Advertisement

கொலைகாரன் இயக்குநருக்கு அடுத்த வாய்ப்பை தந்த தனஞ்செயன்

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் திமிரு பிடிச்சவன். அதையடுத்து, தற்போது, கொலைகாரன் என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக இந்திய-ஆஸ்திரேலிய மாடலான ஆஷிமா நர்வால் நடித்து வருகிறார். அர்ஜூன் முக்கியமான கதாபாத்திரத்தில் போலீஸாக நடித்துள்ளார்.

கொலைகாரன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது:
கொலைகாரன் படம் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், படத்தின் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் நுணுக்கமாக பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார். படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. அதனால், படம், வணிக ரீதியில் நிச்சயமாக லாபத்தைத் தரும் என்பது உறுதி.

கொலைகாரன் படத்தை, இயக்குநர் இயக்கிய விதத்தைப் பார்த்து, அவருக்கே என்னுடைய அடுத்தப் படத்தையும் இயக்கக் கொடுப்பது என முடிவெடுத்து, அதை அவரிடம் கூறினேன். சந்தோஷப்பட்டார். பின், ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். ஆறு மாதங்களுக்குப் பின் தான், அடுத்தப்படம் எடுக்கத் திட்டமிருந்தாலும், ஆண்ட்ரூ லூயிஸே படத்தை இயக்க ஒப்புக் கொண்டது சிறப்பு. விரைவில், படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்தப் படமும் மிகச் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கொலைகாரன் படம், ஆண்ட்ரூ லூயிசுக்கு, இரண்டாவது படம். ஏற்கனவே, அவர் லீலை என்ற பொழுதுபோக்குப் படத்தை இயக்கி இருக்கிறார். கொலைகாரனைத் தொடர்ந்து, அவருக்கு, தனஞ்செயனே மீண்டும் வாய்ப்பளித்திருப்பது லூயிசுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.

அடுத்த மாதம், கொலைகாரன் படம் ரிலீசாகும் என படக் குழு தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement