Advertisement

முன் பேர யூக வணிகம் - ஒரு சூதாட்டம்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான யூக வணிகத்தின் மூலம், இந்திய உணவுப் பொருட்கள் விவசாயம் வளமை அடைந்திருக்கிறதா அல்லது இந்திய விவசாயிகள் செல்வச் செழிப்பில் திளைத்திருக்கின்றனரா என்றால், இல்லைஎன்பதே கசப்பான உண்மை.முதன் முதலில், உலகளவில் 1710ல், ஜப்பான் நாட்டில், அரிசி மற்றும் பட்டு வணிகத்திற்காக முன் பேர வணிக மையம் துவங்கப்பட்டது. பின், 1848-ல், அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில், முன் பேர வணிக மையம் துவங்கப்பட்டு, 1919ல் அதில் மாற்றங்கள் செய்து இயங்கி வந்தது. நம் நாட்டில், 1947ல் பம்பாயில் சட்ட முன் வடிவு இயற்றப்பட்டது. பின், 1952ல் மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டது.
இந்தக் காலம் தொட்டு முன் பேர யூக வணிகங்கள் நடைபெற்று வந்தன. இந்த வணிகங்களால் ஏற்பட்ட நாணயமில்லாத வணிக நடைமுறைகளும், தேவையில்லாத வகையில் பொருட்களின் விலையேற்றமும் மத்திய அரசை சிந்திக்க வைத்தது.கடந்த, 1969 ஜூன் 27ல், முன் பேர வணிகத்தில், ஏழு பொருட்கள் தவிர்த்த மற்ற அனைத்து வகையான பொருள்களுக்கும், முன் பேர வணிகத் தடை விதித்து ஆணை பிறப்பித்தது.
முன் பேர வணிகத்தின் மூலம் ஆதாயம் அடைந்தவர்களின் தொடர் வற்புறுத்தலால், 1994ல் காப்ரா கமிட்டி அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்த ஆண்டுகளிலும், ஷராப் கமிட்டி, தண்ட வாலா கமிட்டி, குஷ்ரோ கமிட்டி என, பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. அவைகளின் பரிந்துரையை அடுத்து அரிசி, கோதுமை, டீ, காபி, மிளகாய் வற்றல், சர்க்கரை, வனஸ்பதி உள்ளிட்ட, 17 வகையான உணவுப் பொருள்கள் தவிர்த்து மற்ற பொருள்களின் மீதான முன் பேர வணிகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
தற்சமயம் முன் பேர வணிகம், மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த முன் பேர வணிகத்தை நடைமுறைப்படுத்த, 400க்கும் மேற்பட்ட வணிக மையங்கள் உள்ளன.குறைந்த காலத்தில், உழைப்பு எதுவுமின்றி லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற லாட்டரி சீட்டு மனப்பான்மை, மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. 2006 - -2007ம் ஆண்டில் இம்மையத்தின் விற்பனைத் தொகை, 37 லட்சம் கோடி ரூபாய். அது, ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் கோடிகளை விற்பனைத் தொகையில் அதிகப்படுத்தி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
தற்சமயம் உணவுப் பொருள்கள் மீதான முன்பேர வணிகத் தடைகள் எல்லாம் உடைத்தெறியப் பட்டுள்ளன. கோதுமை, சோளம், கடலை, பார்லி, பாஜ்ரா, கேழ்வரகு, உருளைக்கிழங்கு, ஆமணக்கு, ஆமணக்கு எண்ணெய், கடுகு, கடுகு எண்ணெய், பாமாயில், சர்க்கரை, வெல்லம், மிளகு, மஞ்சள், சீரகம், மிளகாய் வற்றல், மல்லி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், முன் பேர வணிகப் பட்டியலில் உள்ளன. மேலும் ரப்பர், இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு போன்ற பொருள்களும் உள்ளன.
ஒரு பருப்பு மில் வைத்து, கடலை பருப்பு மற்றும் பொரிகடலை தயாரிப்புத் தொழில் செய்யும் வணிகர் ஒருவர், தன் தயாரிப்புக்கு வேண்டிய மூலப் பொருளான கொண்டக் கடலையை, தரம் பார்த்து, தரத்திற்கேற்ற விலையை நிர்ணயித்து சரக்கு கொள்முதல் செய்வார்.கொள்முதல் செய்த சரக்குகளுக்கான முழு பணத்தையும் செலுத்தி சரக்குகளைப் பெறுவார். அதை மில்லுக்கு கொண்டு வந்து தயாரிப்புக்கு உட்படுத்தி, அடக்கவிலை பார்த்து, மக்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வார்.
இந்தத் தயாரிப்பின் மூலம், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு, சரக்குகளை வெளி மாநிலங்களிலிருந்து வரவழைப்பது மற்றும் தயாரித்த பொருட்களை விற்பனைக்கு அனுப்புவது போன்றவற்றிற்காக போக்குவரத்து தொழில்களுக்கு வாய்ப்பு, அரசுக்கு கிடைக்க வேண்டிய விற்பனை வரி, வருமான வரி, செஸ் கட்டணம் போன்ற வரி விகிதங்களை முறையாக கிடைக்கச் செய்தல் போன்ற நிகழ்வுகள் நடக்கும்.
இதற்கு மாறாக இன்று நடைபெறும் முன்பேர யூக வணிகத்தில், 100 சதுர அடி உள்ள குளிர்பதனம் செய்யப்பட்டுள்ள அறையில், கணினி முன் அமர்ந்து அதில் நாள்தோறும், தோன்றும் சரக்குகளின் விலை அனுமானங்களைப் பார்த்தபடி இருந்து, ஒரு நாள் ஒரு சரக்கை கொள்முதல் செய்வார்.இந்தக் கொள்முதல் செய்வதற்கு வணிகவரித்துறை உட்பட எந்த அரசுத் துறையின் பதிவிலும் அவர் இருக்க வேண்டியதில்லை. வணிகத்திற்கான லைசென்ஸ் எதுவும் தேவையில்லை. 10 லட்சம் ரூபாய் மதிப்புக்கு சரக்குகள் கொள்முதல் செய்தால், 10 லட்சம் ரூபாயும் கட்டத் தேவையில்லை.
அடுத்து வரும் நாட்களில் விலை நிலவரங்களைப் பார்த்து சரக்குகளை கணினி மூலமே விற்று விடுவார். அதன் மூலம் லாபம் அல்லது நஷ்டம் அடைவார். உண்மையில் இங்கு நடைபெற்ற இந்த வணிகத்தில் சரக்கே இருக்காது. சரக்கு பரிமாற்றம் நடக்காது.இல்லாத பொருள்கள் மீதும், ஒருவர் அவருக்கு சற்றும் துளி கூட சம்பந்தம் இல்லாத பொருள்களை வாங்குவது என்பது ஒரு சூதாட்டமாகவே இருக்க முடியும். முன் பேர யூக வணிகத்தின் விற்பனை அளவுகளை ஒப்பீடு செய்து பார்த்தால், நம் நாட்டில் உண்மையில் விளைந்த உணவு பொருட்களின் அளவிற்கும், முன் பேர வணிகத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ள பொருள்களின் அளவிற்கு சிறிதளவு கூட சம்பந்தம் இருக்காது.
இதன் மூலம் கொள்ளை லாபம் அடித்துக் கொழிப்பது ஒரு சில கும்பலே. தவிர, நாட்டினது உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களால் உண்மையில் சிறிதளவு பங்களிப்பும் கிடையாது. சேவை வரி மூலம் ரூபாய் கோடிக் கணக்கில் கிடைக்கிறது என்பதற்காக, இந்த அட்டூழியங்களை சிறிதும் கண்டு கொள்ளாமல் அரசு இருக்கிறது.விளைச்சல் முடிந்து அறுவடையின் போது, பொருளாதார வலிமை மிக்க நிறுவனங்கள் போட்டி போட்டு, விவசாயிகளுக்கு விலையை சற்று ஏற்றிக் கொடுத்து மொத்தச் சரக்குகளையும் கொள்முதல் செய்து விடுகின்றனர். யாரும் அந்தச் சரக்குகளை வாங்க வேண்டும் என்றால், அவர்கள் மூலமே மறுவிற்பனையில் வாங்க முடியும். உண்மையான உபயோகிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் இப்பொருட்களை கூடுதல் விலை கொடுத்து தான் பெற முடியும்.
பொருள்களின் உண்மையான விலைவாசி ஏற்றம், இறக்கம் என்பது பொருள்களின் தேவை மற்றும் வினியோகத்தைச் சார்ந்தது என்ற வணிகத் தத்துவத்தையே உடைத்தெறிந்து விட்டு, கொள்ளை லாபம் என்பதே குறிக்கோளாகக் கொண்டு ஒரு குறுகிய வட்டத்தினரால் வெற்றிகரமாக செயலாற்றி வர முடிகிறது.
நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரது கடும் எதிர்ப்பை தொடர்ந்து, 2007 ஜனவரியில், உளுந்து, துவரை முதலான பருப்பு வகைகளின் மீதான முன்பேரத் தடை விதிக்கப்பட்டது. 2007 பிப்ரவரியில், கோதுமை, உருளைக்கிழங்கு, ரப்பர் மற்றும் சோயா எண்ணெய் மீது தடை விதிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு எந்தவித லாபத்தையும், செழிப்பையும் அளிக்காத இந்த முன்பேர யூக வணிகத்தை உணவுப் பொருள்கள் அனைத்தின் மீதும் நீக்கம் செய்து தடை விதிக்க வேண்டும்.ஏற்கனவே இந்திய நாட்டில் அமலில் இருந்த ஏகபோக கொள்முதல் தடைச் சட்டத்தை உண்மை உணர்வோடு அமல்படுத்த வேண்டும். இவை இரண்டும் அமல் செய்யப்பட்டால், பொருள்களின் உண்மையான விலை நிலவரங்களும், தேவை மற்றும் வினியோகத்தைச் சார்ந்தது என்ற வணிக தத்துவத்திற்கேற்றபடி நிலவும், போலியான விலைவாசி ஏற்றங்கள் தவிர்க்கப்படும். சோம்பேறித்தனத்திற்கும், லாட்டரி மனப்பான்மைக்கும் வழியனுப்பு செய்யப்பட்டு, உண்மையான உழைப்புக்கு உயர்வு கிடைக்கும்; இந்தியப் பொருளாதாரமும் அதனால் வலிமையடையும்.
- பி.சுபாஷ் சந்திர போஸ் -துணைத் தலைவர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், மதுரை-இ-மெயில்: subash_p42hotmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement