லாரையும் அடித்து வீழ்த்தி தன்னுடன் இழுத்துச் செல்லும். அரக்க அலைகள் மாதிரி கண்ணுக்கு தெரியாத இந்த ஆபத்து நம்மை சூழ்ந்திருக்கிறது.'அவன் தப்பு செய்கிறான்; நல்லா இருக்கிறான். அவனுக்கு தான் எந்த தண்டனையும் கிடைக்கவில்லையே' என்ற எண்ணம், எல்லாரிடமும் பரவி வருவது சரியல்ல.அந்த விதத்தில் அஜித் சிங், லாலு மற்றும் சில அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை, சபாஷ், சரியான சவுக்கடி என்றே தோன்றுகிறது. இதுபோன்ற அதிரடிகள் தொடர வேண்டும். அப்போதுதான் ஆண்டவர்களுக்கு மட்டுமல்ல, ஆள்பவர்களுக்கும் பயம் ஏற்படும். அதன் விளைவு சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இ-மெயில்: affu16.mgmail.com

- அப்சல்
- சிந்தனையாளர், எழுத்தாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement