Advertisement

'சதுரங்க வேட்டை'யில் வென்றது எப்படி? :இயக்குனர் வினோத்

மக்களுக்கான சினிமா எக்காலத்திலும் பேசப்படாமல் போனதில்லை. அந்த வகையில் நிகழ்காலத்தின் கண்ணாடியாக நாட்டு நடப்புகளை வெளிச்சம் போட்டு காட்டி, வெற்றிவாகை சூடியுள்ளது சதுரங்க வேட்டை. முதல்பட இயக்கத்திலே சிகரம் தொட்ட இயக்குனர்களின் வரிசையில் இப்படத்தின் இயக்குனர் வினோத் சேர்ந்துள்ளார்.
வெற்றிப்படத்தை கொடுத்த மகிழ்ச்சியில் இருந்த வினோத்திடம் ஒரு நேர்காணல்...
* லட்சியம் நிறைவேறி விட்டதாக தெரிகிறதே?
பல பேட்டிகளை நானும் படித்திருக்கிறேன். வெற்றிகளை ருசித்தவர்கள், சினிமா தான் எனது கனவு லட்சியம் என சொல்வார்கள். நான் அப்படி இல்லை. சின்ன வயதிலிருந்தே சினிமா ஆசை எனக்கு இல்லை. அது கனவாகவும், லட்சியமாகவும் இல்லை. படித்து வெளிநாட்டில் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற பெரும் சிந்தனை தான் இருந்தது. விவசாயத்தின் மீதும் கொஞ்சம் ஆர்வம் இருந்தது.

* சினிமாவுக்கு வந்தது எப்படி?வேலூர் அருகே சின்னப்பள்ளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவன் நான். அப்பா கூட்டுறவு வங்கியில் வேலை செய்கிறார். அம்மா, தங்கை என ஒரு நடுத்தர குடும்பம். கஷ்டங்கள் தெரிந்தவன். சென்னையில் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் படித்தேன். நான்கு, ஐந்து ஆண்டுகள் சில இடங்களில் வேலை பார்த்தேன். அவை பிடித்த வேலையாகவும் இல்லை. கிடைத்த வேலையை ஒழுங்காகவும் பார்த்தில்லை. அப்போது தான் மாற்று சிந்தனையாக சினிமா மீது ஒரு விருப்பம் வந்தது. வேலையை விட்டு விட்டு சினிமா பக்கம் தாவினேன்.
* சினிமாவை எங்கு கற்றீர்கள்?
முதலில் இயக்குனர் பார்த்திபனோடு சேர்ந்தாலும், ஒரு விஷயத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதை குக்கூ பட இயக்குனர் ராஜூ முருகனிடம் கற்றேன். கற்ற விஷயத்தை எப்படி படமாக்குவது என்பதை இயக்குனர் விஜய்மில்டனிடம் தெரிந்து கொண்டேன். இவர்கள் இருவர் தான் எனக்கு சினிமா கற்றுத்தந்தவர்கள்.

* சதுரங்க வேட்டையின் கதை எப்படி உருவானது?இது என்னோட கதை அல்ல. ஜனங்களின் கதை. அன்றாடம் ஏதாவது நிலைகளில் ஏமாற்றப்படும் மக்களின் நிலை குறித்து பத்திரிகைகளில் நான் படித்ததை தான் கதைக்களமாக மாற்றினேன். ஜனங்களின் கதை ஒரு போதும் பேசப்படாமல் போனது இல்லை. இந்த கதைகளை யாராலும் புறக்கணிக்கவோ, நிராகரிக்கவோ முடியாது. மக்களின் வாழ்வியல் மொழியில் கதைகளை பேசும் போது அது பலமாக இருக்கும்.
* முதல்படம் என்ற அச்சம் இருந்ததா?
இல்லாமலா இருக்கும். படம் ரிலீஸ் ஆவது வரை மனம் திக்... திக்... ன்னு தான் இருந்தது. முதலில் படத்தை பார்த்த லிங்குசாமி, மக்களின் கதை சொல்லும் இந்த படம், எல்லா இடங்களிலும் பேசப்படும் என சொல்லி தைரியப்படுத்தினார். அது போல் படம் இப்போது பேசப்படுகிறது.

* 'ரிஸ்க்' எடுத்த காட்சிகள்?படத்திலேயே வரும் ஒரு நீளமான வசனத்திற்காக 60 டேக் எடுத்தேன். அது போல் கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக தொடர்ச்சியா மூன்று இரவுகள் மொத்த யூனிட்டே தூக்கத்தை தொலைத்து. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். 'ரிஸ்க்' பின்னால் தானே 'சக்ஸ்சஸ்' இருக்கும்.
* இக் கதையும் வேறு மொழிப்படத்தின் தழுவலா?
இது நூறு சதவீதம் எனது படைப்பு. வேறு மொழிப்படங்களை நான் விரும்பி பார்ப்பது இல்லை. தமிழில் ஜி.நாகராஜனின் எழுத்துக்கள் பிடிக்கும். அதனால் எனது படைப்புகளிலும் அது போல் கதை சொல்லும் விதத்தில் ஒரு தாக்கம் இருக்கும்.
* அடுத்த படத்தை பெரிய பட்ஜெட்டில் எதிர்பாக்கலாமா?
படம் என்றாலே பெரிய பட்ஜெட்டிற்கு தான் மதிப்பு. பெரிய நட்சத்திரங்களை வைத்து நாங்கள் இயக்க விரும்பினாலும், அவர்களின் விருப்பம் வேறாக இருக்கும். அதனால் எனது இயக்கத்திற்கு ஏற்றாற்போல் அடுத்த படமும் பெரிய பட்ஜெட்டாக இருக்கும்.
* முதல் படத்தை வெற்றிப்படமாக கொடுத்த பல இயக்குனர்களை காணவில்லையே?
இந்த விஷயத்தில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது, என்பதற்காக அடுத்த படத்திற்கான பணிகளில் அதிக முனைப்புடன் செயல்படுவேன். அந்த படமும் இது போல் மக்களுக்கான விஷயங்களை பேசும் படமாகவே இருக்கும்.
* யார் ரசிகர் நீங்கள்? தமிழ் சினிமாவின் போக்கு பற்றி?
ரசிப்புத்தன்மை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுகிறது. சிறு வயதில் ரஜினி, அதன் பின் கமல், இப்போது யார் நன்றாக நடித்தாலும் அவர்களை ரசிக்கிறேன். தமிழ் சினிமா இன்று உலக சினிமாக்களுக்கு நிகராக வளர்ந்து வருகிறது. உன்னத படைப்புகள் தமிழில் உருவாகிறது. அதை நினைத்து நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படலாம்.
இவரோடு பேச..: 2222981gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement