Advertisement

தமிழகத்தின் தண்ணீர் தாகம் தணியுமா?

'நீரின்றி அமையாது உலகு' என்பது தேவவாக்கு, பல ஆண்டுகளாக, தமிழகத்தில் தண்ணீர் தேவைக்காக பல போராட்டங்கள், நீதிமன்றப் படியேற்றங்கள், அரசியல் ஆதாயத்திற்காக ருத்திராட்சப் பூனைகளாய் அறிக்கைகள் என்று, ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், யாரும் உருப்படியாக எதுவும் செய்ய வில்லை. அவ்வப்போது கண்துடைப்பு போன்று, சில திட்டங்கள், அறிவிக்கப்பட்டு கடலில் கரைத்த பெருங்காயமாக போய்விடுகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு என்றால், குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்துவர். ஆனால், குடிநீர் குழாயடியில் துணி துவைப்பர். அங்கே, எண்ணெய்க் குளியல்கூட குடும்பத்துடன் நடத்துவர். பல வீடுகளில் பல் துலக்கும் போதும், ஷேவ் செய்யும்போதும், தண்ணீர் குழாயிலிருந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதே நகர்புறத்தில், சற்று வசதிஉள்ளோர் இரண்டு சக்கர வாகனங்கள் துவங்கி, தங்கள் தகுதிக்கேற்ப கார்கள் வரை கழுவுவர். பூஞ்செடிகளுக்கு, குடிநீர் பைப்பை திருப்பிவிடுவர். நம்மூரில் சில விவசாயிகள், தங்கள் வயலின் உபரிநீரை பக்கத்துக் கொல்லையில் வடித்துவிட்டு, அவர் போட்ட உரத்தை அடித்துப் போக விடுவர்.
தேவைக்கதிகமாக தண்ணீரை கட்டுவதும், மறுநாள் அடுத்தவர் கொல்லையில் வடித்து விடுவதும் நல்ல நீர் மேலாண்மையல்ல. விவசாயிகள் புரிந்து கொள்ளும் வகையில் இதை அரசும் எடுத்துச் சொல்லி, சிக்கனமாக பாசனம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த வகையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி பக்கத்து விவசாயிகள், சொட்டுநீர் பாசனம் செய்து வருவது, ஒரு ஆரோக்கியமான துவக்கம்.

மழைநீர் சேகரிப்பு என்ற பொன்னான திட்டத்தை முதல்வர் கொண்டு வந்தார். ஆனால், நடந்தது என்னவெனில், கட்டாயத்திற்குப் பயந்து, மழைநீர் சேகரிப்பு மாதிரி செட்டப் செய்தனர். அரசு அலுவலகங்களில் பொதுப் பணித்துறையினர், அரசு பணத்தை காலி செய்தனர். ஆறு மாதங்களுக்குள், அந்த அமைப்பெல்லாம் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை.கர்நாடகம், தம் மாநிலத்தில் உள்ள பல ஏரி, குளங்களை சீர்படுத்தி அணைகளில் சேரும் தண்ணீர் முழுவதையும் கொண்டுபோய் நிரப்புவதன் மூலம், இரட்டை பயன் அடைந்துவிட்டது. நீர் ஆதாரங்களை வளப்படுத்தி, தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது. அங்கிருந்து அரிசியை தமிழகத்திற்கு விற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வளவு ஏன்? மிகவேகமாகப் பெருகி வளர்ந்து வரும் பெங்களூரு நகரம் முழுமைக்கும், காவிரி தண்ணீர் வழங்குகிறது.தமிழகத்தில், மழையே பெய்யவில்லையா என்ன? தேவைக்கதிகமாகவே மழை பெய்துள்ளது. அதனால் தானே, நாம் அந்தத் தண்ணீரையெல்லாம் சேமிக்க இடமில்லாமல், கடலுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை நாமும் மதிக்கவில்லை. நம்மையும், அது மதிக்கவில்லை.

குட்டியோண்டு நாடு இஸ்ரேலின் நீர்மேலாண்மையும், விவசாயப் புரட்சி யும் பற்றி, பலர் அறிந்திருக்கக் கூடும். தமிழகத்தின் மிக முக்கியமான நீராதாரமான வீராணம், வடக்கு தெற்காக, 17 கி.மீ., நீளமும், சில இடங்களில் 3 கி.மீ., அகலமும் கொண்ட மிகப் பரந்த இந்த ஏரி. இன்று நேற்றல்ல, 1,000 ஆண்டு களுக்கும் முன்னதாக, பராந்தக சோழனால் வெட்டப்பட்ட இந்த ஏரியில் தண்ணீர் பிடித்துவிட்டால், அங்கிருந்து சிதம்பரம் வரையிலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவிடும். 1990 வரைகூட, சிதம்பரத்தில், 20 அடிக்குள் நிலத்தடி நீர் கிடைத்தது.முப்பது ஆண்டுக்கு முன், ஏரியில், 18 அடி அளவிற்கு சேறு சேர்ந்திருப்பதாகவும், அந்த மண்ணை எங்கு கொட்டுவது என்பது தான், தூர்வாருவதில் உள்ள சிக்கல் என்றும், சொல்லப்பட்டது. வீராணம் ஏரியில் நீர்பிடிப்பு குறைந்ததாலும், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் நோக்கில், 40 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டதாலும், தற்போது, 15 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள சிதம்பரம் பகுதியில் கூட, 80 அடிக்கு, நீர்மட்டம் தாழ்ந்துவிட்டது என்பது, நிதர்சனமான உண்மை.

சரி தீர்வுதான் என்ன? அப்துல் கலாம் உள்ளிட்ட மேதைகள், காலம் காலமாக வலியுறுத்திவரும் நதிநீர் இணைப்பு தான். ஆனால், அதிலும் உடனடி சாத்தியம் நிச்சயமாக இல்லை. தமிழகத்திற்குள் என்றால், எந்த காலத்தில் நிறைவேறப் போகிறதோ, அதற்கெல்லாம் தேவையான நிதி அரசிடம் கொட்டியா கிடக்கிறது? நிதி இருந்தாலும், நிறைவேற்ற, குறைந்தது, 10 ஆண்டுகள் பிடிக்கும். அதுவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற பெயரால், கொடிபிடிக்காமல் இருக்க வேண்டும்.
வீராணம் ஏரி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய ஏரிகள், குளங்கள், அணைகள் எல்லாம் தூர்ந்து போய் உள்ளன. பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததால், மணல் சேர்ந்து, சேகரிக்கும் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து விட்டது. இந்த நீர் ஆதாரங்களை தூர் வாரினாலே, வீணாகும் பல டி.எம்.சி., தண்ணீரை சேகரிக்கலாம். இவற்றை எப்படி தூர் வாருவது?

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் மண் வெட்டும் இயந்திரம், மிகப் பழமையானது கூட போதும், ஆரம்ப காலத்தில், சிறிய இயந்திரம்தான் பயன்படுத்தப்பட்டது. அதை ஏரிக்குள் இறக்கிவிட்டு, 10 முதல், 15 அடி ஆழம் வரை, தூர் வாரிவிடலாம். முழு ஏரியையும், தூர்வார, ஒரு மாதம் போதுமானது.
இதற்கு பல நூறுகோடி ரூபாய் தேவையில்லை. ஓரிரு கோடி செலவு செய்தால் போதுமானது. வாடகை அடிப்படையிலோ அல்லது ஒரு சிறிய இயந்திரத்தை சொந்தமாகவோ, அரசு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அந்த ஒரு மாத காலம் தண்ணீர் முழுவதுமாக வடிகட்டப்பட வேண்டும்.துறைமுகத்தில், தூர் வாருவதற்காக, மண்வெட்டிக் கப்பல், என்று ஒரு சிறிய இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அது தண்ணீரில் மிதந்து கொண்டு நீரடியில் சேற்றை வெட்டி, குழாய்கள் மூலம் வெளியேற்றும். அதை மிதவை குழாய்கள் மூலமாக வெகுதூரத்திற்கு கொண்டுவந்து கொட்டிவிடலாம். அப்படி செய்யும் போது, கொட்டப்படும் சேறு அங்கேயே தங்கிவிடும். தண்ணீர் மீண்டும் ஏரிக்குள் வந்துவிடும். அதை ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.

இம்மாதிரியான முறையில் நீர் ஆதாரங்களின் ஆழத்தை, 10 அல்லது 15 அடிக்கு மேல் அதிகரித்துவிட்டால் போதும். எங்கு தோண்டப்படும் மண்ணை ஏரியின் எல்லாபுறமும் கரையில் கொட்டிவிட்டால், ஏரி பாதுகாப்பு அதிகரித்துவிடும். இன்னும் ஏரியின் குறுக்காக ஒரு பெரிய சாலை அமைத்து, செயற்கைக் குன்றுகூட
நிர்மானித்து விடலாம். சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். இன்னும் அதிகமாக மண் கிடைக்குமாயின், அதை பெரிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். தாழ்வான பகுதிகளில் நிரப்பி மட்டத்தை உயர்த்தலாம். மண்ணை விற்று, அதன் மூலம் திட்டச்செலவை ஈடுகட்டி விடலாம்.தண்ணீர் தேக்கம் காரணமாக, நிலத்தடி நீர் மேம்பாடடைந்து, சுற்று வட்டாரப் பகுதிகளில் சாகுபடிக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு நீங்கும்.தமிழகத்தில் உள்ள பல பெரிய, சிறிய ஏரிகளை தூர்வாரி, விவசாயிகளையும், குடிநீருக்கு அல்லாடும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது தான் விருப்பம், அரசு பரிசீலிக்குமா?
'இ-மெயில்':' : pasupathilingamgmail.com

- பி.எஸ்.பசுபதிலிங்கம் -
வட்டாட்சியர் (பணிநிறைவு)
சமூக ஆர்வலர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement