Advertisement

தேர்தல் முடிவும் - ஆரம்பமும்...

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி எல்லாரும் எதிர்பார்த்தது தான். ஆனால், தமிழகத்தில் தனித்து நின்று, 39 தொகுதிகளில் போட்டியிட்டதில், 37 தொகுதிகளில் அ.தி.மு.க., வென்றது தான் மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வியப்பை தந்தது.

ஒட்டுமொத்த இந்தியாவே அன்று, தமிழகத்தை திரும்பிப் பார்த்தது. ஒரு வேளை இந்த முடிவுகள், கருணாநிதி முன்பே தெரிந்திருக்கலாம். அதனால் தான் அவர் தன் தேர்தல் பிரசாரத்தில், 'இந்தியாவெங்கும் மோடி அலை வீசுவதாக சொல்கின்றனர். ஆனால், தமிழகத்தில் திராவிட அலைக்கு எதிராக எந்த அலையாலும்
தாக்குப் பிடிக்க முடியாது...' என்று சொன்னாரோ என்னவோ! திராவிட இயக்கமான அ.தி.மு.க., மோடி அலைக்கு எதிராக தாக்குப்பிடித்து, வலை போட்டு அத்தனை சமூக மக்களின் ஓட்டுகளையும், இலைக்கு ஆதரவாக குவித்துக் கொண்டது. இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக, பா.ஜ., காங்கிரசுக்கு அடுத்ததாக, இன்று அ.தி.மு.க., இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நூற்றாண்டு பாரம்பரியமிக்க தேசிய கட்சியான காங்கிரசே, அகில இந்திய அளவில், 44 இடங்களில் ஜெயித்த போது நாற்பதாண்டு கால கட்சியான அ.தி.மு.க., 37 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை.

அ.தி.மு.க.,விற்கு எதிராக போட்டியிட்ட தி.மு.க.,வும், பா.ஜ.,வும் வலுவான கூட்டணியை அமைத்தன. தி.மு.க., தலித் மற்றும் முஸ்லிம் அமைப்புகளை கூட சேர்த்துக் கொண்டது. அதனால் அந்த சமூக மக்களின் ஓட்டுகள் மொத்தமாக தங்களுக்கு கிடைக்கும் என்று கணக்கு போட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. தலைவர்கள் தான் தி.மு.க., கூட்டணியில் இருந்தனர்; மக்களோ அ.தி.மு.க.,விற்கு பின்னால் அணி திரண்டு நின்றனர்.குறிப்பாக, இஸ்லாமிய சமூக வாக்காளர்கள் அதிகமாக இருக்கும் வேலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, ராமநாதபுரம், அரக்கோணம் போன்ற தொகுதிகளில், முஸ்லிம்கள் முழுக்க முழுக்க அ.தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துள்ளனர்.

அதே போல் தலித் வாக்காளர்கள் நிறைந்திருக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, சிதம்பரம், தென்காசி ஆகிய இடங்களில், தி.மு.க., ஆதரவுடன் போட்டியிட்ட, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிகளை வீழ்த்தி, அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. ஒரு சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் சொல்வதை, அந்த சமுதாய மக்கள் ஏற்பதில்லை. அப்படி இருக்கும்போது, சில தலைவர்கள், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பின்னால் இருப்பதை போல காட்டிக் கொள்வதும், 'அண்ணன் அழைக்கிறார்...' என்று போஸ்டர் அடித்துக் கொள்வதும் வேடிக்கையாக இருக்கிறது.ஜாதி, மத, மொழி பேதத்தை காட்டி, மக்களை பிளவுபடுத்தலோ, அதை வைத்து அரசியல் ஆதாயம் அடையவோ இனி முடியாது என்பதை, தமிழக தேர்தல் முடிவுகள் மட்டும் அல்ல, தேசிய அளவுக்கு வெளிவந்திருக்கும் முடிவுகளும் பறை சாற்றுகிறது.

இத்தனை ஜாதி, மதத்தை பின்பற்றுகிறவர்கள், பல மொழி பேசுபவர்களாக இருந்தும், 'இந்தியர்' எனும் அடையாளத்தையே, ஒவ்வொருவரும் பெருமையாக கருதுகின்றனர்.அதனால் தான் அரசியல்வாதிகள் ஜாதி, மதம் மொழியை வைத்து அரசியல் செய்தோர், இந்த தேர்தலில் துரத்தி அடிக்கப்பட்டு விட்டனர். 'வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை' என்று சொன்ன பா.ம.க., தர்மபுரியில் மட்டுமே ஜெயித்திருக்கிறது. வன்னியர்கள் மிக அதிகமாக இருக்கும் மற்ற தொகுதிகளில், ஏறக்குறைய, 80 சதவீதம் ஓட்டுபதிவு நடந்தும் அது, அ.தி.மு.க.,விற்கே சாதகமாக இருந்திருக்கிறது.

இந்த நிலைமை இங்கே மட்டுமே என்றில்லை... ஜாதி, மதம், மொழி அரசியலை முன்னெடுத்த சமாஜ்வாதி கட்சி, பி.எஸ்.பி., ஜாட் சமூக ஓட்டுகளை நம்பும் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தள கட்சி என்று, அனைவரும் தங்கள் ஓட்டு வங்கியாக கருதும் தலித், யாதவர், ஜாட் மற்றும் இஸ்லாமிய சமூக ஓட்டுகளை இழந்திருக்கின்றனர்.முஸ்லிம் வாக்காளர்கள் மூன்றரை லட்சம் பேர் இருக்கும் வாரணாசியில், மோடி பெரிய வெற்றி பெற்றிருப்பது, முஸ்லிம்களின் ஓட்டுகளால் தான் என்பதும் தெரிய வருகிறது. மோடி பெற்றிருக்கும் மகத்தான வெற்றியை பார்க்கும் போது, அவர் எல்லா சமூகத்தாலும், பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றுபவர்களாலும் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

இந்த லோக்சபா தேர்தல் முடிவுகளில் எல்லாரையும் மிரள வைத்த இரண்டாவது விஷயம். 'நோட்டா'வுக்கு இந்தியாவெங்கும், 60லட்சம் பேர் ஓட்டளித்தது தான். 'எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை; எந்த கட்சியும் சம்மதமில்லை என்றால், நோட்டா பொத்தானை அழுத்தலாம்' என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதற்கு இவ்வளவு பேர் ஆதரவு கொடுத்திருப்பது தான், வியப்பான விஷயம். மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்களால், உண்மையான மாற்றத்தை சமூகத்தில் கொண்டு வர முடியவில்லை என்று, அவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கலாம்.

இனி வரப்போகிற தேர்தல்களில், நோட்டாவிற்கு மேலும் ஆதரவு கூடலாம். அதற்குள் அரசியல்வாதிகள் மாற வேண்டும். கட்சியின் நலம், தனி நபர் வளம், சித்தாந்தங்களின் மேல் நம்பிக்கை, இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். மக்களின் வளர்ச்சியே, சமூக ஒற்றுமையே தாரக மந்திரம் என்று அரசியல்வாதிகள் மாற வேண்டிய அவசியத்தையே நோட்டா காட்டுகிறது.பா.ஜ., மதவாத கட்சி என்று தேர்தல் பிரசாரத்தில் பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. அது பொய் என்று நிரூபிக்கும் பொறுப்பு, தற்சமயம் அந்த கட்சிக்கு கிடைத்திருக்கிறது. காரணம், பா.ஜ.,வுக்கு ஓட்டுபோடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட மதத்திற்காகவோ, கடவுளுக்காகவோ ஓட்டு போடவில்லை. பத்தாண்டுகளாக செய்யப்படாமல் முடங்கிக் கிடந்த காங்., ஆட்சிக்கு எதிராக, மக்கள் மவுனத்தின் அலறல் தான் இந்த தேர்தல் முடிவுகள்.

விலைவாசி உயர்வு, பெட்ரோல், 'காஸ்' விலை உயர்வு, சரியான சாலை வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலை, குறைந்த செலவில் நல்ல மருத்துவம் கிடைக்காத நிலை... கல்வி வியாபாரமாகிவிட்ட சூழல், மின்சாரம், தண்ணீர் வசதியில்லாத காலம், பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியானது ஆகியவையே, மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகள்.இதற்கு தீர்வு கேட்டு தான், மக்கள் புதிய ஆட்சிக்கு மத்தியில் வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். காங்., தோல்வியே, பா.ஜ.,வுக்கு வெற்றியை தந்திருக்கிறது. காங்.,க்கு மாற்றாக தேசிய அளவில் வேறு வலுவான கட்சிகள் இல்லாததால், அது பா.ஜ.,வுக்கு சாதகமாக இருந்திருக்கிறது.

பா.ஜ.,வின் சித்தாந்தங்களில் இந்துத்வா இருக்கலாம். ஆனால், அதற்கு ஓட்டுப் போட்டவர்கள் விசால மனம் படைத்த இந்தியர்கள். பரஸ்பரம் அமைதியையும் ஒன்றிணைந்த வளர்ச்சியை தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். தேர்தலில் வெற்றி என்பது தற்காலிகமானது. ஆனால், மக்களின் மனதை புரிந்து கொள்வது தான், நிரந்தரமான வெற்றியாக மாறும். வெற்றி பெற்றவர்கள் முன்பு இருக்கும் மிகப் பெரிய சவால் இதுதான்.
இ-மெயில்: affu16.mgmail.com

- அப்சல் -
சமூக சிந்தனையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement