
பொறாமை, வெறுப்பிற்கு இடமில்லை : வாழு... வாழ விடு... அன்புடன் அஜித்

வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்துள்ள ‛துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வங்கி கொள்ளை தொடர்பான கதையில் அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகி உள்ளது. இந்த படத்துடன் விஜய்யின் வாரிசு படமும் வெளியாகிறது. இரண்டு படங்களுக்கு இடையே தியேட்டர்களை பிடிப்பதில் போட்டா போட்டி நடக்கிறது. மேலும் அன்றைய தினம் இரண்டு படத்திற்கும் எந்த மாதிரியான விமர்சனங்கள் வரப்போகிறது என இரு தரப்பு ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் சமூகவலைதளங்களில் அவ்வப்போது இரு ரசிகர்கள் இடையே சண்டைகளும் நடந்து வருகின்றன.
நடிகர் அஜித் தன் பட சம்பந்தப்பட்ட எந்த விழாக்களிலும் பங்கேற்க மாட்டார். வேறு எந்தவொரு விஷயத்திற்கும் குரல் கொடுக்காதவர். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். அவ்வப்போது உத்வேகம் தரக்கூடிய செய்திகளை தனது மேலாளர் வாயிலாக அஜித் பகிர்ந்து வருகிறார். தற்போது அப்படி ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அஜித் சொன்னதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட பதிவு : ‛‛உங்களை சுற்றி எப்போதும் உங்களைச் சிறப்பாகச் செய்யத் தூண்டும் நபர்களையே வையுங்கள். நாடகத்திற்கோ, எதிர்மறைக்கோ இடமில்லை. உயர்ந்த இலக்குகள் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு நல்ல நேரமும், நேர்மறையான எனர்ஜியும் வேண்டும். பொறாமை, வெறுப்பிற்கு இடமில்லை. ஒருவருக்கு ஒருவர் சிறந்த விஷயத்தை வெளி கொண்டு வர வேண்டும். வாழு... வாழ விடு... அன்புடன் அஜித்குமார்'' என கூறியுள்ளார்.
இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!