
நான் சொன்னால் ரம்மி விளையாடி விடுவார்களா? - சரத்குமார் ஆதங்கம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்கிற சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதற்கு தமிழக கவர்னர் ஒப்புதல் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்திருந்த நடிகர் சரத்குமார் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் பூரண மதுவிலக்கு கோரி சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார் சரத்குமார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ‛‛ரம்மி ஒரு அறிவுப்பூர்வமான விளையாட்டு. அதை விளையாட திறமை வேண்டும். அதோடு குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டவர்களையெல்லாம் ஆன்லைன் விளையாட்டினால் தற்கொலை செய்து கொண்டதாக தவறான தகவல் பரப்பி வருகிறார்கள் . தமிழக அரசு ஆன்லைன் ரம்மிக்கான தடைச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பே நான் அந்த விளம்பரத்தில் நடித்து விட்டேன்.
அதோடு தமிழக மக்களிடம் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் கேட்டபோது யாருமே ஓட்டளிக்கவில்லை. அப்படியிருக்கும்போது நான் ரம்மி விளையாடுமாறு சொன்னால் மட்டுமே உடனே விளையாடி விடுவார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சரத்குமார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!