Advertisement

நான் சுமந்த 'மஞ்சப்பை':மனம் திறக்கும் மதுரை இயக்குனர் ராகவன்

பாசம் மறைந்து ஆபாசம் குடியேறிய தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் எப்போதாவது வருவதுண்டு. அப்படி சமீபத்தில் வந்து வசூலில் சக்கை போடு போடும் படம் 'மஞ்சப்பை'.

தாத்தா-பேரன் உறவை உணர்வுபூர்வமாக காட்டியிருக்கும் அந்த படத்தின் இயக்குனர் மதுரையை சேர்ந்த ராகவன். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரையின் வீதிகளில் சினிமா கனவுகளுடன் வலம் வந்தவர். கீஷ்டு கானம் ஆடியோ சென்டரில் பணியாற்றியவர்.


முதல் படமே 'ஹிட்' ஆன மகிழ்ச்சியை தன் சொந்தஊரில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வந்த ராகவனுக்கு, தான் வேலை செய்த கடையில் தனது படத்தின் ஆடியோ 'சிடி'கள் அடுக்கி வைத்திருந்ததை கண்டு நெகிழ்ச்சி. அந்த தருணத்தில் அவருடன் இதோ நாம்....

*சொல்லுங்க... உங்களின் சினிமா ஆசை...என் அப்பா பழைய நடனா கம்பிளக்ஸ் தியேட்டரில் வேலை பார்த்தார். காலையில் ராஜாதி ராஜா, மாலையில் எங்க ஊரு பாட்டுக்காரன், இரவு எண்டர் தி டிராகன் என நாள் ஒன்றுக்கு மூன்று படம் பார்ப்பேன். அது தான் முதல் விதை. அதன் பின் கீஷ்டுகானத்தில் வேலைக்கு சேர்ந்து நான் விற்ற 'சிடி'கள் என்னை சென்னை செல்ல தூண்டியது.


*வரவேற்றதா சென்னை?


எடிட்டிங் வாய்ப்பு தேடிய என் தம்பி தேவா உடன் நானும் சுற்றினேன். ராஜா முகமது சாரிடம் என் தம்பிக்கு வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் சற்குணத்தின் களவாணி படத்தில் என் தம்பி தான் எடிட்டர். அதன் இணை இயக்குனர் முருகதாஸ் உதவியில் களவாணி, வாகை சூடவா படங்களில் உதவி இயக்குனர் ஆனேன்.


*'மஞ்சப்பை' திறந்தது எப்படி?வாகைசூடவா 'ரிவியூ' பார்ப்பதற்கு நானும், முருகதாசும் சென்றிருந்தோம். அப்போது அவரிடம் ஒரு கதையின் 10 காட்சிகளை கூறினேன். விழுந்து சிரித்த அவர் 'ராகவன் நல்ல கதை வெச்சிருக்கான்...' என அனைவரிடமும் கூறிவிட்டார். அவர்கள் எனக்கு போன் செய்து 'என்னப்பா நல்ல கதை இருக்காமே...' என கேட்கத்தொடங்கினர். அதன் பிறகு தான் முருகதாஸ் பெயரை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் ஒரு மாதத்தில் 'மஞ்சப்பை' கதையை தயார் செய்தேன்.


*தயாரிப்பாளர் எப்படி கிடைத்தார்?


ஒரு நாள் தகவல் அறிந்த இயக்குனர் சற்குணம் சார், 'உன்னிடம் கதை இருக்காமே.. சொல்லு...' என்றார். 2 மணி நேரம் அவரிடம் கூறி முடித்த பின், 'இங்கே பாரு... வேறு யாரிடமும் இந்த கதையை சொல்லாதே... நாமே இதை தயாரிக்கலாம்,' என்றார். பின் அவரே லிங்குசாமி சாரிடம் கதையை கொண்டு சென்று அவரும் 'ஓகே' சொல்ல அடுத்த 2 மணி நேரத்தில் 'டெக்னீசியன்களை' தேர்வு செய்துவிட்டோம்.


தலையீடு இருந்ததா?:*தயாரிப்பாளர்கள் லிங்குசாமி, சற்குணம்; இயக்கத்தில் தலையீடு இருந்ததா?


இல்லவே... இல்லை. அவர்களும் இயக்குனர்கள் என்பதால் படைப்பாளியின் மனநிலையை அறிந்திருந்தனர். முழு சுதந்திரம் அளித்தனர்.


*தலைப்பை எங்கே பிடித்தீர்கள்?


அது ஒரு பெரிய கதை... கதை ரெடியாகிவிட்டது. தலைப்பு கிடைக்கவில்லை. தமிழ் தாத்தா, கோபத்தை அள்ளி கொஞ்சுகிறேன் என ஏகப்பட்ட தலைப்புகள் வைத்திருந்தும் திருப்தி இல்லை. ஒரு கட்டத்தில் எரிச்சலாகி வடபழனி முருகன் கோயில் உட்கார்ந்திருந்த போது சற்குணம் சார் போன் செய்தார். 'மஞ்சப்பை... நல்லா இருக்கா?' எனக்கேட்டார். 'சூப்பர் சார்... அதையே 'பிக்ஸ்' பண்ணுங்கன்னு சொல்லிட்டேன்.


*உண்மையை சொல்லுங்க... ஹீரோ விமலா? ராஜ்கிரணா?


விமல் கதையை கேட்கும் போதே, 'இது ராஜ்கிரண் சாருக்கான படம்; இருந்தாலும் நானும் இந்த கதையில் இடம்பெற வேண்டும்,' எனக்கூறி 'ஓகே' செய்தார்.


*எப்படி பிடித்தீர்கள் இந்த கதையை?எனக்கு நடந்தவை தான் 'மஞ்சப்பை'. தாத்தாவிற்கு பதில் என் வாழ்வில் பாட்டி இருந்தாங்க. பெற்றோர் இல்லாமல் அவர் பராமரிப்பில் தான் வளர்ந்தேன். என் பாட்டியின் பேச்சுகளை கூட வசனமாக வைத்திருக்கேன். காதல் முதற்கொண்டு என் அனுபவம் தான்.


*கதை வேற மாதிரி போகுது...? கொஞ்சம் விரிவா சொல்லுங்க!


முதல் உண்மை... என் பெயர் ராகவன் இல்லை நவீன். ஏற்கனவே நவீன் என்ற இயக்குனர் இருப்பதால் என் தம்பி மீதான பாசத்தில் அவரது பெயரான ராகவனை நான் சூட்டிக்கொண்டேன். என் பெயரை 'இனிசியல்' ஆக்கிக்கொண்டேன். ராகவன் மதுரையில் தான் வசிக்கிறார். என் காதல் மனைவி இந்துமதி. 10 ஆண்டுகளாக நான் வாய்ப்பு தேடிய போது அவள் வேலைக்குச் சென்று என்னை காப்பாற்றினாள். என் மனைவியும், தம்பிகளும் தான் நான் பெற்ற வெற்றியின் பின்னணி.


*படம் வௌியான பின் குடும்பத்தினர் மனநிலை?முதல் 'ஷோ' கமலா தியேட்டரில் மனைவியுடன் பார்த்தேன். படத்தை பார்த்த அனைவரும் மகிழ்ச்சியில் கை தட்டிக்கொண்டிருக்க அதை பார்த்து நாங்கள் இருவரும் அழுது கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் உள்ளே இருக்க முடியாமல் வௌியில் வந்து 'கிளைமாக்ஸ்' காட்சிக்கு தான் உள்ளே சென்றோம். அந்த கைத்தட்டலை பெற நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல.


*வெற்றிக்கு முன், பின் மதுரை விஜயம் எப்படி?


இங்கிருந்து போகும் போதே முடிவு பண்ணிட்டேன். ஜெயிக்காம இங்கே வரக்கூடாதுன்னு. இடையில் ஓரிரு நாள் வரும் போது உறவினர்கள் வேலை பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வருந்துவேன். 10 ஆண்டுகளுக்கு பின் ஒரு வெற்றியாளராக மதுரைக்கு வரும் போது அந்த மகிழ்ச்சிக்கு வார்த்தைகள் இல்லை, என கண் கலங்கினார்.


நம்மூர் இயக்குனரை நீங்களும் வாழ்த்த நினைத்தால் naviin2050@gmail.comல மெயில் அனுப்பலாம்.Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement