dinamalar telegram
Advertisement

விருதுகள் நம்மை மாற்றிவிடாது: சமுத்திரக்கனி

Share
விருதுகள் நம்மை மாற்றிவிடாது: சமுத்திரக்கனி Entertainment பொழுதுபோக்கு

சமூக விழிப்புணர்வு படங்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் தரும் நடிகர் சமுத்திரக்கனி, சமீபத்தில் தலைவி, உடன்பிறப்பே, எம்.ஜிஆர்., மகன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
கொரோனாவுக்கு பின் மெல்ல துளிர் விடும் திரைத்துறையில், பல நடிகர்களும் பிசியாகி உள்ள நிலையில், அதில் சமுத்திரக்கனியும் ஒருவர். அவர் நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
வழக்கமான சமுத்திரக்கனி சமீபத்தில் மாறி விட்டாரே?
தலைவி படத்திற்காக மீசையை எடுத்தேன். உடன்பிறப்பே கதையை ஏற்கனவே கேட்டு வைத்திருந்தேன். அந்த கதைக்கு தலைவி பட கெட்டப் அப்படியே பொருந்தியிருந்தது. இயக்குனர் சரவணனும், அப்படியே அழைத்துச் சென்று விட்டார்.
உடன் பிறப்பே படத்தில் நடித்த அனுபவம்?
ஜோதிகா உடன் நடித்தது, சின்ன பதட்டமும், பரபரப்புமாக இருந்தது. அவருடன் நடித்தது புது அனுபவம். எந்த கேள்வியும் கேட்க முடியாத கதையாக, உடன்பிறப்பே படத்தின் கதை இருந்தது. இயக்குனர் சரவணன், இந்த அண்ணன், தங்கை கதையை வித்தியாசமாக கையாண்டு இருந்தார். பாத்திரங்களை கடந்து சூழல் மட்டுமே வில்லனாகவும், நாயகனாகவும் இருக்கும்.
ஜோதிகாவே உங்களின் தீவிர ரசிகர் என கூறியுள்ளாரே?
எத்தனையோ நடிகர்களுடன் நடித்துள்ளேன்; பதட்டப்படவில்லை. ஆனால், ஜோதிகாவுடன் நடித்த போது, ஒரு மாதிரி நம் கேரக்டரை தாண்டி, அவரது நடிப்பை பார்த்து மெய் மறந்ததுண்டு. அதன் பின் தான், இது தப்பா இருக்கே என யோசித்து, மீண்டும் ஒன்ஸ் மோர் கேட்டு நடித்தேன். இந்திய சினிமா மட்டுமின்றி, உலக சினிமாவிலேயே ஜோதிகாவுக்கு பெரிய இடம் இருக்கு.
நடிக்கும் போது அந்தந்த ஊர் மொழி பேசி நடிப்பதை எப்படி சமாளிக்கிறீர்கள்?
எனக்கு கடினமாக இருக்கும். தஞ்சாவூர் பாஷை பேச வேண்டிய இடத்தில், சில சமயம் மதுரை பாஷை பேசி விடுவேன். அதன் பின், டப்பிங்கில் சரி செய்வோம். முடிந்த வரை பேச முயற்சிப்பேன். மொழிகளில் தஞ்சாவூர் பாஷை என்றாலே, அதற்கு தனி இடமும், வரலாறும் உண்டு.
சசிகுமாரும், நீங்களும் எப்படி?
எனக்கும், அவருக்கும் எப்போதும் ஒரு அன்பு உண்டு. இருவருக்குமே அடுத்த தலைமுறை பாதிக்க கூடாது என்ற பயம் உண்டு. சசியுடன் நடிப்பது பெரிய வரம். அவன் கூட இருந்தால் போதும்; 100 சொந்தங்களுடன் இருப்பது போல் இருக்கும். சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன், போராளி என, நான்கு படங்கள் இணைந்து பணியாற்றினோம். இருவரும் ஒருவரை ஒருவர் இயக்கியும் உள்ளோம். அவருடைய வெற்றிவேல் படத்தில், இரண்டு நாள் நடித்தேன். நீண்ட இடைவேளைக்கு பின், உடன்பிறப்பே, எம்.ஜிஆர்., மகன் படங்களில் நீண்ட நாள் இணைந்து பயணித்தோம். நான் இப்போது சசியை பார்த்தே ஆறு மாதமாகிவிட்டது. ஆனால், தினமும் போனில் பேசிவிடுவோம்.
மீண்டும் சசி - சமுத்திரக்கனி கூட்டணி எப்போது?
கதை தயாராக உள்ளது. ஆரம்பிக்க வேண்டியது தான் பாக்கி. இரண்டாண்டாக திரைத்துறை முடங்கி இருந்தது. தற்போது அதை விரட்டி பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கிறோம். அனைவருமே, வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.
ஓ.டி.டி., தளங்கள் குறித்து?
எதையும் பிரித்து பார்க்க வேண்டியதில்லை. டெக்னாலஜி மாற, நாமும் மாறித் தான் ஆக வேண்டும். கூட்டமாக அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைக்கவில்லை. ஓ.டி.டி., என்றால் குடும்பத்துடன் அமர்ந்து பார்ப்பர். ஆனால், யாருக்கு போய் சேர வேண்டுமோ அது சேர்ந்து விடுகிறது. நல்ல படம் மக்கள் மத்தியில் சேர்ந்து விடுகிறது. எந்த ஒரு பிரச்னை என்றாலும், முதலில் மூடுவதும் தியேட்டர்; கடைசியாக திறப்பதும் தியேட்டரே. இதற்கு நடுவே பல போராட்டங்கள் உள்ளது. அதை தாண்டி இப்போது தான் வந்துள்ளோம். கண்டிப்பாக இனி நல்லதே நடக்கும்.
எதை அடிப்படையாக வைத்து கதையை தேர்ந்தெடுக்கிறீர்கள்?
மனிதர்களை வைத்தே. இயக்குனர்கள் நல்ல மனிதர்களா என்று பார்ப்பேன். அதன் பின் தான் கதை. புதியவர்கள் வந்தாலும் சரி.
விருதுகளை நோக்கிய உங்கள் பயணம்...
நடப்பது நடக்கும். அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. உடன்பிறப்பே படத்தில் ஜோதிகா, சசிகுமாருக்கு நிச்சயம் விருது கிடைக்கும். சொல்லப்போனால் விருதுகள் நம்மை மாற்றிவிடாது. நம் வேலை நல்ல படைப்புகளில் இருக்க வேண்டும்; அவ்வளளவு தான்.
- நமது நிருபர் -

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement