dinamalar telegram
Advertisement

2019 ஆகஸ்ட் மாதப் படங்கள்... ஆச்சரியமும், அதிர்ச்சியும்...

Share
2019 ஆகஸ்ட் மாதப் படங்கள்... ஆச்சரியமும், அதிர்ச்சியும்... Entertainment பொழுதுபோக்கு

2019ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வந்த திரைப்பட வெளியீட்டு நாட்கள் போல முந்தைய மாதங்களில் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
ஆகஸ்ட் 1, 2, 8, 9, 15, 16, 22, 23, 30 என 9 நாட்களில் 20 படங்கள் வரை வெளியாகி இருக்கின்றன. இவற்றில் சில படங்கள் வெளியானதா இல்லையா என்பதைத் தேடிப் பிடிக்கவே சில நாட்கள் ஆனது தனிக் கதை.
ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் வந்தால் மட்டும்தான் தியேட்டர்கள் பக்கம் மக்கள் வருகிறார்கள் என்பதை ஆகஸ்ட் மாதம் நன்றாகவே புரிய வைத்தது. அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படத்திற்குத்தான் அந்த மக்கள் வருகை. இருந்தாலும் அஜித் நடித்து ஜனவரி மாதம் வெளிவந்த விஸ்வாசம் படத்துடன் ஒப்பிடும் போது நேர் கொண்ட பார்வை படத்திற்கான மக்கள் வருகை குறைவாக இருந்ததாகவே திரையுலகத்தில் சொல்கிறார்கள். அந்தப் படம் அளவிற்கு வெற்றியும் வசூலும் இந்தப் படம் கொடுக்கவில்லை என்பதையும் கூடுதல் தகவலாகக் கொடுக்கிறார்கள்.
நேர் கொண்ட பார்வை படத்தை அடுத்து வெளிவந்த கோமாளி படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த ஒரு படமாக அமைந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த 20 படங்களுடன் சேர்த்தால் 2019ம் ஆண்டில் 140 பிளஸ் படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வருடம் முடிய இன்னும் 4 மாதங்கள் இருக்கிறது. அதற்குள் எப்படியும் 60 படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. எனவே, இந்த வருடம் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை நிச்சயம் 200ஐத் தாண்டும் வாய்ப்பும் உள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி கழுகு 2 படம் சில பல பிரச்சினைகளுக்குப் பிறகு வெளிவந்தது. 2012ல் வெளிவந்த கழுகு படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. ஆனால், இந்தப் படம் முதல் பாகம் அளவிற்கு இல்லாமல் போனதால் தோல்வியைத் தழுவியது.
ஆகஸ்ட் 2ம் தேதி ஐஆர் 8, ஜாக்பாட், தொரட்டி ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஐஆர் 8, தொரட்டி ஆகிய படங்கள் கிராமத்துப் பின்னணியில் வெளிவந்தன. தொரட்டி படத்தைப் பலரும் பாராட்டியிருந்தனர். அது மட்டுமே அந்தப் படத்திற்குக் கிடைத்த பெயர். ஜாக்பாட் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக ஜோதிகா நடித்திருந்தார். ஆனால், அவரை அப்படியெல்லாம் பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை என்பதை ஜோதிகா நன்றாகவே புரிந்து கொண்டிருப்பார். குலேபகாவாலி படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்து தனக்குக் கிடைத்த வாய்ப்பை வீணடித்திருக்கிறார் இயக்குனர் கல்யாண்.

ஆகஸ்ட் 8ம் தேதி அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படம் வெளியானது. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பின்க் படத்தின் ரீமேக். இரு விதமான விமர்சனங்கள் படத்திற்கு வந்தன. இருந்தாலும் வழக்கமான கமர்ஷியல் மசாலா படத்திலிருந்து மாறுபட்ட ஒரு படத்திலும், கதாபாத்திரத்திலும் அஜித் நடிக்க முன் வந்தது பலரது பாராட்டுக்களைப் பெற்றது. படம் வெற்றி என தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், திரையுலகினரின் கருத்து வேறாக உள்ளது.

ஆகஸ்ட் 9ம் தேதி கொலையுதிர் காலம், ரீல், சீமபுரம், வளையல் ஆகிய படங்கள் வெளிவந்தன. பலமுறை வெளியாகிறது என்ற அறிவிப்புகளுக்குப் பின் ஒரு வழியாக வெளிவந்தது நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம். இந்தப் படத்தில் நடிக்க நயன்தாரா எதற்கு சம்மதித்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். பில்லா 2 படம் இயக்கி அஜித்தை அதிர்ச்சியடைய வைத்து அவருக்கு படுதோல்வியைப் பரிசளித்த சக்ரி டொலேட்டி இப்போது நயன்தாராவுக்கு கொலையுதிர் காலம் மூலம் அதையே செய்திருக்கிறார். ரீல், சீமபுரம் படங்கள் எத்தனை காட்சிகள் ஓடியது என்பதை கேட்கவே முடியாது.

ஆகஸ்ட் 15ம் தேதி கோமாளி படம் வெளிவந்தது. இந்தப் படத்திற்கும் கதைத் திருட்டு சர்ச்சை எழுந்தது. அதை எப்படியோ சமாளித்து படத்தை வெளியிட்டார்கள். ரஜினியைக் கிண்டலடித்த டிரைலரால் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்தது. அதனால் தியேட்டருக்கு வந்த மக்கள், படமும் சுவாரசியமாக இருந்ததால் ரசித்தார்கள். லாபத்துடன் கூடிய வெற்றியாக இந்தப் படம் அமைந்ததாக சம்பந்தப்பட்டவர்களே தெரிவிக்கிறார்கள்.

ஆகஸ்ட் 16ம் தேதி மான்குட்டி, புலி அடிச்சான் பட்டி ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் புலி அடிச்சான் பட்டி படத்திற்கு 25வது நாள் விளம்பரத்தையும் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்கள்.

ஆகஸ்ட் 22ம் தேதி கென்னடி கிளப் படம் வெளிவந்தது. இன்னும் எத்தனை கபடிக் கதைகளை தன் வசம் இயக்குனர் சுசீந்திரன் வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. சசிகுமார் நடித்திருந்தும் வெற்றி கிளப்பில் இந்தப் படம் சேரவில்லை.

ஆகஸ்ட் 23ம் தேதி பக்ரீத், காதல் பிரதேசம், மெய் ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் பக்ரீத் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒட்டகத்தை வைத்து எடுக்கப்பட்ட படம். பாராட்டுக்கள் மட்டுமே ஒரு படத்திற்கு போதாது. மெய் படம் இதற்கு முன் பார்த்த என்னை அறிந்தால், காக்கி சட்டை படக் கதைகளின் தொடர்ச்சியில் வந்த மற்றுமொரு படம்.

ஆகஸ்ட் 30ம் தேதி குற்றநிலை, மயூரன், சாஹோ, சிக்சர் ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் தெலுங்கில் எடுக்கப்பட்ட சாஹோ படத்தின் தணிக்கைச் சான்றிதழில் தமிழ் என இருப்பதால் இதையும் தமிழ்ப் படமாகவே கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த பிரம்மாண்டப் படம் தமிழ்நாட்டில் தோல்விதான் அடைந்துள்ளது. சிக்சர் படம் நகைச்சுவையாக இருந்து ரசிக்க வைத்தது. மற்ற இரண்டு படங்களும் இந்த வருட படங்களின் பட்டியலில் இணைந்த படங்கள்.

ஆகஸ்ட்டில் நேர் கொண்ட பார்வை, கோமாளி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு மக்களையும் வரவழைத்து, வசூலையும் பெற்ற படங்கள். இரண்டும் இரு வேறு காரணங்களுக்காக பலரின் பாராட்டுக்களைப் பெற்றது.

இருப்பினும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது ஓரிரு படங்கள் மட்டுமே ஒவ்வொரு மாதமும் வெற்றி பெறுவது தொடர் வருத்தமாகவே உள்ளது. இந்த நிலை என்று மாறும் என்பது சினிமாவை நம்பி இருக்கும் பலரையும் கேள்வி கேட்க வைத்து வருகிறது.

கன்டென்ட் இஸ் த கிங் என்பார்கள். அந்த கன்டென்ட் கிங் ஆக இல்லாத வரையில் ரசிகர்கள் இப்படித்தான் தரமற்ற படங்களை கிக் செய்வார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள மாதங்களிலாவது சிறந்த படங்கள் வெளிவந்து தமிழ் சினிமாவின் இந்த வருடத் தொய்வைக் காப்பாற்றட்டும்.

2019 ஆகஸ்ட்டில் வெளிவந்த படங்கள்

ஆகஸ்ட் 1

கழுகு 2

ஆகஸ்ட் 2

ஐஆர் 8
ஜாக்பாட்
தொரட்டி

ஆகஸ்ட் 8

நேர்கொண்ட பார்வை

ஆகஸ்ட் 9

கொலையுதிர் காலம்
ரீல்
சீமபுரம்
வளையல்

ஆகஸ்ட் 15

கோமாளி

ஆகஸ்ட் 16

மான்குட்டி
புலி அடிச்சான் பட்டி

ஆகஸ்ட் 22

கென்னடி கிளப்

ஆகஸ்ட் 23

பக்ரீத்
காதல் பிரதேசம்
மெய்

ஆகஸ்ட் 30

குற்றநிலை
மயூரன்
சாஹோ
சிக்சர்

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement