Advertisement

இன்று நான்... நாளை நீங்கள்...!: விஜய கார்த்திகேயன்

வெறும் அரசுப்பணி' என்று மட்டும் நினைக்காமல், நமக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய பொறுப்பு என்ற உணர்வோடு, மக்கள் மனம் கவரும் படி நிர்வாகம் நடத்தி பெருமை பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தமிழகத்தில் ஏராளம். மாவட்டங்களில் நேர்மையாக நிர்வாகம் நடத்தி, மக்களுக்கு சேவை செய்த கலெக்டர்களை, பணிமாறிச் சென்றாலும் கொண்டாடி போற்றும் நன்றியுணர்வு நமக்கு உண்டு. அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர், கோவில்பட்டி மக்கள் பாசத்துடன் விரும்பும், இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சப்-கலெக்டர் விஜயகார்த்திகேயன்.
பள்ளிபடிப்பு சொந்த ஊர் மதுரையில். சென்னையில் எம்.பி.பி.எஸ்., முடித்தவுடன், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதினார். 2011ல் 25 வயதில் அகில இந்திய அளவில் 22ம் 'ரேங்க்' பெற்று தேர்ச்சி பெற்றார்.
சப்-கலெக்டர் ஆனதும் பட்டா கேட்டு காலம் காலமாய் அலைந்தவர்களுக்கு, ஒரு மணி நேரத்தில் வழங்கி சாதனை படைத்தார். பள்ளிகளில் புகார் பெட்டி வைத்து, அதில் மாணவர்கள்
குறிப்பிடும் பொதுப்பிரச்னைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தார். இளைய சமூகத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டு குப்பை அகற்றுதல், பசுமை காத்தல் என்று இவரது சமூகசேவை கோவில்பட்டியில் தொடர்கிறது.

விஜயகார்த்திகேயனுடன் ஒருநேர்காணல்...ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்று எப்போது முடிவெடுத்தீர்கள்?
நான்காம் வகுப்பு படிக்கும் போதே, இதுவே எனது லட்சியம் என்று முடிவு செய்தேன். எனது தந்தை கண்ணன் 1986 பேட்ச் ஐ.எப்.எஸ்., அதிகாரி. தற்போது வனத்துறை உயரதிகாரி. அவர் தான் எனக்கு தூண்டுதல். ஐந்து லட்சம் பேர் எழுதும் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி நழுவி விட்டாலும், 'பாதுகாப்பிற்காக' எம்.பி.பி.எஸ்., படித்தேன். இத்தேர்வை வென்ற ஆறாவது மாதத்தில், ஐ.ஏ.எஸ்., எழுதினேன். முதல் முயற்சி தோல்வி. அம்மா ஆறுதல் கூறினார். 'இதுவரை படிப்பில் பெரிய சாதனைகள் படைக்காவிட்டாலும், எந்த பாடத்திலும் தோற்றது இல்லை. இது முதல் மற்றும் கடைசி தோல்வி. அடுத்த ஆண்டில் ஐ.ஏ.எஸ்., தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவேன்' என்று அம்மாவிடம் கூறிவிட்டு, மறுநாள் முதல் படிக்க துவங்கினேன். வென்றேன். வெற்றிக்கு, தோல்வியை இரையாக போடுங்கள்' -இதுவே இளைஞர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள்.

இலவச பயிற்சி:என்னைப்போல் பிறரும் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பதற்காக, கோவில்பட்டியில் இருநூறு பேருக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறேன். என்னுடன் இணைந்து, பொறியியல் கல்லூரி கவுரவ ஆசிரியையான என் மனைவி மற்றும்தொண்டுள்ளம் மிக்க சிலர் பயிற்சி அளிக்கின்றனர். இங்கு பயிற்சி பெற்ற 55 பேர் இந்தாண்டு தேர்வு எழுதுகின்றனர். இளைஞர்கள் மனதில் ஐ.ஏ.எஸ்., முயற்சிக்கு உயிரூட்டும் விதத்தில் 'எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்.,' என்ற புத்தகம் எழுதி, அண்மையில், என் அம்மா கையால் வெளியிட்டேன்.
மருத்துவம் படித்து விட்டு இந்த பணிக்கு வந்ததை எப்படி உணர்கிறீர்கள்?
மருத்துவரானால் அந்த துறையில் மட்டும் சாதிக்க முடியும். ஆனால் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆனால் மருத்துவம், கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல் என எல்லா துறையிலும் பணிபுரியலாம்.
சப்-கலெக்டர் என்ற பணியின் மூலம், 620 பேருக்கு ஒரு மணி நேரத்தில் பட்டா வழங்கினேன். அலுவலகங்களுக்கு அலைந்த மக்கள் முகத்தில் கண்ட அந்த மகிழ்ச்சி மிகப்பெரிய மனதிருப்தி. சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், என்னை போனில் அழைத்து பாராட்டியது நெகிழ்ச்சி தருகிறது.
இனி, வீடு தேடி பட்டா தருவதற்கு முயற்சி செய்து வருகிறேன்.

தாமதம் போக்க நடவடிக்கை:பள்ளிகளில் வைத்துள்ள புகார் பெட்டிகள் மூலம், சமூகத்தில் நடப்பதை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதில் 'பஸ் ரூட்' கேட்டு மாணவர்கள் புகார் அளிக்கின்றனர். 'அரசு இயந்திரம் மெதுவாக நடக்கும். அன்பளிப்பு தந்தால் தான் எதுவும் நடக்கும்' என்ற மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். வெளிப்படையான, வேகமான நிர்வாகத்தை தந்து அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடைய முயற்சி செய்வேன். அலுவலகத்திற்கு வரும் தபால்களை, கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யும் அரசின் திட்டத்தை கோவில்பட்டியில் என் அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளேன். இதனால், எந்த பிரிவில் தாமதம் ஆகிறது, தற்போது பைல் எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு உங்கள் அறிவுரை?
முயற்சியும் பயிற்சியும் முக்கியம். மாதிரித்தேர்வுகளை வீட்டில் எழுதிப்பாருங்கள். என் சிறு வயது முதலே, வீட்டில் குட்டி குட்டி தேர்வு எழுதிப்பார்ப்பது வழக்கம். படித்து முடித்து விட்டு அதே பாடத்தை தேர்வாக எழுதி, அம்மாவை என் தேர்வுத்தாளை திருத்தச்சொல்லி 'குட்'வாங்குவதில் அப்படி ஒரு சந்தோஷம். வெற்றி, தோல்வியை ஒரே மாதிரி பார்க்கும் மனப் பக்குவத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இறுதி முடிவு பற்றி யோசிக்காமல், நாள்தோறும் முயற்சிகளால் முன்னேறுங்கள். தேர்வுக் காலத்தை மகிழ்ச்சி காலமாக கருதுங்கள். இன்று நான்... நாளை நீங்கள்!தொடர்புக்கு: kvijai007@yahoo.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement