Advertisement

வில்லன் நடிகருக்கு வில்லனான விழாப் பேச்சு

திரையுலகத்தில் சர்ச்சையை உருவாக்கும் பல விஷயங்கள் மேடைப் பேச்சு சம்பந்தப்பட்டவையாகத்தான் இருக்கும். அப்படி ஒரு மேடைப் பேச்சில் நிகழ்ந்த சர்ச்சைதான் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாகி உள்ளது.

நயன்தாரா நாயகியாக நடித்துள்ள 'கொலையுதிர் காலம்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைப் பேச்சுகளைப் பேசும் திரையுலகப் பிரபலங்களான ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். படத்திற்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் அவர்களை நட்பின் அடிப்படையில் அழைத்துள்ளார்.

விழா நடக்கும் அன்றே இந்தப் படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்ற ஒரு சர்ச்சையை யுவன்ஷங்கர் ராஜா உருவாக்கினார். விழாவுக்கு படத்தின் இயக்குனர் சக்ரி டோலெட்டி, நாயகி நயன்தாரா ஆகியோர் வரவில்லை. விழாவில் ராதாரவி பேசியதுதான் சர்ச்சையாக மாறியது.

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், ராதாரவியின் பேச்சுக்கு கண்டனத்தைக் கூறி திரையுலகத்தினரின் ஆதரவைப் பெற்றார். நயன்தாரா என்பதால் பலரும் அவர்களுக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். ராதாரவி, திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், விக்னேஷ் சிவன் அவருடைய டுவிட்டர் பதிவில் ஸ்டாலின், கனிமொழி ஆகியோரையும் 'டேக்' செய்தார். அதனால், ராதாரவியும் திமுகவை விட்டு விலக்கப்பட்டுவிட்டார்.

இதனிடையே, விக்னேஷ் சிவன் டுவீட்டுகளுக்கு ஒரு சாரார் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகிறார்கள். 'மீ டூ' விவகாரம் விஸ்வரூபமெடுத்தபோது, நயன்தாரா எந்தவிதமான ஆதரவையும் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.

சிலர், பிரபுதேவா அவருடைய மனைவியை விட்டுப் பிரிவதற்கு நயன்தாராவின் காதல்தான் காரணம், ஒரு குடும்பத்தைக் காதல் என்ற பெயரில் பிரிப்பதும் பாவம்தானே, அதைச் செய்த நயன்தாராவுக்கு யாருமே இதுவரை கண்டனம் சொன்னதில்லையே என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

எப்படியோ, ஒரு விழாவே ஒரு வில்லன் நடிகருக்கு வில்லனாகப் போய்விட்டது. கட்சியை விட்டு நீக்கப்பட்டதால், தேர்தல் சமயத்தில் பல பிரச்சாரக் கூட்டங்களில் பேசி ராதாரவிக்குக் கிடைக்க இருந்த வருமானம் போய்விட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Jaya Ganesh - Chennai,இந்தியா

    I support Thiru. Radha Ravi.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement