Load Image
dinamalar telegram
Advertisement

மறக்க முடியுமா? - நினைத்தாலே இனிக்கும்

மறக்க முடியுமா? -  நினைத்தாலே இனிக்கும் Entertainment பொழுதுபோக்கு

படம்: நினைத்தாலே இனிக்கும்
வெளியான ஆண்டு: 1979
நடிகர்கள்: கமல், ரஜினி, ஜெயபிரதா
இயக்கம்: கே.பாலசந்தர்
தயாரிப்பு: பிரேமாலயா

கதையெல்லாம் ஒன்றும் இல்லை. ரசிகர்கள் சந்தோஷமாக படம் பார்க்க வேண்டும் என, 'உயர்ந்த' எண்ணத்துடன் எடுக்கப்பட்ட படம், நினைத்தாலே இனிக்கும். ரஜினியும், கமலும் இணைந்து நடித்த கடைசி படம். மறக்க முடியுமா பட்டியலில், இப்படம் இடம்பெற, அதன் வெற்றி மட்டும் காரணம் அல்ல; அக்கால இளைஞர்களிடம், புதிய உடை கலா சாரத்தை உருவாக்கியது தான்.

நினைத்தாலே இனிக்கும் கதாநாயகர்களின் உடைகள், அன்றைய இளைஞர்களின் விருப்பமான ஒன்றாக இருந்தன. பரணில் தேடி பார்த்தால், பட்டையான பெல்ட், பாவாடை போன்ற பேன்ட் அணிந்த மாமாக்களின் படங்கள் கிடைக்கலாம். பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கதை, வசனத்தில் உருவானது. இப்படத்தில், அவருக்கு நிறைய, 'அனுபவங்கள்' ஏற்பட்டது, தனிக்கதை.

தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழியிலும், ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. தெலுங்கில், அந்தமானிய அனுபவம் எனும் பெயரில் வெளியானது. இத்திரைப்படத்தின் பெரும்பகுதி, சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது. மெல்லிசைக் குழுவைச் சேர்ந்த கமல், ரஜினி ஆகியோர், இசை நிகழ்ச்சிக்காக, சிங்கப்பூர் செல்கின்றனர். அங்கு, ஜெயபிரதாவை சந்திக்கின்றனர். ஒரு கடத்தல் முயற்சி, நாயகி மரணம், 10க்கும் மேற்பட்ட பாடல்கள்... அவ்வளவு தான் படம்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் பாடல்களை எழுதினார். 'எங்கேயும் எப்போதும், சிவனே மந்திரம் சிவசம்போ, நம்ம ஊரு சிங்காரி, யாதும் ஊரே யாவரும் கேளிர்' போன்ற பாடல்கள், பட்டையை கிளப்பின. தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் புரிந்து கொள்ளவே முடியாது என்பதற்கு, இப்படம் ஒரு உதாரணம். குதுாகலமாக பார்க்கலாம்... நினைத்தாலே இனிக்கும்!

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement