Advertisement

மருத்துவமும் நுகர்வோரும் குளறுபடிகளும்

மருத்துவம் - புனிதமான, 'சேவை' என்பது மறைந்து, புனிதமான, 'தொழில்' என்றாகி, அப்போது கூட தன் பெருமையை இழக்காமல் பெரிதும் மதிக்கப்பட்டும், போற்றப்பட்டும் வந்திருக்கிறது.ஆனால், மருத்துவத்துறை, இப்போது தன் புனிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, ஓர் சாதாரணமான தொழில் அல்லது அதற்கும் கீழானது என்ற அவலநிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறதோ என்ற பலத்த சந்தேகம், சமீபகாலங்களில் நடந்துள்ள சில நிகழ்வுகள் தோற்றுவிக்கின்றன.

மருத்துவர்கள், நோயாளிகளின் மீதும், நோயாளிகள், மருத்துவர்கள் மீதும் பழி சுமத்திக் கொண்டேயிருப்பது ஒரு ஆரோக்கியமான சூழல் அல்ல. தவறு யார் மீது என்கிற கேள்விக்கு, இருபக்கமுமே தவறுகள் மலிந்து விட்டன என்பதைத்தான் பதிலாகக் கொள்ள முடியும்.'சுகாதாரத்தை சீராக்குவதும், அதை பேணுவதும், அரசுக்கும் மக்களுக்கும் அதிக செலவு வைக்காத வழிமுறைகள் உள்ளன; ஆனால், அதை யாரும் ஊக்குவிப்பதில்லை' என்று மூத்த மருத்துவரும், முற்போக்கு சிந்தனையாளரும், எழுத்தாளருமான, டாக்டர் பி.எம்.ஹெக்டே, மனம் நொந்து எழுதியிருக்கிறார்.நம் நாட்டைப் பொறுத்தவரை, மருத்துவம் என்பது அடிப்படையிலேயே நம்பிக்கை சார்ந்ததாகவே இருந்து வந்திருக்கிறது. அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று, ஏதோ ஒரு மருத்துவ முறை மீது நம்பிக்கை வைத்து, அதை தேர்ந்தெடுத்து, மக்கள் சிகிச்சை மேற்கொள்கின்றனர். அதுபோலவே தாங்கள் தேர்ந்தெடுத்த மருத்துவர் மீதும் நம்பிக்கை வைத்து தான் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.

இந்த நம்பிக்கை, ஏதோ ஒரு வகையில் தகர்ந்து விடும் போது தான், மருத்துவ முறையை அல்லது மருத்துவரை மாற்றுகின்றனர். ஒரு சிலர், ஒருபடி மேலே போய் மருத்துவர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றனர்.மருத்துவர்கள் மீது குற்றம் சுமத்துவது மட்டுமன்றி, வன்மம் கொண்டவர்களாகவும் மாறியிருக்கின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக முன்வைக்கப்படுபவை, சரியான தகவல் பரிமாற்றம் இல்லாமை, அவநம்பிக்கை என்ற இரண்டு மட்டுமே.பெரும்பாலான சமயங்களில் மருத்து வரின் அணுகுமுறையும், சரியான தகவல் பரிமாற்றங்களும், பல பிரச்னை களை தவிர்க்கும். நோயாளியின் நிலைமை குறித்த உண்மையான தகவல்களை அவ்வப்போது, நெருங்கிய உறவினர்களை அழைத்து தெரிவித்து, அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த தேவையான தகவல்களையும் தருவது, அவநம்பிக்கை எழாமல் தவிர்க்கும்.மருத்துவரின் நிலைப்பாடு என்ன என்பதை யாரும் அனுமானிக்க இயலாது. அது, அவருக்கும், நோயாளிக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், பெரும்பான்மையான டாக்டர்கள் இன்று போல் ஸ்பெஷலிஸ்ட்களாக இருந்ததில்லை. ஆனால் நோயறியும், திறமையும் பரவலான தேவையான ஆழ்ந்த மருத்துவ அறிவும் ஞானமும் கொண்டவர்களாகவே இருந்தனர். அவர்களில் பலர், 'குடும்ப மருத்துவர்' என்ற பெயரில், மிகவும் புகழ் பெற்றவர்களாகவே விளங்கினர். தங்கள் நோயாளிகளின் குடும்ப சூழல் பற்றிய எல்லா விவரங்களையும் மனதில் கொண்டு, அவர் தம் குடும்பங்களுக்கு, 'ஆலோசகர்' என்ற அளவில் மதிப்பிற்குரியவர்களாகவே போற்றப்பட்டனர்.இந்த குடும்ப மருத்துவர் முறை வேரூன்றி இருந்த காலங்களில், மருத்துவர் மீது அவநம்பிக்கை என்பதே இல்லாமல் இருந்தது. எந்த வழக்குகளும் இருந்ததில்லை.
*நோயாளிகள், தங்களுக்கு இன்ன நோய் என்று தாங்களாகவே தீர்மானித்து, அதற்குரிய ஸ்பெஷலிஸ்ட்களை போய் பார்க்கின்றனர். பல காரணங்களால் இந்த செய்கையில் எந்தவித நன்மையும் இல்லை. ஏனென்றால், நோய் அறிகுறிகளை வைத்து அது என்ன நோய் என்றும், எந்த ஸ்பெஷலிஸ்ட்டை பார்க்க வேண்டும் என்பதைக் கூட, ஒரு டாக்டர் மட்டும் தான் அறியவும், தீர்மானிக்கவும் முடியும்.
*மேலும் சிலர், வலைதளங்களில், தங்கள் அறிகுறிகள் அல்லது நோய் குறித்து அலசி, அரைகுறையாக அறிந்து, இந்த நோய்க்கு இந்த சிகிச்சை தான் சிறந்தது என்று தாங்களே முடிவு செய்து, ஸ்பெஷலிஸ்ட்களை அணுகி சிகிச்சை பெற முயல்வர்.
*வலைதளங்களில் இருக்கும் மருத்துவத் தகவல்களை, ஒரு மருத்துவரால் மட்டுமே புரிந்து கொண்டு தேவையானவற்றை மட்டும் கிரகித்துக் கொள்ள முடியும். மற்றவர்களுக்கு அவை தேவையில்லாத மனக்குழப்பங்களையும், பீதியை யும், கவலையையும் ஏற்படுத்தி, மன நோயாளிகளாக மாற்றும்.
*பலர் ஸ்கேன் எடுத்துக் கொள்வதையே ஒரு பெருமையாகக்கூட கூறிக் கொள்வதுண்டு. தேவையின்றி, மருத்துவர் பரிந்துரைத்தாலன்றி, ஸ்கேன் எடுத்துக் கொள்வதே தவறு தான். ஸ்கேன் எடுப்பதன் மூலம், தேவையற்ற கதிர் வீச்சுக்கு ஆளாக நேரிடும் என்பதையும், இவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
*'விலையுயர்ந்த மருந்து என்றால் வீரியம்மிக்க நல்ல மருந்து' -என்ற கருத்து முற்றிலும் தவறு. சில வருடங்களுக்கு முன், சிக்-குன்-குனியா நோய் தமிழகத்தை சூறாவளியாக தாக்கிய போது, 'டைக்ளோபெனாக்' என்ற மிக
வீரியமிக்க, பக்கவிளைவுகள் அதிகம் கொண்ட, ஆனால், மிக மலிவான மருந்து, சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்து, உயிரிழக்க காரணமாக இருந்தது.
*குறைந்த அளவு பரிசோதனைகள், குறைந்த அளவு மருந்துகள் எழுதித் தருகிற மருத்துவரை மக்கள், 'இவருக்கு ஒன்றும் தெரியாது' என்று தரம் தாழ்த்தி பார்ப்பதும் உண்டு.
*நோய் அறிகுறிகளை கவனமாக கேட்டு, பொறுமையாக பரிசோதித்து, 'உனக்கு கவலைப்படும் படியான உடல் கோளாறுகள் ஒன்றும் இல்லை' என்று சொல்கிற மருத்துவரை, 'அவருக்கு ஒன்றும் தெரியாது' என்று கூறி, வேறு மருத்துவரைப் பார்க்கும் நோயாளிகள் ஏராளம்.
குடும்ப மருத்துவர் பரிசோதித்து, அவர் பரிந்துரைத்தாலன்றி நோயாளி கள், ஸ்பெஷலிஸ்ட்களை அணுகுவது நல்லதல்ல. குடும்ப மருத்துவர் கண்காணிப்பிலேயே சிகிச்சை நடைபெறுவதால் சந்தேகங்கள் நிவர்த்தியாகும். மருத்துவர்கள் மீது அவ
நம்பிக்கை கொள்ளும் வாய்ப்புகளும் குறைவு.

நம் நாட்டில் அரசு மருத்துவமனைகளைத் தவிர, மற்ற எல்லா இடங்களிலும், ஒவ்வொரு நோயாளியும், தன் நம்பிக்கைக்குரிய மருத்துவரை தேர்ந்தெடுத்து, அவரிடம் சிகிச்சை பெறலாம் என்ற சுதந்திரம் உள்ளது.அனுபவமிக்க ஒரு மருத்துவருக்கு, ஒரு நோயாளியின் அறிகுறிகளை கேட்டு, கண்டு, பின் அவரை கவன மாக பரிசோதித்தும் அவருடைய நோய் இன்னதென்று சுலபமாக கண்டுபிடிக்க இயலும். அதை உறுதிசெய்ய ஒரு சில பரிசோதனைகள் மட்டுமே தேவை.ஆனால், இன்றைய நுகர்வோர் கலாசாரத்தின் காரணமாக எல்லா மருத்துவர்களும், தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும், சந்தேகப்படுபவர்களை திருப்திப்படுத்தவும், சற்று மிகையான பரிசோதனைகளை பரிந்துரைப்பது தவிர்க்க முடியாமல் நேர்கிறது.எவ்வாறாயினும், மருத்துவ சேவை குறித்த கண்ணோட்டம், மனோபாவம், மற்றும் நிலைப்பாட்டில் எல்லாரிடமும் - விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழவேண்டும். அதனால், மருத்துவம் அதே உன்னதமான, புனிதமான பெருமையை பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
ahanathapillaigmail.com

- டாக்டர் எஸ்.ஏகநாத பிள்ளை -
முன்னாள் மருத்துவ
கல்லுாரி பேராசிரியர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement