Advertisement

ஜியோவில் உடனே ரிலீஸ்: அலறும் தியேட்டர்கள்

பிராட்பேண்ட் சேவையை ஜியோ நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பைபர் இணைப்பு மூலம் வழங்கப்பட உள்ள அந்த சேவையில் வீடியோக்களை தடையின்றி பார்க்க முடியும். மாதாந்திர கட்டணமாக 700 ரூபாய் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதிலேயே பிராட்பேண்ட், டிவி, தொலைபேசி இணைப்புகளை அளிக்க உள்ளது. புதிய திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியாக வீட்டிலேயே பார்க்கலாம் என்ற வசதியையும் அறிவித்துள்ளது. இதனால் தியேட்டர்களுக்கு வரும் மக்கள் எண்ணிக்கை குறையலாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர். அதே சமயம் புதிய தொழில் முதலீடுகளை அதிகரிக்கலாம்; வேலை வாய்ப்புகளை புதிதாக உருவாகலாம் என திரையுலகத்தைச் சார்ந்த சிலர் கூறுகின்றனர்.


எதிர்பார்த்த ஒன்றுதயாரிப்பாளர் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரபு கூறுகையில், “இது எதிர்பார்த்த விஷயம் தான். இங்கே அதற்கான வாய்ப்பு கொட்டிக் கிடக்கு. ஏற்கெனவே தியேட்டர்களில் மக்கள் வருகை குறைந்து கொண்டே வருகிறது. ஜியோவால் மேலும் கூட்டம் குறையும். டிக்கெட் விலை போன்ற பல காரணங்களால் மக்கள் பைரசியைத் தேடி போகிறார்கள். இதற்கு அரசு ஏதாவது பண்ணணும்.

சினிமா அழியாது
இப்போது படங்களுக்கு நிதியுதவி கிடைப்பது சிரமமாக உள்ளது. இப்படி ஒரு திட்டம் வந்தால் மினிமம் கியாரண்டியாக ஒரு தொகை தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு. ஜியோவே தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் பண்ணவும் வாய்ப்பிருக்கு. இப்படி ஒரு விஷயம் நடந்தால் வங்கிகளும் படம் தயாரிக்க கடன் கொடுக்க முன் வருவாங்க.


ஏற்கெனவே மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இங்கிலீஸ் படங்களைத்தான் அதிகம் வெளியிடுகிறார்கள். சின்ன படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில்லை. அப்படி தியேட்டர் கிடைக்காத படங்களுக்கு இந்த ஜியோ திட்டம் மூலமாக பணம் கிடைக்கும். இருந்தாலும் நல்ல படங்களை எடுக்கிறவங்களுக்குதான் இந்த வியாபாரம் கிடைக்கும்.

வேலை வாய்ப்பு அதிகமாகும்
படத்தயாரிப்பு அதிகமாகலாம், புதுமுகங்கள் நிறைய பேர் வரலாம், வேலை வாய்ப்பு அதிகமாக வாய்ப்பிருக்கு. சினிமாவை தியேட்டரில் பார்க்க சிலர் விரும்பறதில்லை. டிவியில் போடும் போது பார்த்துக்கலாம் என்று இருப்பவர்களும் உண்டு. அப்படி இருக்கிறவங்க இந்த திட்டத்தை விரும்புவாங்க.

அரசுக்கு வரி இழப்பு
தியேட்டருக்கு பாதிப்பு வரும் என்று சொல்றவங்க, தயாரிப்பாளருக்கு பாதிப்பு வராம பார்த்துக்கணும். தியேட்டர் மூலமா வர்ற வரி கூட அரசுக்கு இழப்பாக அமையலாம். ஒரு சந்தர்ப்பத்துல இதனால் தயாரிப்பாளருக்கும் பாதிப்பு வரலாம். ஒரு கட்டத்துல ஜியோவே தன்னிச்சையாக நடக்கவும் வாய்ப்பிருக்கு. தியேட்டருக்கு அதிக கட்டணம் கொடுக்கிறதை இத்திட்டம் குறைக்கும், ஏற்கனவே தியேட்டர்ல வர்ற வருமானம் 50 சதவீதம் குறைஞ்சிடுச்சி. அத இன்னும் குறையாம காப்பாத்திக்கிறது தியேட்டர்காரங்க கையில இருக்கு,” என்றார்.

படம்னா தியேட்டர்லதான் பார்க்கணும்தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் பேசுகையில், சினிமாங்கறதையே தியேட்டருக்குப் போய் மக்களோட மக்களா பார்க்கிற அனுபவம்தான் சிறப்பா இருக்கும். தியேட்டருக்குப் போனா இரண்டரை மணி நேரம் அந்த இடத்தை விட்டு நகரவே மாட்டோம். ஆனால், வீட்டுல அப்படியில்லையே, ஒரே இடத்துல உட்கார்ந்து பார்ப்போமோ?. தியேட்டரைத் தவிர வேற எங்க பார்த்தாலும் அதை சினிமான்னு நான் சொல்ல மாட்டேன்.


பெரிய நடிகர்களே விரும்ப மாட்டார்கள்
தயாரிப்பாளருக்கு இதனால வருமானம் வருது, லாபம் வருது அதெல்லாம் ரெண்டாம் பட்சம். படம்னா தியேட்டர்லதான் பார்க்கணும். அதுக்கு வெப்சீரிஸ் பண்ணிட்டுப் போகலாம். உதாரணத்துக்கு ஒரு பெரிய நடிகரோட படத்தை 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி போடறாங்கன்னு வச்சிக்குங்க. அதை அந்த நடிகரே விரும்ப மாட்டாரு. அவங்களுக்கு தியேட்டர்லதான் படத்தைப் போடணும். தியேட்டருக்கு வந்து ரசிகர்கள் திருவிழா மாதிரி அந்தப் படத்தோட ரிலீசைக் கொண்டாடணும்.

ஜியோ சினிமா உருவாக்கலாம்
வெப்சீரிஸ் மாதிரி அதுக்குன்னு தனியா படம் எடுத்து போடுங்க. முதல் நாள் முதல் காட்சிங்கறது தியேட்டர்ல பார்க்கிறதுக்குதான் பொருந்தும். அது சினிமாவுக்கான மரியாதையா இருக்காது. எல்லா தயாரிப்பாளரும் படம் தயாரிக்கும் போது லாபம் வரும்னு நினைச்சிதான் பண்றாங்க. ஜியோவே எங்களை அணுகி அதுக்குன்னு படம் தயாரிச்சிக் கொடுங்கன்னா, பண்ணித் தர தயாரா இருக்கேன்.


தியேட்டருக்கு வரவே வராதுங்கற நிலைமைல இருக்கிற படங்களை எடுத்து அவங்க போட்டாங்கன்னா அது அந்த தயாரிப்பாளருக்கு உதவியா இருக்கும். அதை மாதிரி அவங்க முயற்சி பண்ணலாம்,” என்கிறார்.

தியேட்டரை பாதிக்காதுதமிழ்நாடு மல்டிபிளக்ஸ் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், “சினிமாங்கறது எந்தக் காலத்துலயும் அழிஞ்சிடாது. தியேட்டர்ல போய் படம் பார்க்கிற அனுபவம் எப்பவுமே தனி. டிவி வந்த காலத்துலயே சினிமா அழிஞ்சிடும்னு சொன்னாங்க. ஆனால், அது படிப்படியா வளர்ந்துதான் வந்திருக்கு.


டிவியிலதான் படம் காட்டுவேன்னு ஜியோ சொல்றாங்க. அது டிவியில இருக்கிற மத்த நிகழ்ச்சிகளைத் தான் கெடுக்கும். சினிமா கெடறதில்லை. தியேட்டர்ல சினிமாவை திரையிடறதுக்கும், டிவியில ஒளிபரப்புறதுக்கும் ஒரு இடைவெளி உலகம் முழுக்க இருருக்கு. ஆனா, இந்தியாவுலதான் அப்படி கிடையாது. அப்படி நேரடியா டிவியிலதான் படத்தைப் போடுவோம்னு சொன்னாங்கன்னா, அந்தப் படம் எங்களுக்குத் தேவையில்லை.

அரண்மனை மாதிரி தியேட்டர்
ஜியோவுக்கு படம் கொடுக்கணும்னு நினைக்கிறவங்க தாராளமா கொடுக்கட்டும். எங்க தியேட்டர்ல என்ன படம் போடணும்னு நாங்கதான் முடிவு பண்ணணும். நெட்பிளிக்ஸ்ல கூட 30 நாள்ல படத்தைக் கொடுக்கறாங்க. இப்ப எங்க பொதுக்குழுவுல ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். யார் 100 நாள் கழிச்சி வேற மீடியத்துல படத்தைக் கொடுக்கறாங்களோ அவங்களோட படத்தைதான் தியேட்டர்ல திரையிடுவோம்.


இப்பலாம் தியேட்டரைக் கூட அரண்மனை மாதிரி அழகா கட்டி வச்சாதான் மக்கள் வராங்க. நாங்களும் 40 கோடி, 50 கோடி செலவு பண்ணிதான் தியேட்டர்களைக் கட்டறோம். எங்களுக்கும் தியேட்டருக்கு ஆட்கள் வரணும் ஆசை இல்லையா,” என்கிறார்.

இது ஒரு நம்பர் கேம் தான்திரைப்படத் தயாரிப்பு ஆலோசகர் வெங்கட் பேசுகையில், “ஜியோ பிராட்பேண்ட் இணைப்பு வாங்குபவர்களுக்கு முதல் நாள் முதல் காட்சி காட்டப்படும்னு அவங்க விண்ணப்பத்துல அவங்க சொல்லவேயில்லை. ஆனால், ஜியோ சார்பாக இப்பவே பல படங்களைப் பார்க்கவும் ஆரம்பிச்சிட்டாங்க. இருந்தாலும் இதுவரைக்கும் ஒரு படத்தை மட்டும் தான் ஒப்பந்தம் பண்ணியிருக்காங்க.


அவங்க எதிர்பார்க்கிற கஸ்டமர்கள் வந்த பிறகுதான் இதை பண்ண முடியும். கமல்ஹாசன் இப்படித்தான் டிடிஎச்ல படத்தைப் போடுவேன்னு சொன்னாரு. அவர் எதிர்பார்த்த கஸ்டமர்கள் அதுக்கு வரலை. அதனால அப்படியே பின்வாங்கிட்டாரு. ஜியோவுக்கு நிறைய கஸ்டமர்கள் வந்தால் அவங்க பண்றது ஈஸி. ஒரு விஜய் படத்தைக் கூட 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி, அதை முதல் நாள் முதல் காட்சி போட்டு அவங்களால சம்பாதிக்க முடியும். அதுல விளம்பரங்கள் போட முடியும்,

தியேட்டருக்கு கூட்டம் வரும்
சினிமா சைடுல எதிர்ப்பு வரலாம். ஆனால், முதன் முதலாக சங்கமம் படத்தை டிவியில 100 நாளுக்குள்ள ஒளிபரப்புனாங்க. அப்போ சினிமாவுலயே எதிர்ப்பு தெரிவிச்சாங்க. இப்போ 100 நாள் கழிச்சி டிவியில போட்டுக்குங்கன்னு சொல்றாங்க. எல்லாமே மாற்றத்துக்குரியது. ஆனால், அழிக்கவே முடியாத தொழில் சினிமா. தியேட்டருக்கு வர்ற கூட்டம் வந்துக்கிட்டுதான் இருக்கும்.


தயாரிப்பாளர்கள் இல்லை
சாட்டிலைட் வரும் போது அதனோட மதிப்பு தெரியாம குறைவான விலைக்கு படங்களை வித்தவங்கதான் தயாரிப்பாளர்கள். இன்டர்நெட் வரும் போது ஆயிரத்துக்கு வித்தாங்க. ஹிந்தி உரிமையும் அப்படிதான் போயிட்டிருக்கு. தயாரிப்பாளர்கள் இதையெல்லாம் தெரிஞ்சிக்காமலேயே கையெழுத்து போட்டு கொடுத்துடறாங்க.

டிக்கெட் புக் பண்ற ஆன்லைன் கம்பெனில கூட விஜய் படத்தை எத்தனை பேர் பார்த்தாங்கன்னு கேட்டால் 1 கோடி பேரோட டேட்டாபேசை கொடுத்துடுவாங்க. அது தயாரிப்பாளருக்குத் தெரியவே வராது என்றார்.


லாப - நஷ்டம்
ஜியோவின் இந்த அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது பணத்தைக் கொட்டுமா என்பது திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்புதான் தெரியும். தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி இணைப்புகளை அவர்கள் பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வாடிக்கையாளரிடமிருந்து 100 ரூபாய் வாங்கினால் 100 கோடி வரும். அந்த 100 கோடியில் தயாரிப்பாளரிடமிருந்து படத்திற்கான உரிமையாக 40 கோடி கொடுத்தாலும் செலவு போக சுமார் 50 கோடி ஜியோவுக்கு லாபமாக அமையலாம்.

படம் ஒளிபரப்பு செய்யப்படும் போது அதில் இடம் பெறும் விளம்பரம் மூலமும் அவர்களுக்குத் தனியாக வருமானம் வரலாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் ஜியோவுக்கு ஒரு படத்திலேயே பல கோடி லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே சமயம், தயாரிப்பாளர்கள் சரியாக வியாபாரம் செய்தால் அவர்களும் சில கோடி லாபம் பெறலாம்.


தியேட்டர்களுக்கு பாதிப்பு வரும் என நினைப்பவர்கள் மாற்றுத் திட்டங்களைப் புகுத்தலாம். சில கட்டணங்களைக் குறைத்து ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் வர வைக்கலாம். அதற்கு நடிகர்கள் உள்ளிட்டவர்களின் சம்பளத்தைக் குறைக்க முடிவெடுக்கலாம்.
சாட்டிலைட் டிவி வந்த காலத்திலும் சினிமா அழியும் என்றார்கள். ஆனால், அது வளர்ச்சிதான் பெற்றது. அது போல இன்றைய டெக்னாலஜி மாற்றத்தில் அடுத்த கட்டமாக வீட்டுக்குள்ளேயே சினிமா என்பதும் சாத்தியம் என்றே தோன்றுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement