Advertisement

ராகிங்; மாணவர் மனம் மாறுமா?

மருத்துவம் படிக்க சென்ற மகள் வருவாள்... வயதான காலத்தில் தங்களுக்கு மட்டுமின்றி தரணிக்கும் மருத்துவ சேவை தருவாள்... என எதிர்பார்த்த அந்த பெற்றோருக்கு பேரிடியாக மகள் தற்கொலை செய்த தகவல் கிடைத்தது.

சென்னையில் ஒரு மருத்துவக் கல்லுாரியில் பயின்ற முதலாம் ஆண்டு மாணவி யோகலட்சுமியின் தற்கொலை தான், பெற்றோருக்கு பேரிடியாக அமைந்தது. சீனியர் மாணவர்களின் 'ராகிங்' கொடுமை தாங்காமல் மனமுடைந்து, தங்கியிருந்த விடுதியில் யோகலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். எதிர்கால கனவுகளுடன் கல்லுாரியில் காலுான்றிய அந்த மாணவி, சிலரது அற்ப ஆசைக்காக மறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தொடரும் கொடுமை:ஆண்டுதோறும் மாநிலத்தில் எங்காவது ஒரு கல்லுாரியில் ராகிங் கொடுமையால் மாணவர் அல்லது மாணவியர் தற்கொலை செய்வது தொடர் கதையாகிறது. தென் மாவட்ட மருத்துவ கல்லுாரி ஒன்றில், கடந்தாண்டு முதலாம் ஆண்டு படிக்க ஆர்வமாக சென்ற மாணவர், ஓரிரு நாட்களில் சொல்லாமல் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். விவரம் தெரியாத பெற்றோர் விசாரித்த போது தான், மாணவர் ராகிங் கொடுமைக்கு ஆளானது தெரிந்தது. டீன் வரை அந்த தகவலை கொண்டு சென்று, தகுந்த நடவடிக்கை எடுத்த பின்னரே அந்த மாணவர் படிப்பை தொடர்ந்தார். மருத்துவ, பொறியியல் கல்லுாரிகளில் இக்கொடுமை அதிகம்.

தமிழகம் முன்னோடி:கல்வி நிலையங்கள், விடுதிகளில் மூத்த மாணவர்கள், இளம் மாணவர்களை ராகிங் செய்தல், இந்த நவீன தகவல் தொழில்நுட்ப காலத்திலும் தொடர்வது பெற்றோரை வேதனைக்கு உள்ளாக்கிறது. ராகிங்கை ஒழிப்பதில் நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதும், அதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து சட்டம் இயற்றியதிலும் தமிழகம் தான் முன்னோடி மாநிலம்.

ராகிங் தடை சட்டம்:1996 ல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை விடுதியில் முதலாமாண்டு மாணவர் நாவரசு, மூத்த மாணவர் ஜான் டேவிட்டால் கொலை செய்யப்பட்டு, உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, வீசப்பட்ட சம்பவம் ராகிங் பெயரால் நடக்கும் வக்கிர செயல்களை ெவளிப்படுத்தியது. மக்களிடம் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, தமிழக அரசு 1997ல் ராகிங் செய்தல் தடை சட்டத்தை இயற்றியது.

சட்டம் சொல்வது என்ன?:இச்சட்டம் கல்வி நிறுவனங்களில் ஒரு மாணவரை உடலால், மனதால் துன்புறுத்துதல், கேலி செய்தல், அவமானப்படுத்துதல், தொந்தரவு செய்தல் போன்றவைகளை குற்றம் என்கிறது. இச்செயலில் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கல்வி நிறுவனங்களிலிருந்து தண்டனைக்குள்ளான மாணவரை நீக்க முடியும். தமிழகத்தில் இந்த முன்னோடி சட்டம் இயற்றப்பட்டாலும், தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படாத நிலையிருந்தது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு:2001ல் உ.பி., மாநிலம் டாக்டர் ராஜேந்திரபிரசாத் மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர் அமான் காச்ரூ மூத்த மாணவர்களால் போதையில் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு, இறந்த சம்பவம், நாடு முழுவதும் ராகிங் ஒழிய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. 2001ல் விஸ்வ ஜாத்ரிதி மிஷன் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர, ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற சி.பி.ஐ., இயக்குனர் ராகவன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இடைக்கால உத்தரவாக கல்வி நிறுவனங்கள், ராகிங் குறித்து போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் கொடுக்கவும், 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டது.

பல்கலை மானிய குழு பரிந்துரை:பின் ராகவன் கமிட்டி கொடுத்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்ற சுப்ரீம் கோர்ட், பல்கலை மானியக்குழு ஒழுங்குமுறை விதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டது. 2009 ஆண்டு பல்கலை மானியக்குழு உத்தரவின்படி, கல்லுாரியில் சேரும் மாணவர், பெற்றோர் 'ராகிங்கில்' ஈடுபட மாட்டேன் என எழுதி கொடுக்க வேண்டும் என பல நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியது. இவ்வளவு நடவடிக்கைகளுக்கும் பிறகும் யோகலட்சுமி போன்ற மாணவியர் இறப்பது இச்சட்டம் குறித்த முழுமையான விழிப்புணர்வு ஏற்படாததை காட்டுகிறது.சட்டம் சரியாக அமல்படுத்தப்படவில்லை எனில் தன்னிச்சையாக நீர்த்து விடும். மாணவர்கள் ராகிங் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என உணர வேண்டும்.

நடிகர்களும் தப்பவில்லை:1960ல் கல்லுாரி படிப்பை முடித்த இந்தி நடிகர் அமிதாப்பச்சன், தான் கல்லுாரி காலங்களில் ராகிங் கொடுமைக்குள்ளானதாக ஒரு முறை வேதனை தெரிவித்தார். கிரிக்கெட் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா, லக்னோவில் தனக்கு விளையாட்டு விடுதியில் ஏற்பட்ட ராகிங் கொடுமையால், ஆறு மாதங்கள் விடுதிக்கு சொல்லாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

தேவை மனமாற்றமே:ராகிங் ஒரு சமூக அவலம் என மாணவர்கள் உணர வேண்டும். தனக்கு இழைக்கப்பட்ட தவறு, பிறருக்கும் இழைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை மாற வேண்டும். புதிய மாணவர்களை நண்பர்களாக, சகோதரர்களாக ஏற்கும் மனப் பக்குவத்தை மூத்த மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். தன்னை போல, புதிய மாணவரை, அவரது பெற்றோரும் கனவுகளுடன் அனுப்பி வைத்திருப்பர் என உணர வேண்டும். கல்வி நிறுவனங்களும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் வகையில், நிகழ்வுகளை நடத்த வேண்டும். எத்தனை சட்டங்கள் போட்டாலும், மனமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் ராகிங் கொடுமை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும்.

-ஆர்.காந்தி, ஐகோர்ட் கிளை வக்கீல்,மதுரை. 98421 55509.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement