Advertisement

கோமுனி தோற்றுவித்த பேரூர் தென்கயிலாயநாதர் கோவில்

பேரூர்: "கோமுனி தோற்றுவித்த பேரூர் தென்கயிலாயகோவிலில், மனமுருக வழிபட்டால், துன்பங்கள் நீங்கி சிவலோகம் அடையலாம்' என்கிறது, பேரூர்ப்புராணம். கயிலாய மலையில் இருந்த சிவபெருமானை, மலர்களைத் தூவி அர்ச்சனை செய்து, மனமுருகி வணங்கினான் திருமால். அவன் முன் சிவன் தோன்றி, "நீ விரும்பியது என்னவென்று' கேட்டார். "என் உடல் உங்களது திருநடனத்தை இதுவரை காணவில்லை. ஆகையால் தங்களது நடனத்தை காட்ட அருள்புரியுங்கள்' என, பணிந்து வணங்கினார் திருமால். இதற்கு பதிலளித்த சிவபெருமான், "பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய இரு முனிவர்களும் சில புண்ணியங்களை சலிக்காமல் செய்ததால், எனது தாண்டவத்தை சிதம்பரத்தில் அவர்களுக்கு நிகழ்த்தி காட்டினேன். அதே நாடகத்தை மீண்டும் உனக்கு நடத்தி காட்டுவது, ஆதிமூலமாகிய எனக்கு முறையல்ல.

மேலைச்சிதம்பரம் (பேரூர்), முனிவர்கள் வழிபட்டு உய்யும் அரசவனம். இங்குள்ள வெண்மையான வெள்ளிமலையை விரும்பி, அதில் அழகிய கோவில் கொண்டு எழுந்தருளி விளங்குவது எமக்கென்றும் மகிழ்ச்சி மிக்கது. மேலைச்சிதம்பரத்தில், என்னோடு வாதிட்ட காளிதேவியும், தவம் செய்து இருக்கிறாள். ஆணவ மலமானது தன்னை விட்டு நீங்கி முக்தி அடைந்த காலவ முனிவனும் இத்தலத்தில் என்னை வழிபடுகிறான். இங்கு யாகம் செய்து புண்ணியம் பெற்றோர் பலர். இப்போதும் தவம் செய்வோர் எண்ணிக்கை கணக்கிலடங்காதவை. எனவே, நீ ஒரு கோமுனியாய் அத்தவத்தை அடைந்து எம்மைப் பூசித்தால், அங்கு உனக்கு என் தாண்டவத்தை காட்டுவேன், நீ அங்கு செல்க' என்றார்.

திருமாலும் இறைவனின் கட்டளையை ஏற்று, பீதாம்பரத்தை பூமியில் வீசி, ருத்ராட்சம் அணிந்து, சடைமுடி தரித்து, விபூதியை உடலெங்கும் பூசி, உணர்ச்சி பொங்க சிவன் நாமத்தை உச்சரித்தான். பின், காஞ்சிமாநதியில் நீராடி, கோவிலுக்குச் சென்று இறைவன், இறைவியை தரிசித்தான். காஞ்சியாற்றின் கரையில், அரசவனத்தை அடைந்து வணங்கினான். பிறகு, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு தென்திசையில் தென்கயிலாயம் என்ற கோவிலை நிறுவினான். அதில், எழுந்தருளிய பெருமானை, தன் கையால் தோண்டிய, சக்கர தீர்த்த நீரால் அபிஷேகம் செய்து, பூஜித்தான். பின்னர் காலவமுனிவரோடு கலந்து சிவயோகத்தில் இருந்தான்.

தென்கயிலாயம் சிவபெருமானின் திருவுருவமாக விளங்குகிறது. ஆன்மிக சான்றோர், இதை யோகமலை எனவும் கூறுவது வழக்கம். "கோமுனி பூஜித்த தென்கயிலாயத்தை, வணங்கி வந்தால் துன்பங்கள் நீங்கும். தேவர்கள் விரும்பும் சிவலோகத்தை அடையலாம்' என்கிறது, பேரூர்ப்புராணம். தென்கயிலாயக் கோவில், பேரூர் பட்டிபெருமான் கோவிலுக்கு, தென் மேற்குத் திசையில், மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. வீடுபோன்ற அமைப்பினைக் கொண்டதாக காணப்படும் கருவறையின் மேல், கோபுரம் அமைந்துள்ளது. கருவறையில் தென்கயிலாயநாதர் திருமேனியும், கருவறைக்கு அடுத்ததாக அர்த்தமண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில், தென்கயிலாயநாதருக்கெதிரே நந்தி வாகனம் அமைந்துள்ளது. கோவிலின் வடக்கு திசையில் சக்கர தீர்த்தம் என்னும் கிணறு அமைந்துள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த தீர்த்தம், தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கோவிலின் பின்பக்கத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement