Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஆண்டுகளாக நடந்த மொய் விருந்து முடக்கம்

Share
புதுக்கோட்டை: கொரோனா பொது முடக்கத்தால், 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட மொய் விருந்து நிகழ்ச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், பல்வேறு கிராமங்களில் மொய் விருந்து கலாசாரம் உள்ளது. ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மொய் விருந்து விழா களைகட்டும். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பவரை மீட்கும் வகையில் நடத்தப்பட்ட மொய் விருந்து, காலப்போக்கில், கவுரவப் பிரச்னையாக மாறியது. மொய் விருந்து நிகழ்ச்சியில், சமையல் கலைஞர்கள், ஆட்டுக்கறி, அரிசி, விறகு வியாபாரிகள், மொய் எழுத்தர்கள் என, நூற்றுக்கணக்கான நபர்கள் பயனடைவர். கடந்த, 2018ல், 'கஜா' புயல் தாக்கியதில், விவசாயிகளுக்கு வருமானத்தை தரும் பலா, வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயம் முற்றிலும் அழிந்ததால், கடந்த ஆண்டு மொய் வசூல் குறைந்தது. கடந்த ஆண்டு, வடகாட்டில் மொய் விருந்து நடத்தியவருக்கு, 4.50 கோடி ரூபாய் வசூலானது. இந்த ஆண்டு மொய் விருந்தில், நல்ல வசூல் கிடைக்கும் என பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மொய் விருந்து விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

மொய் விருந்து நடத்த இருந்த சிலர் கூறியதாவது: வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, ஆண்டுக்கு ஒரு முறை மொய் விருந்து நடத்துவது வழக்கம். கொரோனா பிரச்னையால், 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த மொய் விருந்து, முதல் முறையாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடம் தை மாதம் மொய் விருந்து நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement