Load Image
dinamalar telegram
Advertisement

உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்

உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள் Entertainment பொழுதுபோக்கு

பாடலாசிரியர் வைரமுத்து மீது பல ஆண்டுகளாக பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறி வருகிறார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இதுபற்றி சமூகவலைதளத்தில் அவர் கருத்து பதிவிட்டாலே அவரை வசைபாட ஒரு கூட்டம் கிளம்பி விடுகிறது. இருப்பினும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருவதோடு வைரமுத்துவிற்கு எதிரான தனது குற்றச்சாட்டில் உறுதியோடு இருக்கிறார்.

அரசியல்வாதியை எப்படி நம்புவது

இந்நிலையில் டில்லியில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். சிலதினங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன், மல்யுத்த வீரர்கள் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக அவர்களை போராட வைக்க வேண்டிய நாம், தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அவர்களை போராட வைத்துவிட்டோம். நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது விளையாட்டு வீராங்கனைகள் மீதா அல்லது அதிக குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதி மீதா? என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதிலடியாக சின்மயி, தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ஒருவர், தன்னிடம் அத்துமீறிய பாலியல் குற்றவாளியை வெளிச்சம்போட்டு காட்டியதற்காக 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். அந்த கவிஞர் உங்களுக்கு நெருக்கமானவர் என்பதால் அதைப்பற்றி பேசவில்லை. கண்முன்னே நடக்கும் துன்புறுத்தலை புறக்கணித்துவிட்டு பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் அரசியல்வாதியை எப்படி நம்ப முடியும்” என குறிப்பிட்டார். இவரின் பதிவு வைரலானது.

எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு வேண்டுகோள்
இந்நிலையில் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார் சின்மயி. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட நீண்ட பதிவின் சுருக்கம் வருமாறு : மதிப்பிற்குரிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.... இந்தியாவில் எங்கு பாலியல் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் பேசும்போது மாற்றம் வரும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. ஆனாலும், பாலியல் சுரண்டல்கள், தொல்லைகள் குறைந்தபாடில்லை. போக்ஸோ உள்ளிட்ட சட்டங்கள் இருந்தும் அனைத்து துறையிலும் பாலியல் குற்றச்சாட்டு எழத்தான் செய்கிறது.

சினிமா துறையில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. உங்கள் நண்பரும், ஆதரவாளருமான வைரமுத்து மீது 17-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்தும் உங்கள் பாதுகாப்பில் அவர் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடன் இருக்கிறார். இதனால் அவரைப்பற்றி பெண்கள் மேலும் பேச முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் உங்கள் கட்சி அவரைத்தான் முன்னிலைப்படுத்துகிறது. தமிழ் சினிமாவில் 5 ஆண்டுகள் பணி செய்ய தடையுடன் அதை எதிர்த்து வழக்கு பதிவு செய்து போராடி வருகிறேன். அதற்கு முடிவு கிடைக்குமா என தெரியவில்லை. இன்னும் 20 ஆண்டுகள் கூட இந்த வழக்கு நடக்கலாம், அதை எதிர்கொள்ள எனக்கு பலம் உள்ளது.

நமது நாட்டின் சாம்பியன்கள், மல்யுத்த வீரர்கள், நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் பிரிஜ் பூஷன் பெயரைக் கூறியுள்ளார்கள். அதேபோல் தான் 17 க்கும் மேற்பட்ட பெண்கள் வைரமுத்துவின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். உங்களுக்கும், உங்கள் கட்சிக்கு நெருக்கமாக உள்ள அவர் என்னையும் மற்ற பெண்களையும் அடக்க நினைக்கிறார். எங்கள் அனைவரின் திறமையைவிட வைரமுத்து திறமை பெரிதொன்றும் இல்லை. உங்கள் கண் எதிரே இது நடக்கிறது. எனவே உரிய நடவடிக்கை எடுங்கள். அப்போது தான் தமிழகத்தில் உள்ள பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாக உணர முடியும். எனது துறையில் இதுபோன்றவர்கள் இனி நடக்ககூடாது என்பதற்காக நான் பேசுகிறேன். ஆனால் மற்ற பெண்கள் பேச பயப்படுகிறார்கள்.

போக்ஸோ உள்ளிட்ட அமைப்புகள் சரியாக செயல்பட தயவு செய்து ஆவண செய்யுங்கள். எங்கள் துறையில் அனைத்து இடங்களிலும் பாலியல் அத்துமீறல்களை தடுக்க வழிவகை செய்யுங்கள். தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியை டி.வி.யில் தொகுத்து வழங்கியபோது ரமேஷ் பிரபா குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது பெயரும் வெளியானது. எனவே, அனைத்துக்கும் ஆவண செய்ய வேண்டும்”

இவ்வாறு சின்மயி தெரிவித்திருக்கிறார்.

சின்மயின் இந்த பதிவால் வைரமுத்து மீதான பாலியல் புகார் தொடர்பான விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement