Advertisement

ஆஸ்திரேலியா டூ கோலிவுட்.... கொலைகாரன் நாயகி ஆஷிமா நார்வால்

விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான கொலைகாரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆஷிமா நார்வால். இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியா வளர்ந்த இவர் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் தாய்நாட்டுக்கு வந்திருக்கிறார்.

கொலைகாரன் படத்தை அடுத்து, பிக்பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ராஜ பீமா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆஸ்திரேலியா டூ கோலிவுட் பயணத்தைப்பற்றி பேசுகிறார் ஆஷிமா நார்வால்.

உங்களை பற்றி சொல்லுங்க ?
“இந்தியாவில் பிறந்த நான் ஆஸ்திரேலியாவில் மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் குறித்த படிப்பை படித்தேன். படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, புதிய முயற்சியாக இருக்கட்டுமே என்று மாடலிங் மற்றும் நடிப்பை தேர்ந்தெடுத்தேன். மருத்துவத் துறையிலிருந்த நான் மாடலிங்துறைக்குப் போனது நிச்சயமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, கலைத்துறை (Arts) மீது எனக்கு இருந்த அதீத ஆர்வம்தான் காரணம்.

மாடலிங் செய்ய ஆரம்பித்ததும் அழகிப்போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். அந்த தருணம் ரொம்பவும் எழுச்சியாகவும், புதிதாகவும், அதே நேரம் போராட்டமாகவும் இருந்தது. மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகண்ட் (Miss Sydney Australia Elegance) மிஸ் இண்டியா குளோபல் (Miss India Global) என இரண்டு முறை டைட்டில் வின் பண்ணினேன். அழகிபோட்டிகளில் டைட்டில் வென்ற அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. நமது கனவுகள் பலிக்கும் என்ற நம்பிக்கை வந்தது. என் மீது எனக்கு நம்பிக்கையை தந்தது. இந்த உலகத்தின் மீது மேலும் ஒரு பற்றை உண்டாக்கியது.

சினிமா ஆசை எப்படி ?
சினிமா ஆசை எனக்குள் எப்ப வந்தது என்று யோசித்துப்பார்த்தால் இப்போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. மாடலிங்துறையில் நல்ல பிரபலம் கிடைத்த பின் சினிமா வாய்ப்புகள் வந்தது. ஆனால் சினிமாதுறை ஒரு கலாச்சார அதிர்ச்சியையும் தந்தது. இங்கே யாரும் நமக்கு பாதை வகுத்து தரமாட்டார்கள். எந்த பாதையில் பயணித்தால் வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆலோசனை சொல்லவும் யாரும் இல்லை. இங்கே நாம் தான் நமக்கான பாதையை வகுத்து கொள்ள வேண்டும். இத்தகைய குழப்பங்களுக்கு மத்தியில் தான் ஒரு நல்ல கலைஞனும் உருவாகிறார்கள். எனவே நான் இந்த துறையில் இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அழகி போட்டியில் அடுத்தக்கட்டம் ஏன் செல்லவில்லை ?
நான் நடிகையானதும் ஏன் நடிகையானீர்கள்? அழகிபோட்டிகளில் அடுத்தக்கட்டம் செல்ல முயற்சிக்கவில்லையா? என்று பலரும் கேட்டார்கள். நடிப்பதில் ஆர்வம் வந்த பின் எனக்கு அழகிப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு நேரம் கிடைக்கவில்லை. நடிப்புத்துறையில் சிறந்த இடத்தை அடையும் நோக்கத்தில் இருப்பதால் இதில் மட்டுமே என் கவனத்தை செலுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

முதல் சினிமா வாய்ப்பு?
சினிமாவில் நடிக்க நான் முடிவு செய்த பிறகு தெலுங்குப் படத்தில்தான் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அது ஒரு தற்செயலான நிகழ்வுதான். சினிமாத்துறையில் இறங்க முயற்சித்தபோது கிடைத்த வாய்ப்பு அது. நான் திட்டமிட்டு தெலுங்கு சினிமாவில் நடிக்கவில்லை. அது சினிமா உலகம் எனக்கு தந்த வாய்ப்பு என்று சொல்லலாம்.

தமிழில் வாய்ப்பு எப்படி ?
தமிழ்ப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது கூட திட்டமிட்டது அல்ல, சினிமா உலகம் தந்த வாய்ப்பு என்று சொல்லலாம் ... தெலுங்குப் படத்தின் அறிமுகம் என்னை எங்கே கொண்டு வந்துள்ளது. கொலைகாரன் படத்தில் தாரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தமாதிரி ஒரு அருமையான புத்திசாலித்தனமான கதையில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்தான். என்னுடைய அறிமுகப்படத்தில் அத்தகைய ஒரு பெரிய கதாபாத்திரம் கிடைத்தது பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது.

கொலைகாரன் அனுபவம் பற்றி ?
கொலைகாரன் படப்படப்பிடிப்பில் நடைபெற்ற இன்ட்ரெஸ்டிங்கான சம்பவங்கள் மனதில் நிறைந்து இருக்கின்றன. கொல்லாதே ... என்ற பாடல் காட்சியை அபுதாபியில் உள்ள பாலைவனத்தில் எடுத்தபோது, மணற்புயலில் மாட்டிக் கொண்டோம். அப்போதும் தொடர்ந்து ஷூட்டிங் நடத்தி பாடல்காட்சியை முடித்தோம். அங்கிருந்து அடுத்தகாட்சியை ஒருகிலோ மீட்டர் தூரத்தில் எடுக்க வேண்டி இருந்தது. அங்கு எந்த வண்டிகளும் போகமுடியாததால் நாங்கள் அனைவரும் நடந்தேபோய் அங்கு ஷூட் பண்ணினோம்.

உங்களுடைய பிளஸ் என்ன ?
என்னுடைய பிளஸ்பாயிண்ட் என்ன தெரியுமா? எதையும் முகத்துக்கு நேராக நேரடியாக பேசும் குணம் மற்றும் முடிவு எடுக்கும் திறன். நான் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய தெளிவு எனக்கு இருக்கிறது

கவர்ச்சியாக நடிப்பது பற்றி ?
கவர்ச்சியாக நடிப்பதில் பாலிசி என்று எதையும் நான் வைத்துக் கொள்ளவில்லை. சினிமாவே கவர்ச்சியான ஒரு துறை தான். எனவே கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்பது என்னுடைய எண்ணம். அதேநேரம் எனக்கென்று சில எல்லை உள்ளது அதற்குள் கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு பிரச்னை இல்லை. உதாரணத்துக்கு... லிப்லாக் முத்தகாட்சிகளில் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதுபோன்றகாட்சிகள் இப்போது தேவையில்லை என்று தான் நினைக்கிறேன். மேலும் தொழில்நுட்பம் மூலம் சுலபமாக அதுபோன்ற காட்சிகளை எடுக்கவும் முடியும். என்னதான் கவர்ச்சியாக நடித்தாலும் எனக்கு தமிழ்ப்பெண்கள்போல உடை உடுத்துவதில்தான் அதிகமான மகிழ்ச்சி.

தமிழில் எந்த நடிகருடன் நடிக்க ஆசை?
ரஜினி தொடங்கி அனைத்து தமிழ் ஹீரோக்களுடனும் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதேநேரம் என்னுடைய பேவரைட் ஹீரோ என்றால் விஜய். நான் பார்த்தவர்களிலேயே அவர் ஒரு ஸ்டைலான, துடிப்பான நடிகர். அவரின் நடிப்பும் நடனமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிகைகளில் சாவித்ரி படம் பார்த்தபின் சாவித்ரி அம்மா... ஒரு சிறந்த நடிகை.

அடுத்தக்கட்டம் என்ன?
தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தும் எண்ணம் இல்லை. சினிமாவுக்கு மொழிபேதம் இல்லை எனவே அனைத்து மொழிப் படங்களிலும் நடிக்கத்தான் விருப்பம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement